Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்தும் செய்யும் பத்தாத பணம்!

நாணயம் விகடன் வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க, சிலஆண்டுகளுக்கு முன்பு  நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த  பத்தும் செய்யும் பத்தாத பணம்  இன்று முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று வெளியாகும்.

ஷேருச்சாமி...
- எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும் தொண்டையில் வழுக்குகிற வெண்ணெய் மாதிரி எளிமையாகச் சொல்லும் ஷேருச்சாமியை நாணயம் விகடன் வாசகர்கள் மறந்திருக்க முடியாது... செக்டார் பற்றி அவர் சொன்ன விதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு மயங்கி, அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க நம்மிடம் அனுமதி கேட்டவர்கள் பலர்!

அப்படிப்பட்ட ஷேருச்சாமியை ரெண்டு மூணு மாசமா பார்க்கவே முடியலை. நேர்ல போனாலும், போன் போட்டாலும் ஆள் அகப்படவே இல்லை... இருந்தாலும், நமது விடாமுயற்சியால் கடைசியாக ஒருநாள் வாக்கிங் போனபோது வகையாகச் சிக்கிக்கொண்டார்...

''என்ன சாமி, ஆளு கண்ணுலயே பட மாட்டேங்கிறீங்க?'' என்றோம்.

''மார்க்கெட் நல்லா போகுதில்ல? இப்பதானே நாலு காசு பாக்க முடியும்!''- கண் சிமிட்டிச் சிரித்த சாமி, ''ஒவ்வொரு மார்க்கெட்டுலேயும் பணம் ஒரு குறிப்பிட்ட சீசன்லதான் கிடைக்கும். அப்போ சம்பாதிச்சாதான் உண்டு. அந்த நேரத்துல சம்பாதிக்கிறத விட்டுட்டு உனக்கு இன்டர்வியூவும் ஐடியாவும் கொடுத்துக்கிட்டு இருந்தா நான் பொருளாதாராச்சாமியிலிருந்து பொருளில்லாத சாமியாயிடுவேன். சரி, உங்களுக்கு இப்போ என்ன வேணும் சொல்லுங்க'' என்றார்.

பணம் பணமுன்னு இப்படி இந்த சாமி பொழுதுக்கும் அலையுதே, இதுகிட்ட பணத்தைப் பற்றியே கேட்போம் என்று நினைத்து, ''சாமி பணம் பணமுன்னு பறக்குறீங்களே, பணத்தைப் பத்தி நல்லா புரிஞ்சிக்கிடற மாதிரி விளக்கமா சொல்லுங்களேன்'' என்றோம்.

''நான் என் மூளையைக் கசக்கித்தானே சம்பாதிக் கேன். உண்டியலா வச்சிருக்கேன்?'' என்று பாய்ந்த சாமி, சட்டென்று கூலாகி, ''அடேய் உலகத்துல பணம் தானே எல்லாம்'' என்றார்!

''அதெப்படி சாமி? உலகத்துல பணத்தையும் தாண்டி பலவிஷயங்கள் இருக்கத்தானே செய்யுது?''

''அப்படியா! 'எனக்கு வேலை போயிடுச்சு; வேற வேலை தேடிக்கிட்டு இருக்கேன்... செலவுக்கு கொஞ்சம் பணம் வேணு'மின்னு உன்னோட பெஸ்ட்

ஃபிரெண்டுகிட்ட போய்க் கேட்டுப்பாரு, அப்புறம் தெரிஞ்சுக்குவே பணம்னா என்னன்னு... சரி, இவ்வளவு பேசுறியே! பணத்துக்கு லேட்டஸ்ட் அர்த்தம் என்னன்னு சொல்லு?'' என்று கேள்வியைப் போட்டார் சாமி.

ரெண்டு பேரும் பேய்முழி முழித்தோம். பணம் பத்தி எதுவும் தெரியலையேன்னுதான் இவரைப் பார்க்க வந்திருக்கோம்... இந்த அழகுல லேட்டஸ்ட் அர்த்தம் என்னனு கேக்கிறாரே!

