Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தல் சூழல்:லாபம் தரும் மிட் கேப் பங்குகள்!

தேர்தல் சூழல்:லாபம் தரும் மிட் கேப் பங்குகள்!
தொகுப்பு: சே.புகழரசி
 

ஜி.சொக்கலிங்கம், 
நிர்வாக இயக்குநர், 
ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்டு 
அட்வைஸரி பிரைவேட் லிமிடெட்

தற்போதுள்ள நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும் வரை இந்திய பங்குச் சந்தைகள் வலுவடைந்தே காணப்படும். குறிப்பாக, சென்செக்ஸ் 22500-23000 வரை செல்லலாம். தொழில்துறை தற்போது தேக்கநிலையில்தான் உள்ளது. அடிப்படைக் காரணிகள் வலுவாக இல்லாதபோதும்  ஆட்டோ, உள்கட்டமைப்பு, சிமென்ட், கேப்பிட்டல் கூட்ஸ் (இன்ஜினீயரிங்) போன்ற துறையின் பங்குகள் விலை உயர்ந்துள்ளது.  இதற்கு காரணம், தேர்தலுக்கு பின்னர் நிலையான ஆட்சி அமைந்து, புதிய அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தும் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தேர்தல்வரை பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தேர்தலுக்குப் பிறகு இரண்டு தேசிய கட்சிகளும் (பி.ஜே.பி, காங்கிரஸ்) குறைந்தபட்சம் 250 இடங்களைப் பெற்று, இதர கட்சிகள் மீதமுள்ள 293 இடங்களைப் பெற்றால், இந்தியப் பங்குச் சந்தைகள் பெரிய  நெருக்கடியைச் சந்திக்கும். இதனால் அந்நிய நிதி நிறுவனங்கள் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றாலும் ஆச்சர்யமில்லை. இருந்தாலும் இப்படி நடப்பதற்கான வாய்ப்பு குறைவே.

மேலும், கடந்த ஜனவரி 2008-ல் சென்செக்ஸ் 21000-ஐ தொட்டது. தொடர்ந்து சென்செக்ஸ் நான்காவது முறையாக 21000-ஐ தொட்டுள்ளது. ஆக, இந்த 21000 கண்டத்தைத் தாண்டிவிட்டோம் என்றே சொல்லலாம். தேர்தலுக்குப்பின் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்பதால் நம்பிக்கையைத் தாண்டி அடிப்படைக் காரணிகள் பலமடைய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகிறது.  

இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பொருளாதாரமும் உயருவதற்கு முன்பு முதலீடு செய்வதற்கு ஏற்ற பங்குகள் எவை என்பதைப் பார்ப்பதற்குமுன் வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

 அரசியல் ஸ்திரத்தன்மை இந்திய ரூபாயின் மதிப்பை வலுவடையச் செய்யும். அதேசமயம், அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டு,  ஃபெடரல் ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன் பத்திர அளவு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60-62 என்ற நிலையிலேயே இருக்கும்.

 கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.  நிலையான ஆட்சி அமைந்து, சரியான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும். இதற்கு குறைந்தபட்சம் இரண்டு காலாண்டுகளாவது ஆகும். எனவே, சிமென்ட், கேப்பிட்டல் கூட்ஸ் துறைகளின் ஜூன்-செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் ஏமாற்றம் இருக்கும்.

தற்போது பார்மா துறையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் எஃப்.டி.ஏ-விடம் ஏராளமான எச்சரிக்கைகள் வந்துவிட்டன. புதிய அரசாங்கம் இந்தப் பிரச்னையை சரி செய்யாவிட்டால், இந்தப் போக்கு தொடரவே செய்யும்.

கடந்த ஆறு வருடங்களில், சென்செக்ஸ் 21000-லிருந்து 8300 வரை சரிந்தது. பின்பு மீண்டும் 21000 தொட்டது. அந்தச் சமயத்தில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு 90 பில்லியன் டாலராக இருந்தது. இது லார்ஜ் கேப் பங்குகள் உயர வழிவகுத்தது. இந்த ஏற்றத்தில் பெரும்பாலான மிட் கேப் பங்குகள்   பங்குகொள்ளவில்லை. லார்ஜ் கேப் பங்குகளில் உள்கட்டமைப்புத் துறை, பார்மா, எஃப்.எம்.சி.ஜி மற்றும் ஐ.டி துறை பங்குகளின் மதிப்பீடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆக, எஃப்.ஐ.ஐ.கள் இனி அதிக மதிப்பீட்டில் இருக்கும் லார்ஜ் கேப் பங்குகளைத் தவிர்த்து தரமான மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்வார்கள். மேலும், சந்தை உயர ஆரம்பிக்கும்போது வரும் சில்லறை முதலீட்டாளர்களும் அதிகளவில் மிட்கேப் பங்குகளிலேயே முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.

