Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தக பார்வை - `தலித் மில்லியனர்ஸ் - 15 இன்ஸ்பைரிங் ஸ்டோரீஸ்'

 

புத்தக பார்வை - `தலித் மில்லியனர்ஸ் - 15 இன்ஸ்பைரிங் ஸ்டோரீஸ்'

 
புத்தகத்தின் பெயர்: தலித் மில்லியனர்ஸ் 
ஆசிரியர்: மிலிண்ட் காண்டேகர்
ISBN: 978 0 143 42082 8
விலை: ரூ 250
வெளியீடு: போர்ட்ஃபோலியோ (பெங்குவின்)
 
 
சாதி பேதமின்றி `ஒருவருக்கு ஒரு ஓட்டு’ என்று அரசியலில் சமத்துவம் கிடைத்தாலும் சமூக, பொருளாதார ரீதியில் தலித்துகள் இந்தியாவின் பல இடங்களில் ஒதுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறார்கள். இதைத் தகர்த்தெறிந்து தங்களாலும் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை அமைத்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதற்குச் சான்றாக 15 தலித் தொழிலதிபர்கள் பற்றிய புத்தகம் தான் `தலித் மில்லியனர்ஸ் - 15 இன்ஸ்பைரிங் ஸ்டோரீஸ்' (Dalit Millionaires - 15 Inspiring Stories). மிலிண்ட் காண்டேகர் இந்தியில் எழுதிய இந்தப் புத்தகத்தை எளிமையான ஆங்கிலத்தில், நன்றாகப் புரியும் வகையில் மொழி பெயர்த்திருப்பவர்கள் வந்தனா ஆர்.சிங், ரீனு தல்வார்.
 
உடைந்துபோன தனது பேனாவுக்கு நாலணா `நிப்’ கூட வாங்க வழியில்லாது இருந்த அசோ காக்டே, குழந்தைத் திருமணத்தால் பல இன்னல்களைச் சந்தித்து இன்றைக்கு பல கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாகியிருக்கும் பத்மஸ்ரீ கல்பனா சரோஜ், 120 சதுர அடி வீட்டில் குடியிருந்து இன்றைக்கு பல ஏக்கர்கள் கொண்ட நிலத்துக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கும் சஞ்சர் ஷிர்சாகர், ஏழை தாய் இட்லி விற்ற பணத்தில் `பிட்ஸ் பிலானியிலும், ஐஐஎம் அஹமதாபாத்திலும்’ படித்து இன்றைக்கு `ஃபுட்கிங்’ நிறுவனத்தின் அதிபராக இருக்கும் சரத்பாபு... இப்படி இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் பிறந்திருந்தாலும் இவர்களுக்கு இடையே உள்ள ஒரு பொதுவான விஷயம், ''என்னால் முடியும்” என்கிற வைராக்கியம்தான்.
 
வேலைக்குச் செல்பவர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து ஐஐடி, ரூர்க்கியில் படித்துவிட்டு, இன்றைக்கு `கோட்டா டூடோரியல்ஸ்’-ன் சேர்மனாக இருக்கும் ஹர்ஷ் பாஸ்கர், “முப்பது நாட்கள் வேலை பார்த்தபின் `டான்’ என்று சொல்லி வைத்தாற்போல சம்பளம் வருவது உறுதி. ஆனால், தொழில் நடத்துபவர்கள் அதை எதிர்பார்க்க முடியாது. இதனால்தான் பலர் சொந்தத் தொழில் செய்யத் தயங்குகிறார்கள். ஆனால், அதிக ரிஸ்க் எடுக்கும்பட்சத்தில், அதிகப் பலன் உறுதி என்பதை மறுக்க முடியாது'' என்கிறார்.
 
இவரது பயிற்சிக் கல்லூரிகள் மூலம் ஏறக்குறைய 30,000 மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கும் மேலான மாணவர்கள் இந்தியாவின் ஏதாவதொரு ஐஐடியில் வாய்ப்பு கிடைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். படித்து முடித்தவுடன் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த இவர், அது சலிப்பு தட்ட ஆக்ராவில் தனது பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்து 10 ஆண்டுகளில் ரூ.17 கோடி சம்பாதித்திருக்கிறார்.
 
“சாதி என்பது தினமும் எனக்குச் சவால்தான், ஆனால், எதிரிகள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது கவனம் முழுவதும் என்னுடைய மாணவர்கள் மேல்தான்'' என்று சொல்லும் அவர், தனது வெற்றிக்குக் காரணங்களாகக் கூறுவது: “நான் என்னை நம்பியது, எனது கடின உழைப்பு, எனது நேர்மை’.
 
நாலணாவுக்கு நிப் மாற்ற வழியில்லாது இருந்த `தாஸ் ஆஃப்ஷோர் இன்ஜினீயரிங் பிரைவேட் லிட்’ அசோ காக்டே இன்றைக்குப் பயன்படுத்துவது ரூ.80.000 மதிப்புள்ள மாண்ட்ப்ளாங் (Montblanc) பேனா. இவருடைய நிறுவனத்தின் வருமானம் கிட்டத்தட்ட ரூ.140 கோடி. மஹாராஷ்டிராவில் பேட் என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் இவர். இவருடைய அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் சாப்பிட்டதைவிட பட்டினியால் வாடிய நாட்களே அதிகம். கிராமத்திலிருந்து, பம்பாயிலிருந்த தனது சகோதரனை நம்பிவந்த இவர் `மஸ்காவ்ன் டாக்’ கில் வெல்டராகப் பணிபுரிய ஆரம்பித்தார். அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கேப்டன் எஸ்.வி. நாயர் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் பாதியில் விட்டுவிட்ட ஒரு புராஜெக்ட்டை இவரிடம் செய்யச்சொல்லிக் கொடுக்க, அதை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.

