Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த ஆறு மாதத்தில்... தங்கம் விலை இறங்குமா?

அடுத்த ஒரு வருடத்துக்குள் எனக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள் ளார்கள். இதற்காக தங்கம் வாங்க வேண்டி யுள்ளது. இப்போது வாங்கலாமா அல்லது ஆறுமாதம் கழித்து வாங்கலாமா? 

சுகுணா, மயிலாடுதுறை.

ஞானசேகர் தியாகராஜன், நிர்வாக இயக்குநர், காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனம். 

‘‘அடுத்த ஆறு மாதத்துக்கு தங்கத்தின் விலையில் அதிக மாற்றம் இருக்காது. அதாவது, பெரிய அளவில் ஏற்றமோ, இறக்கமோ இருக்காது. ஏனெனில், அமெரிக்கப் பொருளாதார டேட்டாக்கள் அனைத்தும் பாசிடிவ்வாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் டாலரின் மதிப்பு வலிமையாக உள்ளது. எனவே, தங்கம் வாங்கும் தேவை இருந்தால் வாங்கிக் கொள்ளவும்.”

?மெட் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மன்த்லி இன்வெஸ்ட்மென்ட் பிளான் திட்டத்தில் முதலீடு செய்துள்ளேன். வருடத்துக்கு 84 ஆயிரம் ரூபாய் வீதம் 10 வருடம் பிரீமியம் செலுத்தினால் 9 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறுகிறார்கள். முதல் வருட பிரீமியம் செலுத்திவிட்டேன். இதைத் தொடரலாமா? 

ஜெயக்குமார், தஞ்சாவூர்.

எஸ். தரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

‘’நீங்கள் எடுத்திருப்பது டிரடிஷனல் பாலிசி. இதன் மூலம் பெரிதாக வருமானம் கிடைக்காது. வருடத்துக்கு 84 ஆயிரம் ரூபாய் என அடுத்த 10 வருடத்துக்கு பிரீமியம் செலுத்தினால் மொத்தம் 
ரூ.8,40,000 கட்டியிருப்பீர்கள்். ஆக, பாலிசி மூலம் கிடைக்கும் வருமானம் என்பது 60,000 ரூபாய்தான். இது வங்கி கொடுக்கும் வட்டி விகிதத்தைவிட குறைவானது.

 முதலீட்டு நோக்கில் இந்த பாலிசியைத் தொடர்வது லாபகரமாக இருக்காது. இந்த பாலிசியை இப்போது சரண்டர் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. ஃப்ரீ லுக் -அப் பீரியர்டாக இருந்தால் பாலிசியை சரண்டர் செய்யலாம்.”

?ஓய்வுக்காலத்துக்காக மாதம்  2 ஆயிரம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இந்தத் தொகை அடுத்த 15 வருடங்கள் கழித்து தேவை. எனக்கேற்ற முதலீட்டு திட்டங்களைக் கூறவும்? 

 குமார், சென்னை. வி.டி.அரசு, நிதி ஆலோசகர்.

‘‘நீங்கள் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் அல்லது ரெலிகர் இன்வெஸ்கோ மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.’’

?தஞ்சாவூரில் 1700 ச.அடியில் மினி ஹால், என்னுடைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் முதல் மாடியில் உள்ளது. இந்த ஹாலை விழாக்களுக்கு வாடகை விடலாம் என யோசித்து வருகிறேன். இதற்காக என்னென்ன அனுமதி வாங்க வேண்டும்?

@ பாஸ்கரன், தஞ்சாவூர். சுரேஷ்பாபு, வழக்கறிஞர்.

‘‘20 நபர்களுக்கு அதிகமாகக் கூடும் பொது இடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும். விஷேசங்களுக்கு வாடகைக்கு விடும்போது பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்துவது முக்கியம்.   உங்கள் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

தவிர, தீ அணைப்பு, காவல் துறை, மருத்துவத் துறையிடம் தனித் தனியாக அனுமதி பெற வேண்டும். அடுத்தது தாசில்தாரிடம் பில்டிங்கின் புளூப்ரின்ட் கொடுத்து அனுமதி கேட்க வேண்டும். அவர் உங்களுடைய இடத்தை நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்குவார்.

