Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விலையேற்றத்திற்கு கார்ப்பரேட் கலாச்சாரம் காரணமா?

 விலையேற்றத்திற்கு கார்ப்பரேட் கலாச்சாரம் காரணமா?

 
சமீபத்தில் சென்னை திருவான்மியூர் பகுதியில் இரவு ஷேர் ஆட்டோவிற்காக ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார். ஆட்டோவும் வந்தது. ஆனால் அவர் கட்டணம் விசாரித்துவிட்டு ஏற மறுத்துவிட்டார். காரணம் உள்ளே இரவு நேர ஐடி பணிக்கு செல்ல இருந்த நான்கு பேர் தான்! அவரிடம் ஏன் நீங்கள் ஏறவில்லை என்றதற்கு அவர் தந்த பதில் வித்தியாசமானது. 
 
''10 வருஷத்துக்கு முன்னாடி ஆட்டோக்காரர்கள் கூட இந்த விலை கேட்க மாட்டார்கள். இந்த ஷேர் ஆட்டோகாரங்களும் வந்த புதுசுல அதிகபட்சம் திருவான்ப்யூர்ல இருந்து சோலிங்கநல்லூர் போக 10 ரூபாய் தான் வாங்கிகிட்டு இருந்தாங்க. இப்ப இங்க பெரிய பெரிய கம்பெனியெல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. இங்க வேல பாகுற பசங்க எவ்ளோ கேட்டாலும் கொடுத்து போற அளவுக்கு சம்பாதிக்கிறதால எங்களுக்கும் அதே ரேட் சொல்லுறாங்க. அதிகபட்சமா 30ல இருந்து 40 ரூபாய் வரைக்கும் கேட்குறாங்க. அதுனால தான் பஸ் வரும் போகலாம்னு ஆட்டோவ விட்டுட்டேன்" என்றார்.
 
இவர் படிப்பறிவில்லாதவர் தான்! ஆனால் இவர் சொன்ன விஷயத்திற்கு பின்னால் ஒரு பொருளாதார சமநிலையின்மை ஒளிந்திருக்கிறது. ஐடி வேலை வந்த பிறகு தான் விலையேறியது என்பதை இவர் மட்டும் சொல்லவில்லை. இதே போன்று பல வருடங்களுக்கு முன் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஐடி துறை வலுவடைய துவங்கிய காலம் அப்போது திடீரென ஐடி நிறுவனங்கள் அள்ளி வழங்கிய வேலைவாய்ப்பால் அதில் வேலை செய்பவர்கள் சொந்தமாக அல்லது வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்க தொடங்கினர் அப்போது ரியல் எஸ்டேட் விலை சரமாரியாக ஏறியது. அதுவரை வெறும் சிறிய அளவு தொகை கொடுத்து வாங்கும் ஊருக்கு வெளியே உள்ள இடம் கூட லட்ச கணக்கில் விலையேறியது. இதற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்துள்ளனர்.
 
 
ஐடி துரையினரின் வருகைக்கு பின் தான் இந்தியாவில் துரித உணவுகள் கலாச்சாரம் வேகமாக வளரத் தொடங்கியது. பேரம் பேசி வாங்கும் பழக்கம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டதும், அப்படி பேரம் பேசுபவர்களை கஞ்சன் என்ற மனநிலையில் பார்க்க வைத்ததும் இவர்கள் தான். குளிர்பான பாட்டில்களில் எழுதப்பட்டிருக்கும் விலைக்கு தான் வாங்க வேண்டும் என நிறுவனங்கள் அறிவிப்பு விடுத்தும் அதனைவிட இரண்டு ரூபாய் அதிகம் விலை வைத்து விற்றால் சரி என ஒத்துக்கொள்ளும் இவர்களால் ஒழுங்கான விலைக்கு பொருளை கேட்கும் சாதாரண மக்களின் நிலை அவதிக்குள்ளாகிறது.
 