  இன்றைக்கு `பாம்பே ஹை’ யில் எண்ணெய் எடுக்குமிடங்களில் பயன்படுத்தப்படும் `பிளாட்பாரம்’களும், எண்ணெய் செல்லக்கூடிய பைப்லைன்களும் இவருடைய நிறுவனம் தயாரித்ததுதான். ஒரு காலத்தில் அசோ காக்டே என்று எழுதினால் சாதி கருதி தனக்கு பல நிறுவனங்கள் கான்ட்ராக்ட் கொடுக்கவில்லை என்பதால் தென்னிந்தியர்கள் போல `K.அசோக்’ என தனது பெயரை எழுத ஆரம்பித்தார். இவருக்கு மானசீகமாக உத்வேகம் அளித்தவர்கள் ஜே ஆர் டி டாடா, மதர் தெரசா (1994-ம் ஆண்டு இவர் மதர் தெரசாவை கொல்கத்தாவில் சந்தித்திருக்கிறார்), பண்டார்பூரைச் சேர்ந்த வித்தல் என்கிற குரு. இவர் தனது வெற்றிக்கு: `எடுத்த காரியத்தை எந்தவொரு நிலையிலும் கைவிடாமல் இருந்ததுதான்” என்கிறார்.                                                  

குழந்தைத் திருமணத்தாலும், வறுமையாலும் வாடிய கல்பனா, பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கமானி டியூப்ஸ் (மும்பை) என்கிற நிறுவனத்தை, அதை நம்பியிருந்த 566 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் பொருட்டு 2000-மாவது ஆண்டில் துணிந்து அந்த நிறுவனத்தைப் பி.ஐ.எஃப்.ஆர். (Board of Industrial and Financial Reconstruction) அமைப்பிடமிருந்து எடுத்து திறம்பட நடத்தி வெற்றியும் கண்டவர். அதன்பின் ரியல் எஸ்டேட் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். பிறகு, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா என தனது இறக்கைகளை விரிக்க ஆரம்பித்தார். இவருடைய துணிவையும், வளர்ச்சியையும் பாராட்டி 2013-ம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
 
''நீங்கள் உயரத்துக்குச் செல்ல வேண்டுமென்று ஓர் இலக்கு நிர்ணயித்த பிறகு பல சோதனைகள் வரும். அதனால் மனம் உடைந்துவிடாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். எடுத்த காரியத்தை இடையில் நான் கைவிடுவதில்லை” என்று தனது வெற்றிக்கான காரணத்தைக் கூறும் கல்பனாவின் அடுத்த இலக்கு, இவர் பெயரில் வானத்தில் ஒரு செயற்கைக்கோளை ஏவுவது'' என்கிறார்.
 
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு வெற்றிக்கதை தமிழகத்தைச் சேர்ந்த சரத்பாபு. இவருடைய அம்மா காலையில் இட்லி விற்றும், மதிய உணவு மையத்தில் சமையல்காரராக வேலை பார்த்தும் மாதம் ரூ.900 சம்பாதித்தார். ஆனால், ஐந்து பேர்கள் கொண்ட குடும்பத்துக்கு அது போதவில்லை. இருப்பினும் நன்றாகப் படிக்க வேண்டுமென்கிற உறுதியில் இருந்த சரத்பாபு, தனது பொறியியல் மற்றும் மேலாண்மைப் படிப்புகளை இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பல இன்னல்களுக்கு இடையே படித்து முடிக்கவும், பல வேலைகள் அவரைத் தேடி வந்தன. ஆனால், அதையெல்லாம் மறுத்துவிட்டு, அவர் ஃபுட்கிங் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து கேட்டரிங் தொழில் செய்ய ஆரம்பித்தார்.
 
இவரது நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தவர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. இன்றைக்கு சென்னை, கோயம்புத்தூரில் இவரது கேட்டரிங் தொழில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இவர் `ஹங்கர் ஃப்ரீ’ என்கிற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இவருடைய வெற்றி மந்திரம்: கவனமும், தோல்வியைக் கண்டு பயப்படாததும் ஆகும்.
 
ஐபிசிஎல் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியபோது ஐபிசிஎல் பொருட்களை விநியோகித்து வந்த தலித்தான ரத்திலால் மக்வானாவின் விநியோக உரிமை ரத்து செய்யப்பட்டது. இதற்குக் காரணம், தான் சார்ந்திருக்கும் சாதிதான் என்பது மக்வானாவின் கருத்து.
 
இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களுக்கு சமூக, பொருளாதார ரீதியில் தொழில் ஆரம்பிக்க வங்கிக் கடனும், கான்ட்ராக்ட்களும்கூட சாதியின் பேரில் மறுக்கப்பட்டிருக்கின்றன, பல சோதனைகளைக் கடந்துவந்து தங்கள் முத்திரையைத் தொழில் துறையில் பதித்திருக்கின்றனர். அனைத்து தலித் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்களை ஒன்றிணைக்கும் விதமாக “தலித் இண்டியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ (DICCI)” ஆரம்பித்து வெற்றிகரமாகச் செயலாற்றி வருகிறார்கள். இன்றைக்கு இவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் வருமானம் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி. இவர்கள் அரசுக்கு ரூ.1,700 கோடி வரி செலுத்துகிறார்கள்.
 
வைராக்கியத்துடன் கடின உழைப்பும், நேர்மையும், கவனமும் இருந்தால் நினைத்ததை `சாதி’ப்பதற்கு ‘சாதி’ ஒரு தடையில்லை என்பது இந்த 15 கோடீஸ்வரர்கள் ஓர் ஊக்க சக்தி! சாதிக்க நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.
 
- சித்தார்த்தன் சுந்தரம்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close