இதற்கு கட்டணம் செலுத்த வேண்டி யிருக்கும். மேலும், வருடத்துக்கு ஒரு முறை இந்த அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும். அடுத்தது கட்டடத்தின் உறுதித்தன்மைக்கு தனியாக சான்றிதழ் வாங்க வேண்டும்.

அதேபோல, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக கழிவறை வசதி அமைத்து தரவேண்டும். மத்திய அரசின் சேல்ஸ் டாக்ஸ் மற்றும் மாநில அரசின் டின் (Tin) நம்பர் வாங்க வேண்டும். கட்டடத்துக்கு கார்ப்பரேஷன் வரி, தண்ணீர் வரி செலுத்தி இருக்க வேண்டும். இதையெல்லாம் சரியாக செய்தாலே போதும்.”


?நான் ஐ.டி ஊழியர். கடந்த 2010-ம் ஆண்டு வரை என் பான் எண்ணில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தேன். அதன்பிறகு அந்த பான் கார்டில் உள்ள பெயர் மாறியுள்ளது. அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படும் படிவம் 16-லும் வேறு பெயர் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது எப்படி?

சுரேஷ், பெங்களூரு.வருமான வரி தரப்பு பதில்:

‘‘கடந்த ஒரு சில வருடங்களுக்குமுன் வரை ஒரே நபர் இரண்டு, மூன்று பான் கார்டுகள் பெறக்கூடிய வகையில் இருந்தது. அதாவது, ஒருவர் ஒருமுறை பான் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, மீண்டும் வேறு ஏதாவது காரணத்துக்காக மீண்டும் பான் கார்டுக்கு விண்ணப்பித்திருப்பார். இதையெல்லாம் சரிசெய்யும் பணிகள் சமீபத்தில் நடந்தது.

 அந்தச் சமயத்தில் ஒரே பெயர், முகவரியில் இரண்டு, மூன்று பான் கார்டு வைத்திருப்பவர்களின் தேவையில்லா பான் எண்கள் ரத்து செய்யப்பட்டன. அந்தச் சமயத்தில் உங்களுடைய பான் எண்ணும் ரத்தாகி அந்த எண் வேறு ஒருவருக்கு தரப்பட்டிருக்கலாம். நீங்கள் உங்கள் வருமான வரி சரிபார்க்கும் அதிகாரியிடம் இதுகுறித்து தெரிவிக்கலாம்.

 அல்லது வருமான வரித் துறை அலுவலகத்தில் உள்ள கணினி பிரிவில், மக்கள் தொலைதொடர்பு அதிகாரியிடம் தெரிவித்து, இந்தப் பிரச்னையை சரி செய்துகொள்ளலாம்.”


?பத்து வருடங்களுக்கு முன்பு வரி சேமிப்புக்காக சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தேன். நான் முகவரி மாறி வெளியூருக்குச் சென்றுவிட்டதால் அது குறித்த எந்தத் தகவலும் இல்லை. என் பெயர் மற்றும் செல்போன் எண்ணை வைத்து அந்த முதலீடுகள் குறித்து தெரிந்துகொள்ள முடியுமா?

ஜெயலட்சுமி சாய்ராம்.


ஏ.முருகன், மண்டல மேலாளர், புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்மென்ட் சென்டர்.
‘‘நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளின் தற்போதைய நிலையை செல்போன் எண்ணை வைத்து தெரிந்துகொள்ள முடியும்.  நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் நேரில் சென்று அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் மூலமாக இதை தெரிந்துகொள்ள முடியும்.

அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது, விண்ணப்பத்தில் நீங்கள் கொடுத்துள்ள  செல்போன் எண்ணை வைத்து சரிபார்க்கலாம். அல்லது அந்த நேரத்தில் கொடுத்த முகவரியின் அடிப்படையிலும் இதைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வழிகளில் தீர்வு கிடைக்கவில்லை எனில், உங்களின் பிறந்த தேதியை வைத்தும் முதலீடு குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.”

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close