 
இந்த கார்ப்பரேட் பணியாளர்கள் உணமையிலேயே இந்த அளவுக்கு சம்பாதிக்கிறார்களா? என்றால் இல்லை என்பது தான் பதில் 2008ம் ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வீழ்ந்ததிலிருந்து இவர்களுக்கான சம்பளம் முன்பு இருந்தது போன்று இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் முன்பு அதிகம் சம்பாதித்தவர்கள் சேமிப்பு என்ற பழக்கத்தை கொண்டிருந்தனர். ஆனால், இன்று வேலைக்கு செல்லும் இளைஞர்கள் சென்ற ஒரு ஆண்டில் பைக் கடன் இ.எம்.ஐ, அடுத்த 4 வருடங்களில் கார் கடன் இஎம்ஐ என பொருட்களுக்கு இஎம்ஐ கட்டிக்கொண்டும் வாங்குகிற பணத்தை சேமிக்காமல் பெரும்பகுதியை செலவழிக்கின்றனர் என்பதும் தான் உண்மை என்கின்றனர். 
 
இது குறித்து சென்னையில் ஐடி துறையில் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டபோது ''எனது சொந்த ஊர் மதுரை, இங்கு உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணி புரிகிறேன். இங்கு எங்களை போன்ற கார்ப்பரேட் பணியாளர்கள் எவ்வளவு இருக்கிறோமோ? அதே அளவிற்கு பொதுமக்களும் இருக்கின்றனர். அவர்கள் சாதாரணமாக் குறைந்த விலைக்கு வாங்கும் பொருட்கள் நாங்கள் எந்தவிலை கொடுத்தாலும் வாங்குவோம் என்பதற்காக அதிக விலைக்கு விற்கின்றனர். இது அவர்களுக்கு பாதகமாக அமைகிறது. 15 ரூபாய் தோசையை கூட 40 ரூபாய்க்கு வாங்கும் நிலை உருவாகிறது. நாங்கள் பேரம் பேசினாலும். அருகில் இருப்பவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பதால் பல சமயங்களில் அதனை தவிர்த்து விடுகிறோம்" என்றார்.
 
 
கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கவனத்திற்கு:
 
1.உங்கள் அலுவலகத்தில் ஏசி ரூமில் கூட்டம் போட்டு நீங்கள் பேசும் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி(சிஎஸ்ஆர்) என்பதை கொஞ்சம் உங்களை சுற்றியுள்ள மனிதர்களிடத்திலும் காட்டுங்கள்.
 
2.நீங்கள் ஒரு மாதத்திற்கு அதிகம் கொடுக்கும் தொகை என்னவென்று பாருங்கள். அது உங்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது. அதே அளவு உங்களால் பணம் கொடுக்கும் எழை மக்களுக்கு அது எவ்வளவு பெரிய தொகை என்பதையெல்லாம் சிந்தித்து பாருங்கள்.
 
3.பேரம் பேசுவது என்பது நீங்கள் படித்த மேலாண்மை தத்துவம் அது தான் ஒரு சிறந்த நிர்வாகியையும், முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கும். அதனால் பேரம் பேசுங்கள் உங்கள் செலவை மற்றவர் தீர்மானிக்கும் நிலையை உருவாக்காதீர்கள்.
 
4.உங்கள் வருமானம் என்பது இப்போது உங்களுக்கு அதிகமாக தெரிந்தாலும் உங்களது சேமிப்பு தன்மை மிகவும் குறைவாக உள்ளது. இப்போது உங்கள் பெற்றோர் சேர்த்து வைத்ததால் தான் நீங்கள் இவ்வளவு சம்பாதிக்கு முடிந்தது. நீங்கள் சேமிக்கவில்லை என்றால் உங்கள் குழந்தையின் நிலை என்ன என்பதை உணருங்கள்.
 
இது ஏதோ சென்னையில் நடந்த ஒரு பிரச்னை மீதான கட்டுரை அல்ல! தமிழகத்தின் பல பகுதிகளில் இதே போன்ற பிரச்னை உள்ளது. சில இடங்களில் இது தனியார் நிறுவனங்களால், புதிய கல்லூரிகள், பல்கலைகழகங்களின் வருகையால் என பல காரணங்கள் காரணமாகின்றன. அங்கு உள்ள மக்களும் அதனால் பாதிக்கப்படுகின்றனர் இந்த பாதிப்புக்கு காரணமானவர்கள் அதிகம் செலவழிக்காமல் பேரம் பேசி சரியான விலை கொடுத்து வாங்குவதை அனைவரும் தொடங்கினால் தான் பொருளாதார சமநிலை உருவாகும்!!
 
 
ச.ஸ்ரீராம்
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close