Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபைனான்ஷியல் தவறுகள்... நீங்களும் செய்யாதீர்கள்!

 ஃபைனான்ஷியல் தவறுகள்... நீங்களும் செய்யாதீர்கள்!

ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமை நிதி ஆலோசகர், ஃபின்பிளான் சொல்யூஷன்ஸ்.
தொகுப்பு: செ.கார்த்திகேயன்
 

 நம் சொத்து நம்மிடமே!

எனது வாடிக்கையாளர் ஒருவரின் உயிலில் உள்ள சந்தேகங்களுக்குப் பதில் தேடி என்  வக்கீல் நண்பர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். என் வக்கீல் நண்பர் தன் அறையில்  வயது முதிர்ந்த ஒரு தம்பதியிடம் பேசிக் கொண்டிருந்தார். நீண்டநேரம் கழித்து, அந்தப் பெண்மணி அழுதபடி வெளியே வந்தார். உள்ளே போன நான், ஏன் அந்த அம்மா அழுகிறார் என்று நண்பரிடம் கேட்டேன்.  என் நண்பர் சொல்ல ஆரம்பித்தார்.

சொத்தை விற்று சொத்து வாங்கினார்கள்!

‘‘அந்தப் பெரியவர் அரசு வேலையி லிருந்து ஓய்வு பெற்றவர். தன் சேமிப்பில் நிலம் வாங்கி ஒரு சிறிய வீடு கட்டினார். தன் ஒரே மகனை பொறியியல் படிப்பு படிக்க வைத்தார். மகனும் நன்கு படித்து ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கைநிறையச் சம்பளம் வாங்கினார்.  மகனுக்கு திருமணமும் செய்துவைத்தார்கள். மருமகளுக்கும் அதே துறையில் வேலை என்பதால் நிறையவே சம்பாதித்தார்கள்.


வசதி அதிகரிக்க அதிகரிக்க பழைய வீடு போதவில்லை என்பதால், மூன்று படுக்கை அறை கொண்ட பெரிய ஃப்ளாட்டாக வாங்கலாம் என்று கூடி தீர்மானித்தார்கள். அலுவலகம், மார்க்கெட் போன்ற வசதிகள் அருகில் இருக்கும்படியே ஃப்ளாட் வாங்க நினைக்க, மகன், மருமகளுக்குக் கிடைக்கும் கடன் தொகையைவிட அந்த ஃப்ளாட் விலை அதிகம் இருக்க, இறுதியாக தன் வீட்டை விற்று அந்த ஃப்ளாட்டை வாங்கினார் அந்த பெரியவர்.

மகனுக்கு நடந்த அசம்பாவிதம்!

ஃப்ளாட் வாங்கிய சமயம் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க, வேலைக்காகச் சென்ற மகன் இரண்டு மாதங்களுக்குப்பின் சடலமாகவே திரும்பினார். அங்கு நடந்த கார் விபத்தில் மகனின் உயிர் பறிபோனது. 

தங்களின் மருமகளுக்கு இளம் வயது என்பதால், அவளுக்கு மறுமணமும் தாங்களே செய்துவைத்திருக்கிறார்கள். இதன்பிறகு மருமகளும், புதிய கணவரும் ஃப்ளாட்டில் குடியிருக்கத் தொடங்கினர். முதியவர்களுக்கு அந்த ஃப்ளாட்டில் முழு உரிமையோடு இருக்க முடியவில்லை. தனியாகச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. பென்ஷன் பணம் தவிர, வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில், வாடகை, மருத்துவச் செலவு, குடும்பச் செலவு என சமாளிக்க முடியாமல் இப்போது தவிக்கிறார்கள்’’ என்று வக்கீல் நண்பர் சொன்னபோது, அந்தப் பெரியவரை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன்.  இவர்களைப் போன்ற பெற்றோர்கள்தான் இன்று ஏராளம். நாம் பெற்ற பிள்ளைகளுக்கு நாம்தானே செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே தங்களது மொத்த வாழ்க்கையையும் அவர்களுக்காக அர்ப்பணித்துவிடுகிறார்கள்.

