Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழைகளுக்கு வங்கிக் கடன் மோடியின் கோரிக்கை நிறைவேறுமா?

ஏழைகளுக்கு கடன் தருவதினால் வங்கிகள் திவாலாகிவிடாது என்று பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய ரிசர்வ் வங்க் தொடங்கப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் முகமாக நடந்த கூட்டத்தில்தான் பிரதமர் மோடி இப்படி பேசியிருக்கிறார்.
 
பிரதமரின் இந்த பேச்சை வங்கி அதிகாரிகள் மனக்கனிவோடு பரிசீலிக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும். காரணம், இன்றைய நிலையில் தேசியமயமாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளாக இருந்தாலும், தனியார் வங்கிகளாக இருந்தாலும் சரி, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் தரத் தயாராக இருக்கிறதே ஒழிய, தனிமனிதர்களாக இருக்கும் நடுத்தர வர்த்தகத்தினருக்கும் ஏழைகளுக்கும் கடன் தர முடிந்தவரை மறுத்து வருகின்றன. 
 
உதாரணமாக, நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது வங்கிகள் வழங்கும் மொத்த கடனில் 44.59 சதவிகிதக் கடன் தொழில் துறைகளுக்கே தரப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தியா முழுக்க தொழில் நிறுவனங்களுக்கு 25.07 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. 
ஆனால், தனிமனிதர்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் வங்கிகளின் மொத்த கடனில் வெறும் 12.84 சதவிகிதம் மட்டுமே. அதாவது, தனிமனிதர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட கடன் 10.79 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இதில் வீட்டுக் கடனாக அளிக்கப்பட்டிருக்கும் தொகை 5.74 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. 
 
 
இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே வங்கிகள் எந்த வகையான கடனை அதிகம் தர விரும்புகின்றன என்பது தெளிவாக தெரியும்.
 
வங்கிகள் தனிமனிதர்களுக்கு அதிக அளவில் கடன் தர மறுப்பதற்கு காரணம், கடன் வாங்குபவர்கள் சரியாக கடன் தொகையை திரும்பத் தந்துவிடுவாரா என்கிற சந்தேகம்தான். இதற்காக கடன் தருபவரிடம் பிணையமாக சொத்துக்களை கேட்பது, அந்த சொத்துக்களில் சட்ட சிக்கல்கள் ஏதுமுள்ளதா என்று பார்ப்பது என்று தொடங்கி, பல்வேறு விஷயங்களை கவனிக்கும்போது கடன் தரும் விஷயமே சிக்கல் மிகுந்த விஷயமாக மாறிவிடுகிறது. 
 
இதேபோலத்தான் பர்சனல் லோன் தரும்போதும். கல்விக்கடன் தரும்போதுகூட பிணையமாக எந்த சொத்தையும் தரமுடியாதவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் சொல்லப்பட்டு, கடன் கிடைக்காமலே போகிறது. இதனால் அவர்கள் படிக்க நினைக்கும் படிப்பு படிக்க முடியாமலே போகிறது.
 
இதற்காக வங்கிகள் கடன் தரும்போது பின்பற்றும் நடைமுறைகளை யாரும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், பிரச்னைக்கான அடிப்படைக் காரணத்தை நாம் சரிசெய்யாமல் இருப்பதினாலேயே இந்தப் பிரச்னைகள் காலகாலத்துக்கும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. 
 
உதாரணமாக, நிலங்கள் குறித்த தகவல்களும் கணினிமயமாக்கப்பட்டால், அதிலுள்ள சிக்கல்களை உடனடியாக ஆராய்ந்தறிய முடியும். இதேபோல, கல்விக் கடன் பெறுபவர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும்போது அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் எங்கிருந்தாலும் எளிதாக கண்டுபிடித்து, கடனைத் திரும்ப வாங்கிவிட முடியும்.
 
இதுமாதிரியான அடிப்படை மாற்றங்களை செய்வதன் மூலம் அனைவருக்கும் கடன் தரக்கூடிய சூழ்நிலையை வங்கிகள் உருவாக்க முடியும்! ஆனால், இதற்கான சூழலை வங்கிகளுக்கு ஏற்படுத்தித் தருகிற கடமை அரசாங்கங்களுக்கு உண்டு என்பதை பிரதமர் மோடி முதலில் உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் முதலில் தன் கடமையை செய்தால், வங்கிகளும் தங்கள் கடமை நிறைவேற்றத் தயங்காது என்று நம்பலாம்!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close