Published:Updated:

மீண்டும் சோனியா... காங்கிரஸ் செல்லும் திசை சரியானதுதானா?

சோனியா காந்தி
சோனியா காந்தி

சோனியா முன்புபோல் இல்லை. மில்லினியத்தின் தொடக்கக் காலங்களில் மின்னலெனக் கட்சிப் பணியாற்றிய அந்தப் பெண்ணை, அவரால் மீண்டும் கொண்டுவரவே முடியாது. துவண்டுகிடக்கும் கட்சியைத் தூக்கிநிறுத்த அவரிடம் என்ன திட்டங்கள் இருக்கிறதென்றும் தெளிவுற தெரியவில்லை.

’கணிக்க முடியாத கட்சி’ என்பதை காங்கிரஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறது. சச்சின், சிந்தியா என எல்லா இளம் தலைவர்களையும் இடதுகையால் ஒதுக்கிவிட்டு, மீண்டும் சோனியாவை தலைவர் ஆக்கியிருக்கிறார்கள். ’அடிமைத்தனம் என்பது ஒரு தீராவியாதி. வந்தால் போகவே போகாது’ என்று எழுதி ஒருவாரம்கூட ஆகவில்லை. அதற்குள், ‘ஆமாம், போகவே போகாது’ என்று அழுத்தமாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஒரே ஒரு கேள்வி எஞ்சி நிற்கிறது. இந்த முடிவை எடுப்பதற்குத்தான் 77 நாட்கள் ரூம் போட்டு யோசித்தீர்களா? ஏழு நிமிடங்களில் முடிவெடுத்து அறிவித்திருந்தால், கர்ணனின் கதையையெல்லாம் கண்டெடுத்து, கட்டுரை எழுத வேண்டிய அவசியமே இருந்திருக்காதே!

கர்ணனென தீரம்சூட வேண்டும், காங்கிரஸின் அடுத்த தலைவன்!
சோனியா காந்தி
சோனியா காந்தி

கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்... கடுப்பேற்றுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டியின் முடிவு. சோனியாவைப் பரிதாபத்திற்கும் பாவத்திற்கும் உரியவராக மாற்றி மகிழ்ந்திருக்கிறார்கள். அவரே விருப்பப்பட்டு தலைவர் பொறுப்பை ஏற்றாரா அல்லது கட்டாயப்படுத்தி ஏற்க வைத்தார்களா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், மனசாட்சியே இல்லாத நடவடிக்கை இது. அவருக்கு 73 வயதாகிறது. மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், அவரை மீண்டும் அலைக்கழிக்க முடிவு செய்திருப்பதன் அர்த்தம் புரியவில்லை.

’இது மனிதத்தன்மையற்ற செயல் (Inhuman)’ என்று, மாற்றுத்தரப்பின் சிவசேனாகூட கரிசனம் காட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மரக்கட்டையென நின்றுகொண்டிருக்கிறார்கள். மனசாட்சியை எந்த மார்வாடி கடையில் அடகு வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

