Published:Updated:

`அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என பிரசாரம் செய்ய வேண்டிவரும்!’ - எச்சரித்த கே.எஸ் அழகிரி!

சிந்து ஆர்

பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாவிட்டாலும் அதுபற்றி தெரிந்தவர்களை உடன் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் துரதிர்ஷ்டமாக அமித் ஷாவை உடன் வைத்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இலங்கையில் சமீப காலமாக தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் தினமும் போராட்டம் நடந்துவருகிறது. இலங்கையில் கூட்டாட்சி முறை இல்லாததால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ராஜீவ்காந்தி கொண்டுவந்ததுபோல இலங்கையில் 13வது அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதன்மூலம் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்தான் தமிழர்களுக்கு நிலையான வாழ்வு கிடைக்கும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தி.மு.க. முயற்சி செய்ய வேண்டும்.

அரசியலில் வழக்குகளும், சிறை வாசமும் வரும் காரணத்தால் பணிந்துவிடுபவர்கள் அல்ல நாங்கள். எல்லாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்திருப்பதில் அரசியல் சார்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பெருமையை சிதைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், சசிதரூர், சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு போடப்படுகிறது.

பொருளாதாரத்தில் ஓர் அழிவு சுனாமி ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-யின் அனுபவம் இன்மைதான் காரணம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது. பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாவிட்டாலும் அதுபற்றி தெரிந்தவர்களை உடன் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் துரதிர்ஷ்டமாக அமித் ஷாவை உடன் வைத்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

வெளிநாடு சென்றுள்ள முதல்வரின் முயற்சியை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்பு இரண்டுமுறை முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அது தொடர்பான வெள்ளை அறிக்கை தேவை.

நிதி ஆயோக், வரும் காலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி வழங்கப்படும் என்றும், நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. இது தமிழக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழகத்தில் முன்பைவிட மக்கள்தொகை குறைந்துள்ளது. இதனால் குறைந்த நிதி கிடைப்பதுடன் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழகத்திற்கு கிடைப்பார்கள். நிதி ஆயோக் இந்த நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படும்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ரஜினி அரசியலுக்கு வருவாரா, வந்தால் பி.ஜே.பி-யில் இணைவாரா என்பதுகுறித்து இப்போது கூற முடியாது. இதையும் மீறி மக்கள் மன்றத்தில் நுழைய முடியும் என்ற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஸ்டாலின் மீது ஒரு வழக்கும் இல்லை. அப்படி உள்ளபோதும் அவர் கைது பயத்தில் உள்ளார் என அமைச்சர் கூறுவது தவறு. பேரிடர் காலங்களில் எளிதில் வந்து செல்லும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்" என்றார்.