Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்தும் செய்யும் பத்தாத பணம்-3


பணமொழி இன்ஃப்ளேஷன்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் முடியிருக்கும் நம் தலைக்கு, சென்ற வருடம் 40 ரூபாய் கொடுத்து செய்த ஹேர்கட்டை, இப்போது 70 ரூபாய் கொடுத்து செய்கிற வேளையில், தலைமுழுதும் முடியிருந்தபோது வெறும் 5 ரூபாய்க்கு முடிவெட்டிக் கொண்டது ஞாபகத்திற்கு வரும்போது புரிவது.

'விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார்பட்டி போறேன்... வர்றதா இருந்தா அதிகாலை மூணு மணிக்கு பங்களாவில் இருக்கவும்' என்று சாமியிடமிருந்து எஸ்.எம்.எஸ்-ல் கட்டளை வந்தது! சாமியிடம் தனியாய் பேச நல்ல வாய்ப்பாச்சே என்று உடனே 'யெஸ் சாமி' என்று பதில் அனுப்பிவிட்டு, சொன்னமாதிரி மூணு மணிக்கே பங்களாவில் ஆஜராகிவிட்டோம்... சாமியும் அவருடைய இம்போர்ட்டட் மிட்ஷிபிஷி பஜீரோ வண்டியோடு தயாராக இருந்தார்.

டீசல் போட பங்க்கில் நிறுத்தி பணம் கொடுக்கும் போது, ''சாமி... உங்க சின்ன வயசில டீசல் என்ன விலை வித்துச்சு?'' என்று செல் கேட்டான்.

''எனக்கு விவரம் தெரிஞ்சப்ப ஒண்ணே முக்கால் ரூபாயா இருந்ததா ஞாபகம்'' என்றார் சாமி.

''அப்படின்னா பணத்தோட மதிப்பு குறைஞ்சுகிட்டே போகுதா இல்லை, பொருளோட விலை ஏறிக்கிட்டே போகுதா சாமி?'' என்றான் செல்.

 

''மதிப்பை பொதிஞ்சு வைக்கிற விஷயமா பணத்தைப் பார்த்தேன்னா மதிப்பு குறைஞ்சு போகுது. உதாரணத்துக்கு முப்பது வருஷத்துக்கு முன்னாடி பத்து லிட்டர் பெட்ரோல் வாங்குறதுக்குப் பதிலா அந்த பணத்தை பேங்கில போட்டுருக்கேன்னு வச்சுக்கோ... அதுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி எல்லாம் சேர்த்தாலும் இப்போ பெட்ரோல் போட முடியாது!''

''அப்படின்னா பேங்குல நான் போட்டு வச்சுருக்க டெப்பாசிட்டெல்லாம் வேஸ்ட்டா'' என்றேன்.

''விஷம் மாதிரி விலைவாசி ஏறிக்கிட்டே போகிற நிலைமையில நீ செலவு பண்ணாத வரைக்கும் உன் பணம் உன் பணம் இல்லை!'' என்று மறுபடியும் ஒரு கூக்லியைப் போட்டார் சாமி.

''கொஞ்சம் தெளிவாச் சொல்லப்படாதா சாமி? ஒரு பக்கம், 'செலவு பண்ணாதே, சேமி... சேமி!'னு உபதேசம் பண்றீங்க. இன்னொரு பக்கம், 'செலவு பண்ணாத வரை நம்ம பணம் நம்ம பணமில்லே'னு சொல்றீங்களே?'' என்றேன்.

''அடேய், நாணயத்துக்கு ரெண்டு பக்கம்னு சொல்வாங்களே... அதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? பணத்தை ஒரு மதிப்பு மாற்று விஷயமாவும் பார்க்கலாம் (மீடியம் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்), இல்லே ஒரு மதிப்பை பொதிஞ்சு வைக்கிற விஷயமாவும் (ஸ்டோரேஜ் ஆஃப் வேல்யூ) பார்க்கலாம். புத்திசாலிக்கு பணம்ங்கிறது 'மீடியம் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்'. மத்தவனுக்கு, 'ஸ்டோரேஜ் ஆஃப் வேல்யூ' என்று சொல்லிச் சிரித்தார் சாமி.

