Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுக்குமாடி கட்டட விபத்து: லாப வேட்கையா...குறைந்த விலை மோகமா?

டுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான தரத்தில் பலத்த சந்தேகத்தை எழுப்பியபடி சரிந்து விழுந்திருக்கிறது முகலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த பதினோரு அடுக்குமாடி குடியிருப்பு. இந்த விபத்துக்கான காரணங்கள் என்ன என்று கண்டுபிடிப்பதற்கான புலனாய்வுகளை தொடங்கியிருக்கிறது அரசு.

இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாத நிலையில் கட்டுமான பொருட்களின் மாதிரிகளை சேகரிப்பதில் தொடங்கி, கட்டட அனுமதி வாங்கியதில் விதிமீறல் உள்ளதா?, பில்டிங் அடித்தளம் சரியாக அமைக்கவில்லை என்பதுவரை பலவற்றை பேசத்தொடங்கி விட்டோம். அனுமதி வழங்கியதில் விதி மீறல் இல்லை என தெளிவுபடுத்தியிருக்கிறது சி.எம்.டி.ஏ. அந்த பகுதியில் முன்பு ஏரி இருந்த அடையாளத்தை மறைத்து அனுமதி வாங்கப்பட்டதா?, அல்லது ஏரி இருந்த இடத்தில் கட்டுமானம் மேற்கொள்ள தனிப்பட்ட வழிகாட்டுதல் அல்லது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா?  எந்த அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.
 
சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் வரை இந்த கம்பி வாங்கு அந்த கம்பி வாங்கு என நம்பிச்சொன்ன கம்பிகள் எல்லாம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறதா..?  விதவிதமாக விளம்பரங்களில் காட்டப்படும் உறுதியான சிமெண்டுகளின் தரம் இப்படி பொலபொலவென உதிர்ந்து போனதன் பின்னணி என்ன?

முகலிவாக்கம் விபத்து குறித்து கட்டுமான பொறியாளர்கள் பலரிடமும் பேசினோம்.

"கட்டுமான தரத்தில் நிலவிய குறைபாடுதான் இவ்வளவு பெரிய விபத்து உருவாகக் காரணம். ஏரி இருந்த இடத்தில் கட்டட அனுமதி கொடுத்தது முதல் தவறு. அப்படியான இடத்தில் கட்டுமானத்தை அமைப்பதில் சரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார்களா? என்பதில் தெளிவு இல்லை. அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசான வீடு மிகக்குறைந்த விலையில் வாங்கிவிட வேண்டும் என்கிற நமது மக்களின் ஆசையும் இதற்குள் ஒளிந்திருக்கிறது" என்கின்றனர். அதாவது கட்டுமான நிறுவனங்களின் லாபம், அரசுதுறைகளின் அலட்சியம், பொதுமக்களின் குறைந்த விலை மோகம் என எல்லாமே சேர்ந்து சில உயிர்களையும், பலத்த நம்பிக்கையையும் காவு வாங்கியிருக்கிறது.  

குறைந்த விலையில் நல்ல வீடு வாங்கிவிட்டால் உலகத்திலேயே நாம்தான் புத்திசாலி என்கிற மனநிலை நமமவர்களுக்கு வந்துவிட்டது. எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அதில் தங்களுக்கு ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதே மக்களின் ஆர்வமாக உள்ளது. இதன் காரணமாக தரத்தில் பல விஷயங்களில் கோட்டை விடுகின்றன விலை குறைப்பு கட்டுமான நிறுவனங்கள். எவ்வளவு விலை குறையுமோ அவ்வளவு காம்ப்ரமைஸ் என்று சொல்லலாம். இதற்காக விலை அதிகமாக வீடுகள் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கிறார்கள் என்றோ தரத்தில் சந்தேகம்கொள்ள வேண்டாம் என்பதாகவோ அர்த்தமில்லை.

குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் எனில் கட்டுமான தரத்தில்தான் கைவைக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இதன் எழுதப்படாத விதி. தரமில்லாத கம்பிகள், சிமென்ட், மணல் என்று பொதுவாய் சொல்வதைவிட, கட்டுமான தொழில்நுட்பத்தில் செய்யப்படும் சமரசங்கள்தான் அதிகம். எத்தனை அடுக்கு உயரத்தில் கட்டடம் எழும்பபோகிறது, எத்தனை வீடுகள் அமைய உள்ளது, மொத்த கட்டிடத்தின் எடை இவற்றைக் கொண்டு கட்டிடத்தின் தாங்கு தளம் அமைக்க வேண்டும். ஆனால் புதிதாக தொழிலில் இறங்குபவர்கள் இதை முறையாக கடைபிடிப்பதில்லை" என்கிறார்கள்.

தாங்கு தூண்களுக்கு இடையில் எவ்வளவு இடைவெளி, எத்தனை அடி ஆழத்தில் தாங்கு தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கம்பிகளின் தரம் என்ன? ரிங் கம்பிகளுக்கு இடையில் எவ்வளவு இடைவெளி விட்டிருக்கிறார்கள்? என்கிற பல்வேறு கட்டுமான விஷயங்களும் கவனிக்கப்பட வேண்டும். ஆனால், இவற்றை வீடு வாங்குபவர்கள் கவனிக்க முடியாது. பொறியாளர்கள் மட்டுமே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த இடங்கள்தான் கட்டுமான நிறுவனங்கள் சமரசம் செய்துகொள்ளும் இடங்கள். வெளியிலிருந்து பார்க்க தரமான டைல்ஸ், உள் அலங்காரம், வசதிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் என்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுமான நிறுவனங்கள் பளபளப்பாக விளம்பர அறிக்கைகள் கொடுப்பதைவிடவும், கட்டடம் அமைய உள்ள இடத்தின் மண் பரிசோதனை அறிக்கை, எத்தனை அடி ஆழத்தில் தாங்குதளம் நிறுவப்படுகிறது என்பதற்கான அறிக்கை, கான்கிரீட் சான்றிதழ் போன்றவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

விலை குறைவாக கிடைக்கிறது என்று ஆவலாகபோய் விழுவதைவிட, அந்த நிறுவனத்தின் முன் அனுபவம் என்ன, எத்தனை வருடமாக தொழிலில் இருக்கிறார்கள். இதற்கு முன் அவர்கள் கட்டியுள்ள அடுக்குமாடி கட்டங்கள் என்ன என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில், முகலிவாக்கத்தில் நடந்த விபத்துக்கு காரணம் அடுக்குமாடி நிறுவனங்களின் லாப வேட்கையாயா... விலை குறைவாக வாங்கிவிட வேண்டும் என்கிற மக்களின் மோகமா ?  என்ற காரண காரியங்கள் ஒருபக்கம் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இவை இரண்டுக்கும் இடையில் பலி கொடுக்கப்படிருக்கிறது பல விலை மதிப்பில்லாத உயிர்கள்!

-நீரை.மகேந்திரன்

படங்கள்: எம்.உசேன், ப.சரவணக்குமார், தே. தீட்ஷித்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close