ரொம்ப யோசித்த பின் செல், ''பணமுங்கிறது மதிப்பு சம்பந்தமானது. மதிப்பை பதிஞ்சு வைக்கிற விஷயமுன்னு கூடச் சொல்லலாம்'' என்றான் வேதாந்தி மாதிரி.

''அடேய், நீ சொல்றது பணத்தோட பயன்பாடு. நான் கேட்டது பணத்தோட குணாதிசியம். நல்லா கேட்டுக்க, பணத்துக்கு லேட்டஸ்ட் அர்த்தம் என்ன தெரியுமா?''

''நீங்களே சொல்லுங்க சாமி...

''நம்பிக்கை!''

''அது எப்படி சாமி?''

''அடேய், பணத்தை கையில தொடாமலேயே ஒருத்தர்கிட்ட இருந்து ஒருத்தருக்கு பாஸாகிக்கிட்டிருக்கிற காலமில்லையா இது! உன்னோட சம்பளத்தை உன் கையிலயா கொடுக்கிறாங்க? பேங்க்ல உன் அக்கவுன்ட்ல போட்டுடறாங்க. பேங்குக்கு பணம் வந்தாச்சுனு தெரிஞ்சதும் கையில இருக்கிற கார்டைத் தேய்ச்சு பெட்ரோல் போடுற, மளிகைச் சாமான் வாங்குற. கடைக்காரங்களும் உன் அக்கவுன்ட்ல பணம் இருக்குங்கிற

நம்பிக்கையில உனக்கு பொருளைக் கொடுக்கிறான். பணம் ஒரு எலெக்ட் ரானிக் டேட்டாவா மாறிக்கிட்டு வருது. ஆக மொத்தம் பணத்தை கண்ணால் பார்க்காம, கையால் தொடாம வெறும் நம்பிக்கையை வச்சுதானே இவ்வளவும் நடக்குது. அதைத்தான் பணம் நம்பிக்கையா மாறிட்டு வருதுன்னு சொன்னேன்! இன்றைக்கு இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் ஒருத்தன் அவன் சம்பாதிக்கிறதுல 50 பர்சென்ட் பணத்தை கையில தொடரதே இல்லை தெரியுமா?''

''ஆச்சரியந்தான்... நாம எங்கேயோ போய்க்கிட்டு இருக்கோம்... சரி சாமி, பணம் சம்பாதிக்கிறதுக்கு என்னென்ன குணாதிசியம் வேணுமுன்னு சொல்ல முடியுமா?'' என்று ஆர்வத்துடன் அடுத்த கேள்வியைப் போட்டான் செல்.

''நல்லாதான்டா கேள்வியெல்லாம் கேக்குறீங்க!

என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிக்கிறதுக்குன்னு ஒரு குறிப்பிட்ட, சரியான குணாதிசியமே கிடையாது! உலகத்துல புத்திசாலிகிட்டேயும் பணமிருக்கு, முட்டாள்கிட்டேயும் இருக்கு! சுறுசுறுப்பானவன்கிட்டயும் இருக்கு, சோம்பேறிகிட்டேயும் இருக்கு! ரிஸ்க் எடுக்கிறவன்கிட்டேயும் இருக்கு, ரிஸ்க்கே எடுக்காதவன்கிட்டேயும் இருக்கு! மகா கஞ்சன்கிட்டேயும் இருக்கு, மகா செலவாளிகிட்டேயும் இருக்கு!'' என்று அடுக்கினார் சாமி.

''பெரிய தொழிலதிபர்களோட வாழ்க்கை வரலாறு, ஜீரோ-டு-ஹீரோ மாதிரியான தொடர்கள் இதையெல்லாம் படிச்சா, அவங்ககிட்ட இருந்த உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மாதிரியான குணங்கள்தானே அவங்களுக்கு பணம் சம்பாதிச்சுக் கொடுத்ததா தோணுது'' என்றான் செல்.

