Published:Updated:

`உரிமம் ரத்து; கான்ட்ராக்டர்களுக்கு செக்!'-மதுரைப் புள்ளியைக் கலங்கவைத்த தூத்துக்குடி கமிஷனர்

தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சியை மிரட்டிப் பணிய வைத்துக்கொண்டிருந்த கட்டப் பஞ்சாயத்துக் கூட்டம், ஆணையரின் நடவடிக்கையால் ஓட்டம் பிடித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் முன்னாள் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த 51 கட்டணக் கழிப்பிடங்களை மாநகராட்சிவசமாக்கி அவற்றை இலவசக் கழிப்பிடமாக அறிவித்த ஆணையர் ஜெயசீலனின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக அனைத்துப் பகுதிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. மொத்தமுள்ள 54 கழிப்பறைகளில் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், தீயணைப்பு நிலையம் அருகில் என 3 கழிப்பறைகள் மட்டுமே மாநகராட்சி சார்பில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. மற்ற கழிப்பறைகளை ஆளுங்கட்சியினர், முன்னாள் அ.தி.மு.க வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் நடத்திவந்தனர்.

ஆணையர் ஜெயசீலன்
ஆணையர் ஜெயசீலன்

கடந்த பிப்ரவரி மாதம் ஆணையராகப் பொறுப்பேற்ற ஜெயசீலன், மாநகராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணிகள், சாலைகள், தண்ணீர் விநியோகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய திடீர் விசிட் அடித்தார். அப்போது, கழிப்பிடங்களுக்கு மாநகராட்சியிலிருந்து இலவசமாகத் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தும், அதன்மூலமான வருமானங்களை மாநகராட்சிக்குத் தராமல் ஆண்டுக்கணக்கில் கட்சியினரே அனுபவித்து வருவதாக ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய கமிஷனர், குத்தகைக்கு விடப்பட்டிருந்த 3 கழிப்பறைகளின் குத்தகை உரிமங்களை ரத்து செய்ததுடன், `அனைத்துக் கழிப்பறைகளையும் மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம்' என அறிவித்தார்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்கள், இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய ஒப்பந்தங்களை மதுரையைச் சேர்ந்த கட்டப்பஞ்சாயத்துப் புள்ளியைத் தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. இதில், நடந்த பஞ்சாயத்தில் 2011-ல் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளரான ஏ.சி.அருணா கொலை செய்யப்பட்டார் என்பதையும் ஆளும்கட்சியினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இருசக்கர வாகன  காப்பகம்
இருசக்கர வாகன காப்பகம்

மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். ``மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ரூ.400 கோடி அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில், `ஊழல் தலைவிரித்தாடும். கொஞ்சம் உஷாராக இருங்க சார்' என புதிய ஆணையராக ஜெயசீலன் பொறுப்பேற்றதும், சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கமிஷனர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தநிலையில், பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றுவதற்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், 5 லட்சம் ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. இதில், 10 லட்சம் வரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினார் கமிஷனர். டெண்டருக்குப் பின்னால் மதுரைப்புள்ளியின் ஆட்டம் இருந்ததும் தெரியவந்தது.

பழைய, புதிய இருசக்கர வாகன நிறுத்துமிடம் குத்தகை அரசியல் குறித்தும் தெரிய வர, அவற்றின் குத்தகையையும் அதிரடியாகக் கேன்சல் செய்து மாநகராட்சியின் வசமாக்கினார். அத்துடன் மாநகராட்சிக்குச் சொந்தமான இரண்டு திருமண மண்டபங்களும் மீட்கப்பட்டன. கழிப்பறை, மண்டபங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகராட்சிப் பகுதியில் போடப்படும் சாலைகள் தரமானதா இல்லையா என்பதை ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழுவை நியமித்திருக்கிறார். `சாலைகளின் தரம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அதற்கான பில்கள் பாஸ் ஆகும்' என அறிவித்ததால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் கான்ட்ராக்டர்கள்” என்கின்றனர் விரிவாக.

புதிய பேருந்து நிலைய வாகன நிறுத்தம்
புதிய பேருந்து நிலைய வாகன நிறுத்தம்

``மாநகராட்சிக்கு வரவேண்டிய வருமானத்தை அனுபவித்துவந்த சில தனிமனிதர்கள் மீது ஆணையர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரம், புதிதாக பணிக்கு வரும் எல்லா அதிகாரிகளுமே மேற்கொள்ளும் அதிரடியைத்தான் ஜெயசீலனும் செய்கிறார். எத்தனை நாள்களுக்கு இந்த அதிரடிகள் தொடரும் எனப் பார்ப்போம்” என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலனிடம் பேசினோம், ``வழக்கமான எனது பணிகளைத்தான் செய்து கொண்டு வருகிறேன். இதில் எந்த அதிரடியும் இல்லை” என்றார் இயல்பாக.

`கமிஷனரின் அதிரடியைப் பொறுத்துக் கொள்ள முடியாத உள்ளூர் அ.தி.மு.கவினர், அவரைப் பணியிட மாற்றம் செய்வதற்காகப் பலவழிகளில் காய் நகர்த்தி வருகின்றனர்' என்கின்றனர் மாநகராட்சி வட்டாரத்தில்.

அடுத்த கட்டுரைக்கு