Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் காட்டிய வழியில் நடக்கிறோம்!

 

''நான் சம்பாதிக்கிற பணத்தை எப்படி பிளான் பண்ணி செலவு பண்ணணும், எதில முதலீடு செய்யணும்ன்னு தெரியலை. எங்களுக்கு ஃபைனான்ஷியல் பிளானிங் பண்ணிக் கொடுக்க முடியுமா..?'' - இப்படி ஒரு கோரிக்கையோடு நமக்கு போன் செய்யும் வாசகர்கள் பல்லாயிரம் பேர்.

இவர்களில் பலருக்கும் குடும்ப நிதி ஆலோசனை பகுதியின் மூலம் பல வருடங்களாக ஃபைனான்ஷியல் பிளானிங் போட்டுத் தந்திருக்கிறோம். அவர்களில் சிலரை அணுகி, நாணயம் விகடன் வழங்கிய நிதி ஆலோசனை எந்த அளவுக்கு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது, அந்த ஆலோசனையை நடைமுறைபடுத்தியதன் மூலம் நீங்கள் அடைந்த நன்மைகள் என்னென்ன என்று கேட்டோம். உடனே உற்சாகமானவர்கள், கடந்த ஓராண்டு காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்கள் பற்றி மனம் திறந்து கொட்ட ஆரம்பித்தார்கள்.
 

வீடு வாங்கிட்டோம்!

சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் டில்லி பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 2009-ல் நிதி ஆலோசனை சொல்லி இருந்தோம். இப்போது திடீரென டில்லி பாபு முன்பு போய் நாம் நிற்க, ''சார், சரியான நேரத்துலதான் வந்திருக்கீங்க'' என்றார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் நாம் முழிக்க, ''நீங்க கொடுத்த ஆலோசனைப்படி, முதலீடு செஞ்சதால

இப்ப சென்னை அண்ணாநகர்ல புதுசா வீடு வாங்கியிருக்கேன். இன்னைக்குதான் வீட்டோட சாவியை வாங்கப் போறேன். இந்த நேரத்துல நீங்களே நேர்ல வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். கிரஹப்பிரவேசத்துக்கும் அவசியம் நீங்க வரணும்'' என்றவர், விஷயத்திற்கு வந்தார்.

''உங்ககிட்ட இருந்து நிதி ஆலோசனை வாங்கி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இருக்கும். நீங்க கொடுத்த நிதி ஆலோசனை மூலம் செலவைக் குறைச்சு சேமிக்க கத்துக்கிட்டேன். எந்த ஃபண்டுல எவ்வளவு போட்டா, எவ்வளவு வருமானம் கிடைக்கும்ன்னு புள்ளிவிவரத்தோட சொல்லி அசத்தியிருந்தீங்க. அதன்படிதான் இன்னமும் முதலீடு செஞ்சுட்டு வர்றேன். இப்ப நான் வீடு வாங்கியிருக்கேன்னு நினைக்கும்போது, என்னுடைய தொலைதூர வாழ்க்கைப் பயணத்துல முதல் மைல் கல்லை தொட்டுட்டோம்ங்கற திருப்தி கிடைச்சிருக்கு. மொத்தத்துல நீங்க தர்ற குடும்ப நிதி ஆலோசனை பகுதி 'இதெல்லாம் நம்மால செய்ய முடியுமான்னு’ யோசிக்கறவங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரக்கூடிய டானிக்!'' என்று நெகிழ்ந்தார் டில்லி பாபு.

நிறைய சேமிக்கிறேன்!

சென்னை முகப்பேரைச் சேர்ந்த ரமேஷ் (கடந்த 15.10.10 இதழில் குடும்ப நிதி ஆலோசனை பெற்ற வாசகர்) சேமிப்பின் சிகரமாகவே மாறிப் போயிருக்கிறார் நாணயம் விகடனின் குடும்ப நிதி ஆலோசனை பெற்ற பிறகு.  ''வரவுங்கறது நாம் வாங்கக்கூடிய சம்பளம் கிடையாது. அந்த சம்பளத்துல மாதாந்திரச் சேமிப்புகள், வரிப் பிடித்தத்துக்கான ஒதுக்கீடுகள், கடன்களுக்கான தவணை, குடும்பத்துக்கான செலவு போக மீதமுள்ள தொகைதான் உண்மையான வருமானம் என்பதை எனக்கு உணர வச்சதே நீங்கதான்'' என்று உணர்ச்சி வசப்பட்டார்.  

