Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெடிக்ளைம் ஏன் தேவை

பாலாவும் பிரபுவும் வாடகைக் காரில் போய்க்கொண்டிருந்தார்கள், உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் படுத்திருக்கும் நண்பன் காந்திமதிநாதனைப் பார்க்க... மூவரும் ஒரே ஊர்க்காரர்கள். வேலைக்காக சென்னையில் இருப்பவர்கள். ‘’சிட்டியில வீட்டு வாடகை எகிறிக்கிட்டிருக்கு..! எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டிலேயே காலம் தள்ளப் போறோமோ’’ - என்றான் பாலா அலுப்போடு.

‘’கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கேன். தாம்பரம் தாண்டி இடம் வாங்கிப் போடலாம்னு இருக்கேன்..! சீப்பான ரேட்டில் அமைஞ்சா உனக்கும் சேர்த்து நானே வாங்கிடுறேன்... கொஞ்சம் கொஞ்சமா நீ பணம் கொடு... என்ன சொல்றே..?’’ -இது பிரபு.

த டா ர்..!

ஓவர்டேக் பண்ணும்போது எதிரே வந்த வாகனத்தில் இவர்கள் கார் மோதிவிட, பாலாவும் பிரபுவும் ரத்த வெள்ளத்தில் மயங்கிப் போனார்கள். சுயநினைவு வந்தபோதுதான் தெரிந்தது, நண்பன் காந்திமதிநாதன் இருந்த மருத்துவமனைக்கே அவர்களும் வந்து சேர்ந்திருப்பது.

இருவருக்கும் தீவிர சிகிச்சை முடிந்து ஒரே வார்டுக்கு மாற்றப்பட்டபோது காந்திமதிநாதன் டிஸ்சார்ஜ் ஆகி, இவர்களைப் பார்க்க வந்துவிட்டார்.

‘‘என்னடா... என்னைப் பார்க்க வரேன்னு இப்படி மாட்டிக்கிட்டீங்களே... எவ்வளவு செலவாச்சு..?’’ என்று காந்திமதிநாதன் விசாரிக்க,

பாலா, ‘‘பைசா செலவில்லை... மெடிக்ளைம் இருந்ததால்...’’ என்றார். பிரபுவோ, ‘‘நிலம் வாங்க சேர்த்து வெச்சிருந்த ரெண்டு லட்சத்தை இங்கே கட்ட வேண்டியதாகிடுச்சு...’’ என்றார்.

விபத்து யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நாம் பாலாவா, பிரபுவா என்பதைப் பொறுத்துதான் நமது கதி!

மருத்துவச் செலவுங்கறதே நாம எதிர்பாராம வர்றதுதான். வண்டியிலே போகும்போது ஆக்ஸிடென்ட் ஆகிடும்... இல்லேன்னா திடீர்னு நெஞ்சுவலி, மயக்கம், சிறுநீரகக் கோளாறுன்னு உடம்புக்கு சரிஇல்லாமப் போகும். அது-மாதிரி எதிர்பாராதச் சூழ்நிலையைச் சமாளிக்கறதுக்கு இருக்கறதுதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்.

இந்தியாவில மூணு பேரில் ஒருத்தருக்கு கேன்சர் வரும் அபாயம் இருக்காம். நாலு பேரில் ஒருத்தருக்கு 58 வயசுக்கு முன்னாடியே இதய நோய் வர வாய்ப்பு இருக்கு. ஆபீஸ் டென்ஷன் கூடிப்போச்சு... 40 வயசுக்கு முன்னாடியே பல பேர்களுக்கு மாரடைப்பு வருதுனு புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியைக் கொடுக்குது.

நோய் பத்தின புள்ளிவிவரம் இப்படின்னா, நம்மூர் ஆட்களின் நிதிநிலைமை எப்படி இருக்குனு இன்னொரு புள்ளிவிவரம் சொல்லுது... இந்தியாவில மாசச் சம்பளம் வாங்குறவங்கள்ல பலபேரு, உடனடியா அவசரத் தேவைக்கு 5 லட்ச ரூபாய் புரட்டமுடியாத நிலையிலதான் இருக்கறாங்க. நூற்றுக்கு 14 பேர்தான் அந்த சக்தியோட இருக்காங்க. அதிலேயும் ஒருத்தர்தான் அந்த செலவை எதிர்காலத்துல சமாளிக்கற வாய்ப்போடு இருக்கார். எப்படி இருக்கு பாருங்க நிலைமை!

சரி, மருத்துவச் செலவாவது மயக்கம் போட வைக்காம இருக்கானு பார்த்தா அதுவும் கிடையாது...

இதயநோய்க்கு ஆஞ்ஜியோபிளாஸ்ட் சிகிச்சைக்கு 1.5 முதல் 3 லட்ச ரூபாய் ஆகுது. அதுவே, இதய அறுவை சிகிச்சைன்னா 2 முதல் 5 லட்ச ரூபாய் தேவைப்படுது. கல்லீரல் மாற்று சிகிச்சைன்னா 20 முதல் 25 லட்ச ரூபாய், கிட்னி மாற்று சிகிச்சைன்னா 15 முதல் 25 லட்ச ரூபாய். சாதாரணமான குடல் வால் அறுவை சிகிச்சைக்கே 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம்வரை ஆகிடும். இது தவிர, மருத்துவமனை செலவு தனி..! போக்குவரத்துச் செலவு கணக்கில் வரலை. நோயே இல்லைன்னாலும் திடீர்னு ஆக்ஸிடென்ட் ஆனா என்ன செய்யறது?

திடீர்னு ஒரு சூழ்நிலை ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும்னா பணத்தை எண்ணி எடுத்துட்டு போனாப் பத்தாது, அள்ளி எடுத்துட்டுத்தான் போகணும்னு ஆகிடுச்சு! மருத்துவச் செலவு மட்டுமில்லே... உடம்பு சுகமில்லாமப் போயி, கொஞ்சநாள் வேலைக்குப் போகமுடியாம ஆகிடலாம்... அல்லது ஆக்ஸிடென்டில் ஊனம் ஏற்பட்டுடலாம். அதுமாதிரி சூழ்நிலையிலும் மெடிக்ளைம் கைகொடுக்கும். அப்படிப்பட்ட பாலிசியை எடுக்கறதில் எதுக்குத் தயக்கம்?

(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்திலிருந்து)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close