என்ன சொல்வது... ஒரு காலத்தில், மூத்த தலைவர்களே காங்கிரஸின் மூச்சுக்குழாயாக இருந்தார்கள். கொல்கத்தா நவகாளியில் உண்ணாவிரதம் தொடங்கியபோது காந்தியின் வயது எழுபதுக்கு மேல். இந்தியாவின் இண்டு இடுக்கெங்கும் பிரசாரம் செய்து காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணை ஏற்றியபோது நேருவின் வயது, அறுபதைத் தாண்டியிருந்தது. அவசரநிலையை எதிர்த்து ’என்னைக் கைது செய்யுங்கள்’ என்று காமராஜர் அறைகூவியபோது, அவர் எழுபது வயதைக் கடந்திருந்தார். ராஜாஜியெல்லாம் வேற லெவல். எண்பது வயதிலும் புதிய கட்சி தொடங்கிப்போராடும் வலு அவரிடம் இருந்தது. ஏனென்றால், காந்தியும் நேருவும் காமராஜரும் ராஜாஜியும் கொள்கைப்பசியும் லட்சியதாகமும் கொண்டு அரசியல்களத்துக்கு வந்த பெருந்தகைகள். அதனால், எந்தச் சூழ்நிலையிலும் தளர்ந்துபோகாத தன்மை அவர்களுக்கு இயல்பாகவே இருந்தது. அது, கட்சியையும் காத்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களாக அறியப்படுபவர்கள் எல்லோருமே கொள்கையும் லட்சியமும் அற்ற வெற்றுவெடிகள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராஜஸ்தான் முதலமைச்சராக இருக்கிறாரே அசோக் கெலாட், அவர் அதில் கைதேர்ந்தவர். மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தும்கூட கெலாட் கேட்டகிரிதான். இவர்களால் இப்போது அல்ல, எப்போதுமே பா.ஜ.க-வின் தேசியவாத அரசியலைச் சரியாக எதிர்கொள்ள முடியாது. ஆயிரம் இருந்தாலும், பா.ஜ.க-காரர்களிடம் ஓர் அர்ப்பணிப்பு இருக்கிறது. அவர்கள் எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ்காரர்களுக்கு தியாகம் என்ற வார்த்தை கசக்கத்தொடங்கி நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதை உணர்ந்தே ராகுல் ராஜினாமா செய்தார். ’நானும் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டேன். இவர்களை வைத்துக்கொண்டு இந்த வண்டியை இனிமேலும் என்னால் செலுத்தமுடியாது’ என்ற விரக்தி, அவரது ராஜினாமா கடிதத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்த வலியை, அந்தத் துயரை உணர்ந்துகொள்ளாமல், ‘நீங்கள் விலகினால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள், பெரியவர்கள். ராகுலுக்குத் தெரியும். இவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கட்சியின்மீது அபிமானம் கொண்டவர்களல்ல என்று!

இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருகின்றன. அவை உலகப் புகழ்பெற்றவை. இலக்கிய அந்தஸ்து கொண்டவை. அத்தனை கடிதங்களிலும் நேரு ஒன்றையே திரும்பத் திரும்பச் சொன்னார். ‘கண்ணே! இத்தேசத்தின் மகத்துவம் ஜனநாயகம் அம்மா...’ என்று, பக்கம் பக்கமாகப் பாடம் நடத்தினார். ஆனால், இந்திரா ‘எல்லாம் சரி தந்தையே... சீதைக்கு ராமன் சித்தப்பனா பெரியப்பனா’ என்று கேட்டார். அதாவது, இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத் தலைவனின் மகள், சர்வாதிகாரத்தின்மீது மையல் கொண்டார். நேருவுக்கு இணையாகவே இந்திராவுக்கு ஜனநாயகப்பாடம் எடுத்தவர், அவர் கணவர் பெரோஸ். அவரும் புறக்கணிக்கப்பட்டார். ’சஞ்சய்காந்திக்கு சட்டை பட்டன் போட்டுவிட்டால் அமைச்சர் பதவி அடைந்துவிடலாம்’ என்று, நாடாளுமன்ற வளாகத்தில் நகைச்சுவை துணுக்குகள்கூடப் பகிரப்பட்டன. காங்கிரஸின் இந்த இழிநிலையை எதிர்த்து நின்ற எல்லா காந்தியவாதிகளையும், இந்திரா கட்டம் கட்டினார். கடைசிவரை போராடியவர் காமராஜர் மட்டும்தான். அவர் மறைந்ததும், காந்தியின் காங்கிரஸும் மறைந்தது.

சோனியா காந்தி, அகமது படேல்
சோனியா காந்தி, அகமது படேல்

2004 - 2014 காலகட்டத்தில் காங்கிரஸின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவராக இருந்தவர் யார் தெரியுமா? சோனியாவோ ராகுலோகூட அல்ல. அவர்களிடம்கூடத் தைரியமாகக் கட்சியினர் பேசிவிடும் சூழல் இருந்தது. அந்த மனிதர், அகமது படேல்! அவர், காந்தியப் போராட்டங்களால் கட்சியில் உச்ச இடத்துக்கு வந்த தியாகி அல்ல. அவர், சோனியாவின் அரசியல் ஆலோசகர் மட்டுமே. இன்னும் சொன்னால், ஓர் உதவியாளர். ஆனால், இந்தியாவை பத்து ஆண்டுகள் ஆட்டிவைக்க அந்தத் தகுதியே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இப்போதும்கூட, அடுத்த காங்கிரஸ் தலைவர் பஞ்சாயத்தை அகமது படேலிடம்தான் விவாதிக்கப் போனார்கள் கார்கேவும், திக் விஜய் சிங்கும். இருவரும் யார்? கர்நாடக காங்கிரஸின் ஆணிவேர் கார்கே. மத்தியப்பிரதேச காங்கிரஸின் மையமனிதன் திக் விஜய் சிங். ஆனால், அப்படிப்பட்ட இரண்டு மக்கள் தலைவர்களை ஆட்டிவைக்கும் அதிகாரம் கொண்டவராக அகமது படேல் எனும் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கிறார். இந்தத் தலைகீழ் அணுகுமுறைதான், காங்கிரஸை சீவி சிங்காரித்து புதைகுழிக்குள் தள்ளியது. இதோ, இப்போது மீண்டும் அதே புதைகுழியைப் புதுப்பித்திருக்கிறார்கள். சோனியாவின் பின்னால் நின்று, அகமது படேல்தான் இனி காங்கிரஸை ஆளப்போகிறார்.

மோடி யாரையெல்லாம் ஆயுதமாக்குகிறார் என்று பார்த்தால் அனைத்தும் விளங்கும். மராட்டியத்துக்குப் போனால் அவர் சரத்பவாருக்காக உருகுகிறார். ஆந்திரத்துக்கு வந்தால் அவர் நரசிம்ம ராவுக்கு நியாயம் கேட்கிறார். அவர் தெளிவாக அடிக்கிறார். ‘நான் எதிர்ப்பது காங்கிரஸை அல்ல; காங்கிரஸின் தலைமையை... அந்த ஒற்றைக் குடும்பத்தை’ என்று துல்லியமாக நிறுவுகிறார். சாமானியன் யோசிக்கிறான். ‘அவர் சொல்றதும் சரியாத்தானே இருக்கு...’ என்ற இடத்துக்கு வந்து சேர்கிறான். உடனே, காங்கிரஸ் அவனுக்கு அந்நியமாகிறது. எவ்வளவோ வற்புறுத்தியும் ராகுல் ராஜினாமாவைத் திரும்பப் பெறாததற்கான காரணம், அதுதான். ’தலைவனைத் தயவுசெய்து வெளியே தேடுங்கள்’ என்று காலில் விழாத குறையாக மன்றாடினார், அவர். ஆனால், ரத்தம் சதை நாடி நரம்பு என அனைத்திலும் அடிமைத்தனம் நிரம்பியிருக்கும் கூட்டம், மீண்டும் சோனியாவின் பின்னால் சொகுசாக ஒளிந்துகொள்ளத் தீர்மானித்திருக்கிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

ஏற்கெனவே சொன்னதுதான். சோனியா முன்புபோல் இல்லை. மில்லினியத்தின் தொடக்கக் காலங்களில் மின்னலெனக் கட்சிப் பணியாற்றிய அந்தப் பெண்ணை, அவரால்கூட மீண்டும் கொண்டுவரவே முடியாது. துவண்டுகிடக்கும் கட்சியைத் தூக்கி நிறுத்த அவரிடம் என்ன திட்டங்கள் இருக்கிறதென்றும் தெளிவுற தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலே, அவர் மோதப்போவது ஆட்சியைக் கலைத்த பிறகும் அன்புகாட்டிய வாஜ்பாய்களோடு அல்ல. அவரை வார்த்தைக்கு வார்த்தை அந்நியப் பெண்ணென வசைபாடும் அமித் ஷாக்களோடு. அவருக்கு அரண் அமைக்க ஷீலாவும் இப்போது இல்லை. சோனியாவுக்கு உண்மையான சோதனைக்காலம் இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.

ராகுல் இனி என்ன ஆவார்?

ராகுலின் முடிவை ‘காலத்தின் கட்டாயம்’ என்று காங்கிரஸ்காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். பதவியில் இல்லாவிட்டாலும் ராகுல்தான் இந்திய அளவில் காங்கிரஸின் முகம். அது மாறப்போவதில்லை. மோடி இனிமேலும் பதில் சொல்லும் காங்கிரஸ்காரராக ராகுல்தான் இருக்கப்போகிறார். இதுவும் உறுதி. ஏனென்றால், நேருவின் கொள்ளுப்பேரனாக அல்ல; இந்திராவின் பேரனாக அல்ல; ராஜீவின் மகனாக அல்ல... தனியாகவே ராகுல் சிறந்த அரசியல்வாதியாக உருமாறியிருக்கிறார். ’கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப அளிப்பேன்’ எனும் முடிவை, ஒரு சிறந்த அரசியல்வாதியாலேயே எடுக்க முடியும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அடிப்படையிலேயே, ராகுல் பதவிக்கு ஆசைப்படாதவர். அவர் நினைத்திருந்தால் 2009-ம் ஆண்டே பிரதமர் ஆகியிருக்க முடியும். அவரை எதிர்ப்பதற்கு அப்போது கட்சியிலும் யாருமில்லை, கட்சிக்கு வெளியிலும் யாருமில்லை. மோடியும் அமித் ஷாவும் அப்போது காட்சியிலேயே இல்லை என்பதும் முக்கியம். ராகுலின் தந்தை ராஜீவ்கூட அரசியலில் குதித்தபோதே பிரதமராகத்தான் குதித்தார். ஆனால், ராகுல் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். காத்திருக்கத் தயாராக இருந்தார். இது மட்டுமே ராகுலை மற்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. அப்புறம், பா.ஜ.கவை அதன் சித்தாந்தத்தோடு சேர்ந்து எதிர்க்கக் கூடியவராகவும் அவர் மாறியிருக்கிறார். மோடியின் சென்ற ஆட்சிக்காலத்திலேயே, அவர் ஆர்.எஸ்.எஸ்ஸைக் கட்டம் கட்டினார். அதற்காக, அவர்மீது அவதூறு வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், ’எது வந்தாலும் எதிர்ப்பதை விடேன்’ என்று கன்னத்தில் குழிவிழச் சொல்லிவிட்டு நகர்ந்தார், அவர். ராகுலிடம் மோடியின் சிம்மத் துணிச்சலை எதிர்பார்க்க முடியாது. அமித் ஷாவின் வேங்கைவியூகத்தையும் கூட எதிர்பார்க்க முடியாது. ஆனால், மறைந்திருக்கும் ஒற்றை யானையின் மனதிடத்தை, அவரிடம் எதிர்பார்க்கலாம்.

ராகுலுக்கு முன்னே இருப்பது ஒரேயொரு வழிதான். அது காந்தி வகுத்துத் தந்த வழி. உண்மையில், காந்தி எத்தனை ஆண்டுகள் காங்கிரஸின் தலைவராக இருந்தார் தெரியுமா? வெறும் ஓர் ஆண்டு. ஆம், ஒரேயோர் ஆண்டு! 1923 - 1924 வரை என்று நினைவு. ஆனால், காங்கிரஸ் இயக்கத்தின் அச்சாணியாக அவரே இருந்தார். அதற்கு அவருக்கு ‘தலைவர்’ பதவியெல்லாம் அவசியப்படவில்லை. என்றுமே, ’காங்கிரஸின் தலைவர்’ என்பதற்காக காந்தியின் பின்னால் மக்கள் அணி திரண்டதில்லை. அவர் ’காந்தி’ என்பதால் திரண்டார்கள். அப்போது, போராட்ட அறிவிப்புகள் இந்தியக் கிராமங்களுக்குள் பரவும். ஏவப்பட்ட அம்பென மக்கள் புறப்படுவார்கள். பெட்டிக்கடையில் வெத்தலை போட்டபடி இருக்கும் ஓர் ஊர் பெருசு, ‘எங்கப்பா இவ்வளவு வேகமாய்ச் செல்கிறீர்கள்’ என்று கேட்பார். ‘காந்தி அழைக்கிறார்‘ என்று சொல்லிக் கடப்பார்கள், மக்கள். ஆம்! ’காந்தி அழைக்கிறார்.. காந்தி வருகிறார்.. காந்தி பேசுகிறார்... ‘ என்றே இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்தது இந்திய மனம்.