''உங்ககிட்ட ஆலோசனை வாங்குறதுக்கு முன்னாடி மாதச் சம்பளம் ஏ.டி.எம்.-ல கிரெடிட் ஆனதும் முதல் வாரத்துலயே எல்லா பணத்தையும் எடுத்து குடும்பத்தோட சினிமா, ஓட்டல், பர்ச்சேஸ்ன்னு எக்கச்சக்கமா செலவு செஞ்சு பர்ஸை காலி பண்ணிடுவேன். மாசக் கடைசியில்  கையில காசு சுத்தமா இருக்காது. ஆனா இப்ப அது மாதிரியான பிரச்னையே கிடையாது. ஏன்னா நீங்க கொடுத்த பிளான்படி என் வாழ்க்கையை மாத்திக்கிட்டேன்!

எதிர்காலப் பாதுகாப்புக்கு நீங்க சொன்ன மாதிரி மருத்துவ காப்பீடு மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்துகிட்டோம். அதேமாதிரி குழந்தைக்கான கல்வி மற்றும் திருமணத்துக்கும், என்னோட ஓய்வு காலத்துக்கும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செஞ்சுட்டு வர்றேன். அதனால எதிர்காலத்தைப் பத்தி கவலை இல்லாம இருக்கேன். நாணயத்திற்கு நான் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கேன்'' என்று சிலிர்த்தார்.  

 

கவலை இல்லாம இருக்கேன்!

 

''குடும்ப விவரங்களை மெயில் மூலமா அனுப்பி, ஆலோசனை வேணும்னு சொன்னதுதான் தாமதம். அடுத்த சில நாட்களுக்குள்ளேயே உங்ககிட்ட இருந்து போன் வந்தவுடனே நான் அசந்து போயிட்டேன். என் அப்பா மாதிரி எனக்கிருக்கிற ஒவ்வொரு பிரச்னையையும் கேட்டு அதை தீர்க்கலாம்னு நீங்க சொன்னதைதான் இன்னைக்கும் நான் ஃபாலோ பண்றேன்'' என்றார், கோவையைச் சேர்ந்த சரவண முத்துகுமார்.

மேற்கொண்டு அவர் பேசும்போது ''நாம செய்யுற மாதச் செலவுகள்ல தவிர்க்க முடியாதவையாக பல இருக்கும். அதுக்கான ஒதுக்கீட்டை குறைச்சுக்க முடியாது. ஆனா, அதைப் பத்தி கவலைப்படாம கடனுக்கு எதையாச்சும் வாங்கிட்டு அதற்கு மாதத் தவணை கட்டினா, வீட்டு பட்ஜெட் இடிக்கத்தான் செய்யும். பட்ஜெட் போட்டு எப்படி செலவு பண்றது, சேமிக்கறதுன்னு எனக்கு புரிய வச்சதே உங்க ஆலோசனைதான்.

உங்கள் ஆலோசனைபடிதான் இப்பவும் என் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கிட்டு இருக்கு. ஆலோசனைக்கு முன்னாடி, நேத்து பத்தின கவலையும் இல்ல; நாளைய பத்தின சிந்தனையும் இல்லைன்னுதான் நான் வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். ஆனா, இப்ப நான் செய்யுற ஒவ்வொரு செயலையும் எதிர்காலம் குறித்த சிந்தனையுடன்தான் செஞ்சுகிட்டு இருக்கேன். இன்றைய சூழ்நிலையில என்னால எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்க முடியுதுன்னா அதுக்கு காரணம் நீங்க தந்த நிதி ஆலோசனைதான்!'' என்றவரின் வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை!

