Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் எதிர்பார்ப்பு- டெக்ஸ்டைல் துறையினர் என்ன சொல்கிறார்கள்?

ஏற்றுமதிக்குச் சலுகை!

டெக்ஸ்டைல் துறையின் சார்பில் 2017-18 பட்ஜெட்டில் உள்ள எதிர்பார்ப்புகளைப் பற்றி டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சக்திவேலுடன் பேசினோம்.  

“டெக்ஸ்டைல் துறையில் உள்ள தொழிலாளர் களுக்குக் குடியிருப்பும், பெண்கள் விடுதியும் கட்டித்தர வேண்டும் என ஒவ்வொரு வருடமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை இந்த பட்ஜெட்டிலாவது அரசு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 

மேலும், இந்த வருடம்  ஜிஎஸ்டி  அமல்படுத்தப்படும் என்பதால் அதில் ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகையை, வரி கணக்குத் தாக்கல் செய்யும்போதே கழித்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் வரியைச் செலுத்திவிட்டு, அதனை திரும்ப வாங்கும் முறை தேவையற்ற தாகவும் சிக்கலுக்குரியதாகவும் இருக்கிறது.


மேலும், ஜிஎஸ்டி-யில் 18 முதல் 20% வரி  டெக்ஸ்டைல் துறைக்கு விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியெனில் ரூ.10 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், அதில் வரியாக ரூ.2 கோடி நின்றுவிடும். அதைத் திரும்ப வாங்குவதற்கு ஆகும் காலத்தில், அந்தப் பணத்தை வைத்து, அடுத்த ஏற்றுமதி ஒப்பந்தத்தை முடிக்க எங்களுக்கு உதவியாக இருக்கும். 

அதேபோல், பொருட்களைத் துறை முகத்துக்குக் கொண்டு செல்லும்போதும், எடுத்து வரும்போதும் ஒவ்வொரு முறையும் விண்ணப்பப்படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி அல்லாமல் டெலிவரி நோட்டிலேயே அந்த அனுமதியையும் பெறும்வகையில் திட்டமிடப்பட வேண்டும். 

இவற்றையெல்லாம் செய்தால், நிச்சயம் நம்முடைய நாட்டின் பொருட்கள் உலகின் பல நாடுகளிலும் சிறந்ததாக இருக்கும். டெக்ஸ்டைல் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன’’ என்றார்.

மானியம் வேண்டும்!

தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் தலைவர் எம்.செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘டெக்ஸ்டைல் துறையில் இருப்பவர்கள் விருப்பப்பட்டால் வரி கட்டலாம் என்ற ஆப்ஷனல் முறை இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடர வேண்டும். அது மட்டுமல்லாமல், டெக்ஸ்டைல் துறைக்கு ஏற்கெனவே இருக்கிற அனைத்து சலுகைகளையும் தொடர வேண்டும். 

புதிதாக எந்தவிதமான வரியையும் அமல்படுத்தக் கூடாது. மேலும், முக்கியமாக தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் (Man Made) பொருட்களுக்கு ஜீரோ வரி என்பதை அமல்படுத்த வேண்டும். நூல் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும்; அப்படிக் குறைத்தால் ஏற்றுமதியும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ய மானியம் வழங்க வேண்டும்” என்றார். தொழில்துறையினரின் கோரிக்கை எவ்வளவு நிறைவேறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

- ஜெ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close