 உணவு தானிய உற்பத்தி அதிக அளவு உயர்ந்துள்ளதும் உற்பத்தித் துறையில் இருக்கும் மந்தநிலையும் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இந்த நிலையில் முதலீட்டுக்கான பொருத்தமான ஸ்ட்ராடஜி எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்கிறேன்.

ஐ.டி துறை!

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியும்பட்சத்தில் ஐ.டி துறைக்கு சாதகமாகவே அமையும்.  முதலீட்டாளர்கள் இதை கருத்தில் கொண்டு ஐ.டி துறை பங்குகளில் முதலீடு செய்யலாம். குறிப்பாக, போலாரிஸ் ஃபைனான்ஷியல், மாஸ்டெக் பங்குகளில் கவனம் செலுத்தலாம். அதிக பணம் கையிருப்புள்ள இந்த கம்பெனிகளின் பி.இ 2015-ல் ஒரு பங்கு வருமானத்தின் அடிப்படையில் 7, 8 என்ற நிலையில் உள்ளது.

டெக்ஸ்டைல் துறை!  

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது டெக்ஸ்டைல் துறைக்குச்  சாதகமாகும். நமக்குப் போட்டியாக உள்ள சீனாவின் கரன்சி மதிப்பு  34 % கூடியுள்ளது. அதே சமயம், இந்திய ரூபாயின் மதிப்பு 38சரிவடைந்திருந்தது. மேலும், சீனாவில் பணியாளர் செலவு அதிகரிப்பதால், இந்தத் துறையை விட்டு விலகி வருகிறது. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, 17 % அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, முதலீட்டாளர்கள் நல்ல, தரமான டெக்ஸ்டைல் பங்குகளில் முதலீடு செய்யலாம். குறிப்பாக, சட்லெஜ் டெக்ஸ்டைல் மற்றும் ஆர்.எஸ்.டபிள்யூ.எம். லிமிடெட் (ராஜஸ்தான் ஸ்பின்னிங் - வீவிங் மில்ஸ்) போன்ற பங்குகளை வாங்கலாம். ஆர்.எஸ்.டபிள்யூ நிறுவனப் பங்கு கடந்த ஆண்டு ரூ.10-ஐ டிவிடெண்டாகக் கொடுத்தது. அதேசமயம், இதன் இபிஎஸ் ரூ.24 என்ற நிலையில் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் முதல் 9 மாதங்களில் இதன் இ.பி.எஸ் ரூ.33 என்ற நிலையில் உள்ளது. இதனால் டிவிடெண்ட்  லாபம் சற்று அதிகரிக்கலாம்.  

டிஃபென்ஸிவ் பங்கு!

 புதிய ஆட்சி அமைந்த முதல் ஆறு மாத காலத்தில் டிஃபென்ஸிவ் பங்குகள் நன்கு செயல்படும். எனவே, ஹெரிடேஜ் ஃபுட்பங்கில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். இது, கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆட்டோ துறை!

ஆட்டோ மொபைல் துறை மந்தநிலையில் இருந்தபோதிலும் கடந்த 2013-ம் நிதியாண்டு டிசம்பர் காலாண்டில் எல்.ஜி பாலகிருஷ்ணன் நிறுவனத்தின் லாபம் 100% வளர்ந்துள்ளது. பொருளாதாரம் சீரடையும்போது இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பு அதிகம். ஜே.கே டயர் நிறுவனப் பங்கிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். இதன் பி.இ விகிதம் 3-க்கு கீழே உள்ளது. ரீப்ளேஸ்மென்ட் மார்க்கெட்டில் நான்கில் மூன்று பங்களிப்பு வைத்துள்ளது இதன் கூடுதல் பலம். மெக்ஸிகோவில் உள்ள ஜே.கே டயர்ஸ் அதிகளவில் லாபம் கண்டுள்ளது.

வங்கிகள்!

தற்போது தனியார் துறை வங்கிகள் நல்லமுறையில் வளர்ச்சி அடைந்துள்ளன.  மேலும், ரிசர்வ் வங்கி புதிய வங்கிகளுக்கான உரிமங்களை விரைவில் வழங்க உள்ளது. நகரங்களில் வங்கிகள் அதிகமாக வளர்ந்துவிட்ட நிலை, உரிமம் பெறும் புதிய வங்கிகளுக்கு சவால்கள் அதிகமாகும். தனியார் துறையில் சிறப்பாகச் செயல்படும்  கரூர் வைஸ்யா பேங்க், சிட்டி யூனியன் பேங்க் போன்ற மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம். புதிய உரிமம் பெறுபவர்கள் இந்த வங்கிகளை வாங்க முனையலாம்.  

தேர்தல் முடிவுகள் நிலையான அரசியலுக்கும், பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கும் வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பில், மேற்கூறிய பங்குகளில் கரெக்ஷன் வரும்போதெல்லாம் சிறிதளவு முதலீடு செய்யலாம்.  

தொகுப்பு: சே.புகழரசி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close