சரியான வழி காட்டுனீங்க!

''இப்படி பண்ணுங்க நிச்சயம் உங்களால முன்னுக்கு வரமுடியும்ன்னு ஒரு நண்பன் மாதிரி என்னைத் தோள் குடுத்து தூக்கி விட்டுருக்கீங்க. திசை மாறி போய்க்கிட்டிருந்த என் வாழ்க்கையில எப்படி முதலீடு செஞ்சா

முன்னுக்கு வரலாம்னு எனக்கு புரியுற மாதிரி நீங்க  சொல்லித் தந்ததை என்னால் மறக்கவே முடியாது' என்று ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீனிவாசன்.

'உங்க நிறுவனத்தை நீங்க நல்லா பாத்துக்கறீங்களான்னு கேட்டா, நிச்சயமாக ஆமாம்னு என்னால சொல்ல முடியும். அதுவே உங்க தனிப்பட்ட சொந்த முதலீடுகளை நல்லா பாத்துக்கறீங்களான்னு கேட்டா, என்னால உறுதியாச் சொல்ல முடியாது’ - ஒரு வருஷத்துக்கு முன்னாடி உங்கள் நிதி ஆலோசனைக்காக நான் பேசுறப்ப இப்படி சொன்னேன். ஆனா, இப்ப அதே கேள்வியை என்கிட்ட கேட்டா உறுதியா ஆமாம்னு நான் பதில் சொல்வேன். காரணம், நீங்கள் என் குடும்பத்துக்கு தந்த நிதி ஆலோசனைதான்.

முதலீடு செஞ்சா மட்டும் போதாது; அதை தொடர்ந்து முறையா பராமரிச்சுட்டு வரணும்ங்கறது ரொம்பவே முக்கியமான விஷயங்கறதால எப்படிச் சேமிக்கணும், எந்த ஃபண்டுல பணத்தை முதலீடு செஞ்சா பாதுகாப்பாக இருக்கும், அதே சமயத்துல எதிர்காலத் தேவைக்கேத்த மாதிரி எவ்வளவு வருமானம் கிடைக்கும்னு தெளிவாச் சொன்னது எங்க குடும்பத்துக்கு ரொம்பவே பயனுள்ளதா இருந்துச்சு.

ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர், எல்.ஐ.சி. ஆஃப் இந்தியா

ங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், வங்கி, ரியல் எஸ்டேட், தங்கம் என அனைத்து முதலீட்டு திட்டங்களையும் அலசி ஆராய்ந்து வாசகர்களுக்கு அளிப்பதில் நாணயம் விகடனுக்கு நிகர் அதுவே..! ஆரம்பம் முதலே நான் சந்தாதாரர் என்பதைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நீங்க சம்பாதிக்கற சம்பாத்தியத்துக்கு ஏத்த இன்ஷூரன்ஸ் கவரேஜ் உங்ககிட்ட இல்லாம இருக்குறது உங்க வாழ்க்கை பாதுகாப்புக்கான மைனஸ் விஷயம். அதனால உடனே டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீடை எடுத்துக்கச் சொல்லி, அதுக்கான முக்கியத்துவத்தை உணர வச்சது உங்களோட குடும்ப நிதி ஆலோசனை பகுதிதான். ஆக மொத்தத்துல, நாணயம் விகடன் கொடுத்த குடும்ப நிதி ஆலோசனை எங்களுக்கு கிடச்ச வரப்பிரசாதம்ன்னுதான் சொல்லுவேன்!''.

குடும்ப நிதி ஆலோசனை பகுதி மூலம் நாணயம் காட்டிய வழியில் இப்படி பல குடும்பங்கள் ஃபைனான்ஸ் விஷயத்தில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்க, இன்னும் பல ஆயிரம் குடும்பங்கள் ஆலோசனை பெறக் காத்திருக்கின்றன. அவர்களுக்கு உதவ நாணயமும் காத்துக் கொண்டிருக்கிறது.

 

(நாணயம் விகடன் 11.12.2011 இதழில் இருந்து)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close