பிள்ளைகளும் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் காலம், சூழ்நிலை, நடக்கும் சம்பவங்கள் நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறான விளைவுகளைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. 
அதனால், நம் முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் நம் காலம் வரையில் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன்பிறகே அவை அனைத்தும் பெற்ற பிள்ளைகளுக்குப் போய்ச் சேருவதாக இருக்க வேண்டும். இந்த எண்ணம் முதலில் குடும்பத்தில் சிறிது வருத்தத்தைத் தந்தாலும், நீண்ட கால நோக்கில் அதுவே எல்லாருக்கும் சரியானதாக இருக்கும்.

பாடம் தந்த அனுபவம்!

தன் கணவருக்கு கடைசியில் கிடைத்த ரிட்டையர்மென்ட் பணத்தை மகனுக்கும் மகளுக்கும் தரச் சொல்லி அடம்பிடித்த சுசிலா, கடைசி நேரத்தில் தன் தவறை எப்படி திருத்திக்கொண்டார் என்பதைச் சொன்னார். ஒரு திருமணத்தில் தற்செயலாகச் சந்தித்தபோது அவர் அதைச் சொன்னார்.
‘‘என் வீட்டுக்காரர் செலவு விஷயத்தில் கெட்டி. அநாவசியமாக எப்போதும் செலவு செய்யமாட்டார். என்றாலும் குழந்தைகள் படிப்பு விஷயத்திலும் திருமணம் செய்துவைத்ததிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை.

குடும்பக் கடமைகள் ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பதற்கும் அவர் ரிட்டையர்டாவதற்கும் சரியாக இருந்தது. கடந்த ஆண்டு என் கணவரோடு வேலை பார்த்த சாமிநாதன் ரிட்டர்யர்டானபோது 20 லட்சம் ரூபாய் கிடைத்தது. என் கணவருக்கு ஏறக்குறைய இந்த அளவு பணம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன்.

போன மாதம் என் மகள் கார் வாங்க மூன்று லட்சம் வேண்டும் என்று கேட்டாள். என் மகன் புது ஃப்ளாட் வாங்க ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்றான். அப்பாவின் செட்டில்மென்ட் பணத்திலிருந்து வாங்கிக்கொடேன். நீ சொன்னா அப்பா கேப்பாரு' என்று இருவரும் என்னை நச்சரித்தார்கள். நானும் என் கணவரிடம் ஒன்றுக்கு இரண்டுமுறை சொன்னேன். பார்க்கலாம் என்று சொன்னவர்,  அதுபற்றி யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், சாமிநாதன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.


சாமிநாதனின் தவறான முடிவு!

வழக்கம்போல உற்சாகமாக இருக்கும் சாமிநாதன் அன்றைக்கு சோர்வாக இருந்தார். ‘‘எப்படி இருக்கீங்க, சார்?” என்று கேட்டேன். ‘‘ஏதோ இருக்கேன்” என்று சுவாரஸ்யம் இல்லாமல் பேசினார். சரி, நண்பர்கள் மனம்விட்டுப் பேசட்டும் என்று நான் காபி கொடுத்துவிட்டு, என் வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.


சிறிது நேரம் பேசிவிட்டு சாமிநாதன் போனபின், அவருக்கு என்ன பிரச்னை என்று என் கணவரிடம் கேட்டேன். தன் ரிட்டையர்மென்ட் பணத்தை மகளுக்கும், மகனுக்கும் பிரித்துத் தந்து விட்டாராம் சாமிநாதன். இதன்பிறகு மகன், மருமகளுடன் மனஸ்தாபம் ஏற்பட, அவர்கள் தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். வீட்டின் மாடியில் ஒரு சிறிய போர்ஷனில் சாமிநாதன் தன்  மனைவியுடன் இருக்க, கீழே வீட்டை வாடகைக்குவிட்டாலும், அந்த வருமானம் மனைவியின் மருந்துச் செலவுக்கே சரியாகப்போனது.  இப்போது வேறு வழியில்லாமல், ஓய்வு பெற்றபிறகும் வேலைக்குச் செல்கிறாராம்’’ என்று வருத்தத்தோடு சொன்னார் என் கணவர்.

