Published:Updated:

வேகமெடுக்கும் அ.ம.மு.க..! -தினகரனின் திட்டம் வெற்றி பெறுமா?

Dhinakaran
Dhinakaran

2019 நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விகளில் துவண்டுவிடாமல், அடுத்தகட்ட வியூகத்தை வகுத்துக் களமிறங்கியுள்ளது அ.ம.மு.க.

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிர்பார்த்த அளவு வெற்றியை அ.ம.மு.க-வால் பெறமுடியவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சின்னம் போன்ற குளறுபடிகளால்தான் வெற்றிக்கனி பறிபோனதாக, அக்கட்சி கூறிவருகிறது. ஆனால், வெற்றி பறிபோனதற்கு, கட்சியின் கட்டமைப்பு வலுவில்லாததும் கூட்டணி இல்லாததும்தான் முக்கியக் காரணம் என அக்கட்சியினரே ஒத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்று முக்கியப் பணிகளை அ.ம.மு.க முடுக்கிவிட்டுள்ளது.

தினகரன்
தினகரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க மாநில நிர்வாகி ஒருவர், ``முதலாவது, மாவட்டம்தோறும் புதிய நிர்வாகிகள் நியமனம் முழுவீச்சில் நடைபெறுகிறது. கிளைக்கழகம் முதல், அணிகளின் மாநில நிர்வாகிகள் வரை நியமனங்கள் நடக்கின்றன. ஒருசில அணிகளில், மாநில தலைமையையே மாற்றிவிட்டு புதியவர்களை நியமிப்பதற்கும் ஆலோசனை நடந்து வருகிறது. செப்டம்பர் முதல்வாரத்துக்குள் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தினகரன் பார்வைக்கு அனுப்பப்படவுள்ளன.

இரண்டாவது, தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்து இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டன. தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கட்சியினரிடையே கொந்தளிப்பு எழுந்தது. இதுகுறித்து, சில மூத்த நிர்வாகிகளிடம் பேசிய டி.டி.வி.தினகரன், `எல்லாமே சரியாகத்தான் போய்ட்டு இருக்கு. தேர்தல் ஆணையம் சில நடைமுறைகளை தாமதமாகத்தான் செய்யும். மற்றபடி, நாம கவலைப்படுற அளவுக்கு ஒண்ணுமில்ல’ என்று நம்பிக்கை ஊட்டினார்.

Dhinakaran
Dhinakaran

மூன்றாவது, நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது. அதற்குள்ளாக அ.ம.மு.க. வலுவாக உள்ள டெல்டா, தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் மும்முரமாகியுள்ளார் தினகரன். மயிலாடுதுறையில் நடந்த இயற்கை வளம், கனிம வளம் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றதும் இத்திட்டத்தின் ஒருபகுதி தான். ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்” என்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா தொகுதிகளில் மட்டும் 3,41,922 வாக்குகளை அ.ம.மு.க வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இது அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளில் 15.19 சதவிகிதமாகும். சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய ஒன்பது தென்மாவட்ட தொகுதிகளில் 8,91,676 வாக்குகளை அ.ம.மு.க பெற்றுள்ளது. இது அ.ம.மு.க பெற்ற மொத்த வாக்குகளில் 39 சதவிகிதமாகும். டெல்டா, தென்மாவட்டங்களில் உரிய கவனம் செலுத்தினாலே, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடும்படி வெற்றியை அள்ளிவிடலாம் என அ.ம.மு.க கணக்குப் போடுகிறது.

Dhinakaran
Dhinakaran

மாநகராட்சிகளில் கவுன்சிலர், மேயர் பதவிகளுக்கான தேர்தல் தனித்தனியே நடத்தப்படவுள்ளன. மேயர் பதவிக்கான போட்டியில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் வெற்றி பெற்றாலும், கவுன்சிலர்கள் அ.ம.மு.க-வினராகத்தான் இருக்க வேண்டும் என தினகரன் முடிவெடுத்துள்ளாராம். இதன்மூலமாக, கட்சியின் கடைக்கோடித் தொண்டனும் பயன்பெறுவதோடு, கீழ்மட்டம் வரையிலும் கட்சி வலுப்பெறும் எனக் கருதுகிறாராம்.

அடுத்த கட்டுரைக்கு