பங்கு வெளியீட்டில் களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் ..!
தற்போது ஸ்மார்ட்போன் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனமான மைக்ரோமேக்ஸ், நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 500 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.3,160 கோடி) திரட்ட திட்டமிட்டிருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் நிறுவனம் 2008-ல் தனது குறைந்த விலை மொபைல் தயாரிப்பை இந்தியாவில் தொடங்கியது. இந்த நிறுவனம் 2010-ல் முதன் முதலாக ஐபிஓ வெளியிட முடிவு செய்திருந்த போது, அன்றைய சந்தை சூழலானது சரியில்லாத காரணத்தினால் கைவிடப்பட்டது. ஆனால் இப்போது பங்குச் சந்தை சாதகமாக இருப்பதால் பங்கு வெளியிட மைக்ரோமேக்ஸ் முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணியை மார்கன் ஸ்டேன்லி மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியானது 64%-ஆக காணப்பட்டது. இச்சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் 25 சதவிகிதத்தையும், மைக்ரோமேக்ஸ் 20 சதவிகிதத்தையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.