எனக்குக் கிடைத்த தெளிவு!

இதைக் கேட்டபோது சட்டென ஒரு உண்மை புரிந்தது. வாழ்க்கையில் நமக்கும் இந்த நிலை ஏற்படலாம்  அல்லவா? அதனால்தான் என் கணவருக்குக் கிடைக்கும் ரிட்டையர்மென்ட் பணத்தை முதலில் நம் தேவைகளுக்கு வைத்துக்கொள்வோம்.  பிற்பாடு நம் குழந்தைகளுக்கு தரலாம் என முடிவெடுத்தேன். நமக்குப்பின், நம் பணம் நம் பிள்ளைகளுக்கே.  ஆனால், வாழும்காலம் வரையில் நம் கையில் பணம் இருந்தால், நாம் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழலாம் என்று உணர்ந்தேன். சரியான முடிவு எடுக்க உதவிய சாமிநாதனுக்கு மனத்தில் நன்றி சொன்னேன்” என்றார்.
இவர்களைப்போல இன்னும் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். கடைசி காலத்தில் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் நீங்கள் கவலையில்லாமல் இருக்க உங்களுக்கென நிச்சயம் பணம் தேவை. இதற்கு நிதித் திட்டமிடல் கட்டாயம் தேவை. இதுவரை அதுபற்றி சிந்திக்காதவர்கள் இனியாவது சிந்திக்க ஆரம்பியுங்களேன்!


(சம்பவங்களில் வரும் நபர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது!)
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.


 

வருமான வரிச் சலுகைக்காக ஆயுள் காப்பீடு எடுக்கலாமா என்கிற கேள்வியைக் கேட்டுதான் என்னை முதலில் சந்தித்தார் ரமேஷ். அப்போது அவர் மூன்று லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு மட்டுமே வைத்திருந்தார். ‘உங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு தேவை’ என்று சொன்னதும், அவ்வளவு ஏன் தேவை என்று கேட்டார். அதற்கான காரணத்தை விளக்கிச் சொன்னேன்.

‘டேர்ம் பாலிசி எடுத்தால், கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா?’ என்று கேட்டார். கிடைக்காது என்றேன். அப்ப அந்த பாலிசி வேஸ்ட் என்றார் ரமேஷ். ‘உங்களிடம் பைக் இருக்கா?’’ என்று கேட்டேன். ‘‘ஓ இருக்கே’’ என்றார். ‘அதுக்கு இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கீங்களா?’ என்று கேட்டேன். ‘‘ஒவ்வொரு வருஷமும் கட்டிட்டு வர்றேன்’’ என்றார். ‘‘எதுக்கு கட்டுறீங்க. வண்டி தொலைஞ்சாலோ அல்லது விபத்துல சிக்கி பாதிப்பு ஏற்பட்டாலோ இழப்பீடு கிடைக்கும்னுதானே இன்ஷூரன்ஸ் கட்டுறீங்க. என் வண்டிதான் தொலையவே இல்லையே. நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் தொடர்ந்து கட்டணும்னு என்றைக்காவது நெனைச்சிருக்கீங்களா? உங்க பைக் மாதிரி உங்க உடம்பையும் நெனைச்சுக்குங்க. அதுக்கு ஏதாவது ஆபத்து வந்தா, இழப்பீடு கிடைக்கணும். அதுவும் மிகக் குறைஞ்ச செலவுல’’ என்று விளக்கிச் சொன்னபின், டேர்ம் பாலிசி எடுக்க சம்மதித்தார்.

ரமேஷ் டேர்ம் பிளான் எடுத்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பிரீமியம் கட்டி வந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் ரமேஷ் கேன்சர் நோயால் இறந்தபின் க்ளைம் தொகையும் செட்டில் செய்து தந்தேன். இன்று ரமேஷ் இல்லை என்றாலும், அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close