''அடேய் ஜெயிச்சவனைப் பத்திதானே வெளியில தெரியுது! ஐந்நூறு பேரு முயற்சி பண்ணினா ஒருத்தன் ஜெயிச்சிருப்பான். மீதி 499 பேர்கிட்ட போய்க் கேட்டுப்பாரு... அவங்கள்ள பல பேர்கள்கிட்டயும் ஜெயிச்சவன்கிட்ட இருக்கிற எல்லா குணாதிசியமும் இருக்கும். ஆனாலும் ஏன் தோற்றுப் போனாங்க? இதுல இருந்து என்ன தெரியுது?''

எதையாவது சொல்லப் போய் சாமி டென்ஷனாயிட்டா என்ன பண்றதுன்னு அமைதி காத்தோம்...

''சரியான நேரத்தில் சரியான பிஸினஸை வெற்றிகரமா செஞ்சு சம்பாதிச்ச முட்டாளும் உலகத்தில் இருப்பான். தவறான நேரத்தில் தவறான பிசினஸை செஞ்சு பணத்தை தொலைச்ச புத்திசாலியும் இருப்பான்!''

''சரி சாமி, நீங்க சொல்ற மாதிரி சம்பாதிச்ச ஒரு முட்டாள் எப்படி தொடர்ச்சியா பணக்காரனாவே இருக்கான்?'' என்றான் செல்.

''அடேய்! அங்கேதான் பணம் தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிக்குது! பணம் சம்பாதிக் கிறதுல அடைஞ்ச வெற்றி மனுஷனுக்குள் ஒரு பெரிய ரசாயன மாறுதலை செஞ்சு அவனை தலைவனாக்கிடுது. ஒரு மனிதனோட வெற்றியால அவனுக்கு (எல்லா வெற்றியும் பண ரீதியாகத்தானே!) செரொடொனின் னுங்கற ஹார்மோன் அதிகமா சுரக்க ஆரம்பிச்சுருதுங் குறாங்க. இந்த ஹார்மோன்தான் மனுஷனோட மூட், எமோஷன், தூக்கம், பசியை கண்ட்ரோல் பண்ணுது. இவை எல்லாம் சேர்ந்த கலவைதானே மனிதனோட பெர்ஃபார்மென்ஸ். ஹார்மோன் அதிகமானா பெர்பார்மன்ஸ் சூப்பரா மாறுது. அதனால அவன் தெளிவா யோசிக்க ஆரம்பிக்கிறான். கடந்த பத்து வருஷத்துல உன்னைச் சுத்தி முளைத்த பணக்காரர்களை கொஞ்சம் உற்றுப் பாரு. முகத்துல ஒரு தேஜஸ் வந்திருக்கும்.

இதெல்லாம் செரொடொனின் வேலைதான்.

''ஏன் சாமி, அந்த ஹார்மோன் ஊசி கிடைச்சா போட்டுக்கிடலாமா?'' என்றான் செல் ஒரு சின்ன சிரிப்புடன்.

''அடேய் பொழுது போகாம என்னோட வாயைக் கிண்டிக்கிட்டு இருக்கீங்களா? அப்புறம் உங்களுக்கு என் வாயே திறக்காது...''

-டென்ஷனானார் சாமி. கொஞ்சம் டச் விட்டுப் போனதால் சாமியின் குணம் (கோபம்?!!!) மறந்து போய்விட்டது. வாலை(யை)ச் சுருட்டி வைத்துக் கொண்டு, ''அதெல்லாம் இல்லை சாமி, நீங்க சொல்லுங்க கேட்டுக்கிடறோம்'' என்றோம் கோரஸாக.

''பத்து வருஷத்துக்கு முன்னாடி சாமி சாமினு பல டீல்களை எனக்கு முடிச்சுக் கொடுத்த நோஞ்சானா இருந்த ரியல் எஸ்டேட் புரோக்கரை இப்போ அய்யா அய்யான்னு கூப்பிட பத்துபதினைஞ்சு பேர் இருக்காங்க. அவரும் சும்மா சிங்கம் பட சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் உடம்பை டெவலப் பண்ணிட்டாரு. ரியல் எஸ்டேட் தொழில்ல சரியான நேரத்துல நுழைஞ்சதனால பல டீல்களை முடிச்சு, சம்பாதிச்சதை சரியா முதலீடு பண்ணி சிறப்பா செயல்படறாரு!'' என்றார் சாமி.

