பக்தனுக்கு இரங்கிய கண்ணன்!

சிறுகதை
பக்தனுக்கு இரங்கிய கண்ணன்!
 

ராட்டிய மாநிலம் பண்டரிபுரத்தில் வாழ்ந்தவன் புண்டரீகன். முதுமையடைந்த பெற்றோரைப் பற்றிக் கவலைப்படாமல் காசிக்குக் கிளம்பினான் அவன். ஆனால், அதற்கான வழி அவனுக்குத் தெரியவில்லை.

எனவே, குக்குடா என்னும் முனிவரை அணுகி வழி கேட்டான். அவர், ‘தெரியாது’ என்றார். அங்கு இரவைக் கழித்தான்.

மறு நாள் காலையில் மக்கள், தங்களது பாவங்களைத் தொலைப்பதற்காக புண்ணிய நதிகளில் நீராடி, குக்கடா முனிவரிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றனர். இதைக் கண்டான் புண்டரீகன். தாய்- தந்தையருக்குச் செய்யும் சேவையினால் கிடைக்கும் புண்ணிய பலன்களைப் பற்றித் தெரிந்து கொண்டான். உடனே தனது தவறைப் புரிந்து கொண்டு, காசிக்குப் பயணத்தைத் தொடராமல் வீடு திரும்பினான். பின்னர் தன் தாய்- தந்தையருக்குத் தொண்டு செய்து அதில் திருப்தி அடைந்தான்.

அந்த சந்தர்ப்பத்தில் துவாரகையில் கண்ணன் ராதையு டன் மிகவும் நெருக்கமாகப் பழகியதால் ஆத்திரமடைந்த ரகுமாயி (ருக்மணி) மனம் வருந்தினாள். கண்ணன் அவளிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தும், ஏற்றுக் கொள்ளாமல் பண்டரீபுரம் அருகே உள்ள திண்டிர் வனத்துக்குப் புறப்பட்டாள் ரகுமாயி.

மனைவியைப் பிரிந்திருக்க முடியாத கண்ணனும் அங்கு சென்றான். ஆனால், ரகுமாயி கண்ணனை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் கண்ணன் மாறுவேடத்தில் புண்டரீகனைப் பார்க்கப் பண்டரீபுரம் சென்றான்.

பெற்றோருக்குத் தொண்டு செய்யும் புண்டரீகனைச் சோதிக்க விரும்பினான். வீட்டுக்கு வெளியே நின்று புண்டரீகனை அழைத்தான் கண்ணன். பெற்றோர் தூங்கிய பிறகே தன்னால் வெளியே வர முடியும் என்று கூறினான் புண்டரீகன்.

அப்போது அங்கு வந்த புண்டரீகனின் குரு, ‘‘கிருஷ்ண பரமாத்மா உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்!’’ என்று கூறினார். அப்போதும் அசையாத புண்டரீகன், ‘‘பெற்றோரும் கடவுள்தான்’’ என்று சொல்லி குருவை ஆச்சரியப்பட வைத்தான். அவனுடைய உறுதியைக் கண்டு மகிழ்ந்த கண்ணன், ‘‘என்னை தரிசிக்க நீ விரும்பவில்லையா?’’ என்றான்.

‘‘எதுவாக இருந்தாலும் பெற்றோர் உறங்கிய பிறகு வந்து பேசுகிறேன்’’ என்று சொல்லி விட்டான் புண்டரீகன். பெற்றோரிடம் அவன் கொண்ட பக்தியையும் மரியாதை யையும் கண்ட கிருஷ்ணன் வியப்படைந்து, தன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தான். பிறகு, கண்ணனை தரிசனம் செய்த புண்டரீகன், ‘பீம நதிக் கரையிலும் இதே கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும்’ என்று பிரார்த்தித்தான். கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொண்டான்.அதே நேரம் கணவருடன் ஏற்பட்ட மனக் கசப்பு நீங்கிய ரகுமாயியும் அங்கு வந்து சேர்ந்தாள். புண்டரீ கனின் விருப்பப்படி பண்டரீபுரத்தில் பீம நதியின் மேற்குக் கரையில் பாண்டுரங்கனும் ரகுமாயியும் எழுந்தருளினர்.

கலி காலத்தில் இறைவனை அடைய எளிய வழி அவனது திருநாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பதுதான். பாண்டுரங்கனின் திருநாமத்தைப் பாடி நாமும் உயர்வடைவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick