Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கச்சா எண்ணெய், பங்குச் சந்தை வீழ்ச்சி... தங்கத்தின் விலை உயருமா?

கச்சா எண்ணெய், பங்குச் சந்தை வீழ்ச்சி...

தங்கத்தின் விலை உயருமா?
 
புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, கடந்த வாரத்தில் திடீரென பெரிய இறக்கத்தைக் காண ஆரம்பித்தது. தற்போது சென்செக்ஸ் 27400 புள்ளிகள் என்கிற அளவுக்கு இறங்கி இருக்கிறது.  மேலும் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது, ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 50 டாலருக்கு கீழே குறைய ஆரம்பித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
 
 
ஒரு கிராம் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.2,400 ஆக இருந்தது. இப்போது ரூ.2,500 மேல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது தங்கத்தை வாங்குவதில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டோம். "தங்கத்தின் விலை என்பது அடுத்த ஒரு மாதத்தில் சற்று உயரவே செய்யும்.
 
 
ஏனெனில், அடுத்து வருவது திருமண சீஸன் என்பதால் தங்கம் வாங்குவது சற்று அதிகரிக்கும்.  தங்கத்தை வாங்குவதில் ஒருவிதமான மந்தநிலை இங்கு உள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தங்கத்தின் விலை ஒருவிதமான தேக்கநிலையில் உள்ளது. எனவே, பெரிய அளவில் விலை உயராது. அதனால் தேவைப்படும்போது வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்" என்றார்.
 
கச்சா எண்ணெய் விலை குறைவினால் தங்கத்தின் விலையில் அது எப்படி பிரதிபலிக்கும் என்பது குறித்து கமாடிட்டி நிபுணர் ஞானசேகரன்  பிள்ளையிடம் கேட்டோம்.
 
"கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் தங்கத்தில் முதலீடு குறைய வாய்ப்புள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ரஷ்யா தவிர்த்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் லாபத்தை தங்கத்தில் முதலீடு செய்கிறது. இந்த நாடுகள் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும். ஆனால், தற்போது கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியால் லாபம் என்பது குறைவாகவே உள்ளது.
 
கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமே அமெரிக்கா கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வதுதான். மேலும், அது கடன் பத்திரங்களில் முதலீட்டை வெகுவாகக் குறைத்து வருகிறது. இதன்காரணமாக தங்கத்தின் விலை ஏற்றம் என்பது உடனடியாக இருக்காது. ஆனால், நாளடைவில் இருக்கும். அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,280 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
 
குறுகிய காலத்தில் தங்கத்தின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.
 
"கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது, அமெரிக்கா ஷேல் உற்பத்தியை அதிகப்படுத்தியிருப்பதுதான். ஆனால், 50 - 40 டாலருக்கு கீழ் கச்சா எண்ணெய் விலை சரியும்போது எப்படியும் ஷேல் அமைப்பு உற்பத்தியை நிறுத்திக்கொள்ளும் என ஒபெக் (ஆயில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள்) நினைக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை 20 டாலருக்கு கீழே சென்றாலும் கவலை இல்லை என்ற நிலையில் அந்த நாடுகள் இருக்கின்றன. ஏனெனில், எண்ணெய் விலை உச்சத்தில் இருக்கும்போது அதிக லாபம் பார்த்துவிட்டதால் இப்போது ஏற்படும் நஷ்டத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியும்.
 
ஆனால், இதன் விளைவாக பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு தங்கத்தின் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் தங்கத்தின்  விலையில் பெரிய மாற்றம் இருக்காது. ஏனெனில், இந்திய  ரூபாயின் மதிப்பு வலிமையாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.
 
அடுத்தது, ஐரோப்பிய நாடான கீரிஸில் தேர்தல் வர உள்ளது. இதன் விளைவாக ஐரோப்பிய அமைப்பிலிருந்து அந்த நாடு வெளியேறினால் யூரோவின் மதிப்பு வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதனால் பங்குச் சந்தையும் வீழ்ச்சி அடைய கூடும். எனவே பாதுகாப்புக்காக தங்கத்தில் முதலீட்டை அதிகரிப்பார்கள். இதனால், தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.
 
அடுத்தது, சீனாவில் புத்தாண்டு வர இருப்பதால் தங்கம் வாங்குவது அதிகமாக இருக்கும். பரிசுகள் வழங்குவதற்காக தங்கம் வாங்குவார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர வாய்ப்புள்ளது.
 
அடுத்த ஒருமாதத்துக்குள் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலையானது 27,500 - 27,800 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது "என்றார்.
 
தங்கம் என்பது எப்போதும் தேவை உள்ள பொருளாகத்தான் உள்ளது. அதேநேரத்தில், இதன் விலை ஏற்றம் என்பது ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல இருக்க வாய்ப்பில்லை. எனவே, தேவை இருப்பவர்கள் இப்போது வாங்கலாம்.
 
- இரா. ரூபாவதி.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close