Published:Updated:

எம்.எல்.ஏ. மகன் திருமணத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் மறியல்; கைது!

சிந்து ஆர்

பிரின்ஸ் எம்.எல்.ஏ. மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கையோடு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

K.S Alagiri - Vasanthakumar MP
K.S Alagiri - Vasanthakumar MP

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸின் மகனின் திருமண நிகழ்ச்சி நேற்று மாலை மார்த்தாண்டத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை கன்னியாகுமரி மாவட்டம் வந்தார்.

Protest by K.S Alagiri and other congress party members
Protest by K.S Alagiri and other congress party members

குமரியில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை காலையில் தொடங்கிவைத்தார். மாலையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ-வின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கொறடா ராமசாமி, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ஹசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

K.S Alagiri - Vasanthakumar MP
K.S Alagiri - Vasanthakumar MP

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மண்டபத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள காந்தி மைதானம் அருகே சென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

திகார் சிறை; தனியறை! - ப.சிதம்பரத்தைப் பதறவைத்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம்

மறியல் நடந்தது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ. மகன் திருமணத்துக்கு வந்த இடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.