Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கீரை அட்டை... மதுரையைக் கலக்கும் 'மாத்தி யோசி’ பிசினஸ்!

 'கீரை வாங்கலையோ கீரை...’ என கீரைக் கட்டுகளைத் தலையில் சுமந்து தெருத்தெருவாக கீரை விற்பனை செய்யும் பெண்களை இப்போதும் பார்க்கலாம். சாதாரணமாகச் செய்யக்கூடிய இந்தத் தொழிலையே கொஞ்சம் வித்தியாசமாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் மூலம் செய்து மதுரை மாநகரத்தையே கலக்கி வருகிறார் செல்வம். தனது அம்மா தலையில் சுமந்து செய்துவந்த கீரை வியாபாரத்தைக் கீரை அட்டை என்கிற பெயரில் நவீனமாக செய்து வருகிறார்.

பால் அட்டை கேள்விப்பட்டிருக் கிறோம். அது என்ன கீரை அட்டை..? செல்வத்திடமே கேட்டோம்.

''இந்தத் தொழிலை தொடங்குவதற்கு முன்பு மூன்று மாதம் வரை கீரை குறித்து ஓர் ஆய்வு நடத்தினோம். எங்கெங்கு, என்னென்ன வகையான கீரைகள் இருக்கு, அதனுடைய அடக்க விலை என்ன, ஒவ்வொரு கீரையின் பயன்கள் என்ன என்பது போன்ற அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

அடுத்து, எங்கிருந்தெல்லாம் கீரையை வாங்குகிறோம், எந்தளவுக்கு சுத்தமானது என்றும் மக்களிடம் தெளிவுபடுத்துகிறோம். சோழவந்தான், கீழக்குடி, வாடிப்பட்டி, அழகர்கோவில், திண்டுக்கல் பகுதிகளில் இருந்துதான் கீரைகளைக் கொள்முதல் செய்கிறோம். தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, சிறு கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, முடக்கத்தான் கீரை, வல்லாரை கீரை, பாலக் கீரை, சக்கரவர்த்தி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பிரண்டை, அகத்தி கீரை, நீராரை, முள்முருங்கை, லட்சக் கொட்டை, பருப்பு கீரை, பசலைக் கீரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை மதுரை மக்களுக்கு தினமும் தந்து வருகிறோம்.

கீரை எங்கள் கைக்கு வந்ததும் அப்படியே கட்டுகளைக் கட்டி விற்பனைக்கு அனுப்புவதில்லை. அதைச் சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறோம். சகதி, மண், பூச்சிகள், கொசு முட்டைகளையெல்லாம்  அகற்றி முறைப்படி சுத்தம் செய்தபிறகே, வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம்.

சுத்தமான கீரை வீடு தேடி வருவதால் மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள்.  காலை 6.30 மணிக்குள் பால் பாக்கெட் போடுவதுபோல கீரையையும் சப்ளை செய்கிறோம். ஒரு வீட்டிற்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் போடுகிறோம். அப்படியென்றால் ஒரு மாதம் 12 நாட்கள், ஒரு நாளைக்கு இரண்டு கட்டு என்றால் 24 கட்டு வரை ஒரு வீட்டுக்கு விற்பனை செய்கிறோம்.

வாரத்தில் எந்தெந்த கிழமைகளில் என்னென்ன கீரைகள் வேண்டுமென்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கிற மாதிரி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறோம். இரண்டு கட்டு கீரை வாங்கினால் தள்ளுபடியும் தருகிறோம்.  இப்போதைக்கு 125 வீடுகளுக்கு கீரை சப்ளை செய்கிறோம்.

டோர் டெலிவரி போக, மதுரை அரசரடி மைதானத்தில் கடை போட்டும் கீரை விற்பனை செய்கிறோம். முதலீடு என்பது பெரிதாக இல்லை. ஒரு நாளில் தோராயமாக 750 ரூபாய் வரை முதலீடு செய்கிறோம். லாபம் 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது.

'உண்போம் கீரையை’ (UNBOM - Unit for Nurturing and Bridging organic merchandise) என்ற பெயரில் ஒரு விழிப்பு உணர்வு இயக்கமாகவும் ஆரம்பித்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம்; விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கிறோம்; இயற்கையில் விளையக்கூடிய பொருட்களை சந்தைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

ஃபேஸ்புக் மூலம் கீரை பற்றிய தகவல்களைக் கொடுத்து அதன் பயன்கள் என்ன, எப்படி சமைக்கலாம் என்பது போன்ற விஷயங்களைச் சொல்லி சந்தைப்படுத்தி வருகிறோம். இந்த வியாபாரத்தைக் கீரை வியாபாரம்தானே என்றில்லாமல் புரொஃபஷனலாகச் செய்வதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் பதிவு செய்தும் உள்ளோம். கீரை பிசினஸில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை உழைத்தாலே போதும், நல்ல வருமானம் ஈட்டலாம்.''

பெரிய பிசினஸ் முதல் சின்ன பிசினஸ் வரை காலத்துக்கு ஏற்ப புதுமையாக யோசித்தால் நிச்சயம் வெற்றிதான் என்பதற்கு ஓர் உதாரணம், இந்த கீரை அட்டை!

 

நாணயம் விகடன் 20.10.2013 இதழில் இருந்து


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close