''ஏதாவது உதாரணம் சொல்லி புரிய வையுங்க சாமி... நாங்களும் சிரிப்போமில்ல!''

''கன்னு நீ எவ்வளவு சம்பளம் வாங்குறே?''

''முப்பதாயிரம் சாமி...''

''இன்னைக்கு தேதி 11 ஆச்சு. இந்த மாசத்துல நீ பத்து நாள் வேலை செஞ்சிட்ட... அதுக்கான சம்பளம் பத்தாயிரத்தை உன் கணக்குல உன் கம்பெனிதான் வச்சிருக்கு இல்லியா? உன்னோட உழைப்புக்கு ஒரு மதிப்பைப் போட்டு கணக்கில வச்சுக்கிறதுக்கும், மாசம் முடிஞ்சதும் அதைக் கொடுக்கிறதுக்கும் ஒரு மீடியம் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்சா பணம் இருக்கு இல்லையா?''

''ஆமா சாமி...''

''சரி, அந்த பத்து நாள் சம்பளத்தை மட்டும் ஒரு பத்து வருஷம் கழிச்சு தர்றதா உன் கம்பெனி சொன்னா நீ ஒத்துக்குவியா?''

''வட்டியோட கொடுத்தா ஒத்துக்கலாம்!''

''எதுக்கு வட்டி?''

''விலைவாசி ஏறுதுல்ல! (இன்ஃப்ளேஷன்) அதைச் சமாளிக்கத்தான்!''

''இன்ஃப்ளேஷன் எதனால ஏற்படுது?''

''விலை ஏற்றத்தினால!''

''விலை ஏன் ஏறுது?''

''அதுக்கு பல காரணங்கள் இருக்கு சாமி. விளைபொருட்களை விற்கறவங்க அதிக லாபம் சம்பாதிக்க நினைச்சு விலையை ஏத்துனா விலை ஏறுது.

மூலப்பொருட்களோட விலை ஏறினா விலைவாசி ஏறுது. கூலி அதிகமாகிறதனாலயும் விலை ஏறுது. அதிக லாபம் சம்பாதிக்கிறதுக்காகவும் விலையை ஏத்திடறாங்க. இப்படி பல காரணங்களைச் சொல்லலாம் சாமி.''

அதற்குள் வழியில் ஒரு டீ கடை தென்படவும் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு கடைக்குள் வேகமாகச் சென்றார் சாமி. கல்லாவில் இருந்தவரிடம் காசைக் கொடுக்கவும், 'ரூபாய் ஐந்து - டீ' என்று அச்சிட்ட டோக்கனை கொடுத்து டீயை கவுண்டரில் வாங்கிக்கொள்ளச் சொன்னார். டீ மாஸ்டர் சாமி வந்த பஜீரோவையும் சாமியின் குடுமி, தாடி, பேகி பேண்ட் பெர்சனாலிட்டியையும் ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு கிளாஸை வெந்நீரில் இரண்டு முறை கழுவி டீத்தூளை புதிதாக மாற்ற ஆரம்பித்தார்.

''நீங்க சொன்னதைத் தவிர விலைவாசி ஏறுவதற்கு வேற ஒரு காரணமும் இல்லையா?'' என்று விட்ட இடத்தில் ஆரம்பித்தார் சாமி.

''அரசாங்கம் அதிகமா நோட்டடிச்சு சர்க்குலேஷன்ல விட்டா இன்ஃப்ளேஷன் வந்துரும்'' என்றேன்.

''அதனால உனக்கு என்ன பாதிப்பு?''

''வேற என்ன, அஞ்சு ரூபாய்க்கு கிடைக்கிற டீ ஆறு ரூபாயா ஆயிடும்!''

''சரி, உன் கையில இருக்கிற அஞ்சு ரூபாய் நோட்டுல என்ன வாசகம் போட்டிருக்கு?''

''ஐ பிராமிஸ் டு பே த பியரர் எ சம் ஆஃப் ருபீஸ் ஃபைவ்- அப்படின்னு போட்டிருக்கு.''

''இப்ப டீக்கடைக்காரர் ஒரு டோக்கன் கொடுத்தாரே, அதுல எழுதப்படாத வாசகம் என்ன?''