''சாமி, நீங்க சொல்றதைப் பாத்தா கொஞ்சம் சிஸ்டமேட்டிக்கா செயல்பட்டா பெரும்பணம் சேத்துடலாம் போல இருக்கே!''

''நிச்சயமா!''

''பணத்தைப் பத்தி ஒரு சாதாரண மனுஷன் என்னெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும் சாமி?'' ''உலகத்துல பணம்தான் எல்லாம். இன்னைக்கு உலகம் இருக்கிற நிலைமையில முற்றும் துறந்தவனுக்கும் கூட அத்தியாவசிய விஷயங்களுக்கு பணம் தேவைப்படுது. அதனால பணத்தைப் பத்தி சராசரி மனுஷன் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும். பணத்தோட மதிப்பு, பல கால கட்டங்கள்ல அது எப்படியெல்லாம் மாறிவந்தது, வட்டி, வட்டியில் இருக்கிற நல்லது கெட்டது, சேமிப்பு, முதலீடு ரிஸ்க் அப்படின்னு பல விஷயம் இருக்கு இதுல. இப்ப நேரமாயிடுச்சு. பேக் அப் பண்ணிடுவோமா'' என்று திடீரென்று கறாராகச் சொல்லிவிட்டு பங்களாவை நோக்கி வேகமாக நடையைப் போட ஆரம்பித்தார் சாமி.

(பெருகும்)

ஹோம் ஒர்க்...

வழக்கத்துக்கு மாறா பாடம் எடுக்கிறதோட நிறுத்திக்காம, இந்தத் தடவை டெஸ்ட்டும் வச்சிட்டார் சாமி.

''பணத்தை சம்பாதிச்சா மட்டும் போதாது. சேமிக்கவும் வேணும். அதுவும் சம்பாதிக்க ஆரம்பிச்சவுடனே சேமிக்க ஆரம்பிக்கணும். அப்பத்தான் ரிட்டையர் ஆகும் போது கையில ஓரளவுக்காவது பணமிருக்கும். உங்களுக்கு ஒரு கணக்கு தர்றேன். போட்டு விடையைச்சொல்லுங்க. அதுவே, உங்களுக்கு சிறுவயதிலிருந்தே ஆரம்பிக்கும் சேமிப்பின் மதிப்பைச் சொல்லும். உதாரணத்துக்கு, 25 வயசுல ஆரம்பிச்சு ஒருத்தன் சம்பாதிக்கிறதுல வாரா வாரம் 10 ரூபாயை சேமிச்சுட்டு வர்றான். வட்டி 12 சதவீதம் (காம்பவுன்ட் வட்டி - வட்டி, வட்டிக்கு வட்டி, வட்டிக்கு வட்டிக்கு வட்டி என) தொடர்ச்சியா அவனுக்கு கிடைக்குது. அவனோட சேமிப்பு 45 வயசுல என்னவா இருக்கும், 55 வயசுல என்னவா இருக்கும், 65 வயசுல என்னவா இருக்குமுன்னு கணக்குப்போட்டு அனுப்புங்க. செல்லு உனக்காக சொல்றேன். உனக்கு கணக்குதெரியலேங்கிறதை ஒத்துக்காம 15 நாள் கழிச்சு வந்து, 'குழப்பீட்டிங்க சாமி' அப்படிம்பே. கேட்டுக்கோ - ஒரு வருஷத்துக்கு 52 வாரம், வருஷ எண்ணிக்கையை கணக்குப்போட 45-25ன்னே (20 வருஷம்) கழிச்சுக்கலாம்.''

இதைப் படிக்கிறவங்க யாருக்காவது சரியான விடை தெரிஞ்சா சொல்லுங்க. அதை அப்படியே சாமிகிட்ட சொல்லி தப்பிச்சுக்கிடறோம்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close