Published:Updated:

நாங்குநேரியில் தனித்து நின்று ஜெயிக்க முடியாதா? - கூட்டத்தில் பொங்கிய கே.எஸ்.அழகிரி

பி.ஆண்டனிராஜ்

``நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஏன் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாதா'' என கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்வீரர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவகாரம் கூட்டணிக் கட்சியான தி.மு.க தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது வரும் என்பதுகுறித்து அரசியல் கட்சியினரிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், இடைத்தேர்தலை நாங்குநேரி தொகுதி சந்திக்க இருக்கிறது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

செயற்குழுக் கூட்டம்
செயற்குழுக் கூட்டம்

ஆனால், இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விரும்பும் நிலையில், தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், நாங்குநேரி தொகுதியில் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரான சஞ்சய்தத், மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரும், நாங்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைச் செயலாளரான எஸ்.எஸ்.ராஜேஷ் பேசுகையில், ‘பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்படும் என்ற நிலையை மாற்ற வேண்டும். உள்ளூர் கட்சியினருக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும்’ என்று பேசி கைதட்டலைப் பெற்றார்.

நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தலில் எனது குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிட மாட்டார்கள்.
ஹெச்.வசந்தகுமார்

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், ‘’இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் எனது குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிட மாட்டார்கள். காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கமிட்டியும் யாரை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை வெற்றிபெற வைக்கப் பாடுபடுவேன்’’ என்று பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன், ‘’தற்போது காங்கிரஸ் கட்சியில் நிலவும் அசாதாரண நிலையை மாற்ற வேண்டுமானால், நாங்குநேரி தொகுதியில் நாமே போட்டியிட வேண்டும். நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்ற ஒரே தொகுதியாக இது இருப்பதால், மீண்டும் நாமே போட்டியிட்டு வெற்றிபெற்றால், நாட்டின் அரசியலில் மாற்றம் ஏற்படும். அதனால் புதிய வரலாறு படைக்க கே.எஸ்.அழகிரி பாடுபட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பேசும் கே.எஸ்.அழகிரி
கூட்டத்தில் பேசும் கே.எஸ்.அழகிரி

கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘’இது, காங்கிரஸ் கட்சியின் எஃகு கோட்டை. இந்தத் தொகுதியில் நாம் தனித்துப் போட்டியிட வியூகம் வகுக்க வேண்டும். அதன் மூலம் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். இந்த வெற்றி, நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமையும்’’ என்றார்.

`ஒண்டிவீரனுக்கு மரியாதை!’ - நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முந்தும் தலைவர்கள்?

விழாவில் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, ‘’தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர். காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி. அதை மேலும் பலப்படுத்தவே இந்தக் கூட்டம். நாம் 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நமது கட்சிக்கு அதிகமான பலம் இருப்பதால், ஏன் தனித்து நின்று வெற்றிபெற முடியாது?

ஆவேசமாகப் பேசும் கே.எஸ்.அழகிரி
ஆவேசமாகப் பேசும் கே.எஸ்.அழகிரி

கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றிபெறாது. மேடைக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். ஆனால், நமது கட்சியினரிடம் அது இருக்கவில்லை. இது, காமராஜரின் காங்கிரஸ். அவரது பெருமை என்னவென்று சொன்னால், அவர் தனி மனிதனாக இந்த மண்ணில் கால்பதித்தார். நாம் பலமான கூட்டணியில் இருக்கிறோம். அதனால், கூட்டணிக் கட்சியினருடன் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிப்போம்’’ என்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், ’நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறவைப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.