''ஐ பிராமிஸ் டு கிவ் த பியரர் ஒன் கப் ஆஃப் டீ!''

''சரி, இன்னைக்கு டோக்கன் வாங்கிட்டு டீயைக் குடிக்காம போயிடற. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வந்து டோக்கனைக் கொடுத்து டீ கேக்கிற. அப்போ டீ விலை ஆறு ரூபாயா இருக்குதுனு வச்சுக்க. கடைக்காரர் என்ன செய்வாரு?''

''நியாயமான ஆளா இருந்தா டோக்கனோட சேர்த்து கூடுதலா ஒரு ரூபாய் கேட்பார்.''

''அப்ப டீக்கடைக்காரர் டோக்கனில், 'ஐ பிராமிஸ் டு கிவ் த பியரர் ஒன் கப் ஆஃப் டீ' அப்படின்னு கொடுத்த பிராமிஸ் என்னாச்சு?''- கிடுக்கிப்பிடி கேள்வியைப் போட்டார் சாமி. முழித்தோம்...

''அடேய், அவர் கொடுத்த பிராமிஸை அவரே முறிச்சிடுறார் இல்லையா? அதே லாஜிக்கை உன் கையில இருக்கிற அஞ்சு ரூபாயில அப்ளை பண்ணிப்பாரு. இன்னைக்கு அஞ்சு ரூபாய் கொடுத்து குடிக்கிற அதே டீ ரெண்டு மாசம் கழிச்சு அதே அஞ்சு ரூபாயில கிடைக்காதப்ப ரூபாயோட மதிப்பு குறைஞ்சிடுது. அப்ப உன்னோட அரசாங்கம் அதனோட

பிராமிஸை மறைமுகமா முறிச்சிடுச்சு இல்லையா?'' என்றார்.

''நீங்க சொல்றது சரி மாதிரிதான் தெரியுது''

''அதான்... ரெண்டு மாசத்துக்குப் பதிலா ரெண்டு வருஷம் கழிச்சு வந்து கேட்டா டீ 10 ரூபாய் அப்படீங்கறார் கடைக்காரர். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உங்கிட்ட இருந்த அஞ்சு ரூபாய்க்கு கிடைத்த டீ இன்னைக்கு பத்து ரூபாய் ஆயிடுச்சுன்னா உன் பாக்கெட்டில இருந்த பணத்தோட மதிப்பை யாரோ லவட்டிக்கிட்டு போயிட்டாங்கனுதானே அர்த்தம்!

அப்படி லவட்டிக்கிட்டு போயிட்டா உன் பணம் உன்னோடது இல்லைனு ஆயிருதுல்ல'' என்றார்.

''ஆமால்ல!'' என்றான் செல்.

''வாயை பிளக்கறதைப் பாரு! உன் பணம் எல்லா காலத்திலேயும் மதிப்புடையதா இருக்கணும். அப்படி இல்லாம மதிப்பை இழந்துகிட்டே வர்ற விஷயமா இருக்கறதால அதை ஒரு 'ஸ்டோர் ஆஃப் வேல்யூ'னும் சொல்ல முடியாது. பணத்தை பேங்கில போட்டு வச்சு கனவு காண்றது ரொம்பத் தப்பான காரியம். தனி மனிதனும் சரி; அரசாங்கமும் சரி... பணத்தை சரியா உபயோகிக்காம போனா பணத்தோட மதிப்பு குறைஞ்சுகிட்டேதான் போகும்.

அரசாங்கங்கள் எப்பவுமே வரவுக்கு மீறின செலவாளியாதான் இருக்கும். ஏன்னா அரசாங்கம் எப்ப வேணா நோட்டை அடிச்சுக்கலாம், கடன் வாங்கிக்கலாம். ஆனா தனிமனிதன்தான் அவனோட பணத்தை இன்ஃப்ளேஷன்லருந்து ஜாக்கிரதையா காப்பாத்திக்கணும்'' என்றார். அதற்குள் நேரம் அதிகமாகிவிட்டதால் டீ கிளாஸை வைத்துவிட்டு விறுவிறு என வண்டியை நோக்கிப் பாய்ந்தார் சாமி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close