காந்தி
காந்தி

காந்தி பெரிய பேச்சாளர் இல்லை. மழையில் நனைந்த தென்னங்கீற்று சரிந்துவிழும் ஓசையை ஒத்திருக்கும் அவரது குரலொலி. ஆனால், அவரது கருத்து போய்ச்சேராத பகுதியென்று இந்தியாவில் எதுவும் இருக்கவில்லை. ஒடிசாவில் ஒரு கூட்டம். காந்தி கலந்துகொள்கிறார். கூட்டம் முடிந்ததும், கட்சிக்கு நிதிதிரட்டும் நிகழ்வு ஆரம்பமாகிறது. செல்வசீமாட்டிகள் பலர் பவுன் கணக்கில் நகைகளைக் கழற்றித் தருகிறார்கள். காந்தி அவர்பாட்டுக்கு இருக்கிறார். அப்போது, ஒரு மூதாட்டி நெரிசலைக் கடந்துவந்து ஒரு தேய்ந்த செப்புக்காசை காந்தியிடம் அளிக்கிறார். ‘காந்தி... நீ நல்ல காரியம் செய்கிறாய். என்னால் முடிந்தது இது...’ என்று காரணம் சொல்கிறார். காந்தி திகைத்து எழுகிறார். உள்ளங்கையில் இருக்கும் காசை உற்றுப்பார்த்தபடியே நிற்கிறார். சின்னதாய்ச் சிரித்துவிட்டு, சேலை முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்தபடியே நகர்கிறார், அந்த மூதாட்டி. காந்தியுடன் கடைசிவரை இருந்தது அந்தச் செப்புக்காசு.

'மெலிந்த உடலும் மெல்லிய குரலும் கொண்ட ஓர் எளிய மனிதனால் எப்படி இந்தியாவைச் சுதந்திரத்தை நோக்கிச் செலுத்த முடிந்தது’ எனும் கேள்விக்கு, அந்தச் செப்புக்காசுதான் ஒரே பதில். அதுதான் காந்தி உலகுக்கு அளித்த முக்கியச் செய்தியும்கூட. ’மக்கள் உன்னுடன் இருந்தால் எப்படிப்பட்ட எதிரியையும் உன்னால் வீழ்த்த இயலும்’ என்ற காந்தியின் செய்தியை அடியொற்றியே பின்னாளில் மண்டேலாக்களும் மார்ட்டின்களும் எழுந்துவந்தார்கள். இதை, ராகுல் உணரவேண்டும். உணர்ந்ததை, காங்கிரஸ்காரர்களுக்குக் கடத்த வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாத, இந்திராவின் காங்கிரஸ், மீண்டும் தியாகமும் தீரமும் கொண்ட காந்தியின் காங்கிரஸாக மாறவேண்டும்.

ஆக, காந்தியின் தியாகமும் அவரின் அறஅரசியலும் மட்டுமே காங்கிரஸைக் கரைசேர்க்கக் காத்திருக்கும் கடைசி வண்டி. அதையும் தவறவிடுவதுதான் இறுதிமுடிவு என்றால், கட்சிக்குக் காரியம் செய்யும் வேலைகளை இப்போதே அகமது படேலிடம் ஒப்படைத்துவிடலாம்... காலத்தின் கையில் இருக்கிறது முடிவு!

அடுத்த கட்டுரைக்கு