Published:Updated:

`கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை!' - டெல்லி அரசு

ஆ.பழனியப்பன்

'ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், தேசத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை' என்று டெல்லி அரசின் உள்துறை முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கன்னையா குமார்
கன்னையா குமார்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தலைவராக 2015-ம் ஆண்டு தேர்வுசெய்யப்பட்டவர், கன்னையா குமார். இவர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர். பல்கலைக்கழக வளாகத்தில், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில், தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக கன்னையா குமார், டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது ஐ.பி.சி 124ஏ மற்றும் 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கன்னையா குமார்
கன்னையா குமார்

நாடாளுமன்றக் கட்டடத்தின்மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியான அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக கன்னையா குமார் உரையாற்றியதாகச் செய்திகள் வெளியாகின. அந்த குற்றச்சாட்டை கன்னையா குமார் மறுத்தார். அவர் ஆற்றியதாகச் சொல்லப்பட்ட உரை, காவல் துறையால் மோசடியாக உருவாக்கப்பட்ட ஆடியோ என்றும், கன்னையா குமார் மீதான குற்றச்சாட்டு தவறானது என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம், இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. விசாரணைக்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டபோது, சில வழக்கறிஞர்களாலும் வெளிநபர்களாலும் அவர் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். கன்னையா குமார் மீதான தாக்குதலை விசாரிப்பதற்கு விசாரணைக் குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்தது. பிறகு, கன்னையா குமாருக்கு ஆறுமாத காலம் பிணை வழங்கியது, டெல்லி உயர் நீதிமன்றம்.

கன்னையா குமார்
கன்னையா குமார்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பீகார் மாநிலம் பெகுசாரா தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகளைப் பெற்றார், கன்னையா குமார். இதற்கிடையில், தன் பிஹெச்.டி ஆய்வுப் பட்டமும் பெற்றார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பாகிய தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராகவும் அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கு, இம்மாதம் 18-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், 2016-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசத் துரோகச் செயல் எதிலும் அவர் ஈடுபடவில்லை என்ற முடிவுக்கு டெல்லி அரசின் உள்துறை வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Arvind Kejriwal
Arvind Kejriwal

இதுகுறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கில், அவர்மீது விசாரணை தொடர்வதுகுறித்து இதுவரை உள்துறை அமைச்சகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த வழக்கில், அனைத்து தகவல்களையும் ஆய்வுசெய்தபின்னர் முடிவு எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை'' என்றார்.