வாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்!

அலைமகளே வருக


கேட்கும் வரம் அனைத்தையும் வாரி வழங்குபவள், ஸ்ரீலட்சுமி. அவளது அவதார நன்னாள், விரதம் அனுஷ்டித்து வணங்கும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவே வரலட்சுமி விரதம்!

பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, மேரு மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தபோது, உயர்ந்த பல விஷயங்கள் உதித்தன. அந்தத் தருணத்தில் தோன்றியவளே ஸ்ரீமகாலட்சுமி. வாழ்வில், மனிதருக்குத் தேவையான உயர்ந்த விஷயங்கள் அனைத்தையும் தந்தருளக்கூடியவள் அவள். ஆகவே, பாற்கடலில் இருந்து ஸ்ரீமகாலட்சுமி உதித்ததில் வியப்பொன்றும் இல்லை! அவள் உதித்த நன்னாளை, வரலட்சுமி விரத நாளாக அனுஷ்டிக்கிறோம்.

வருடந்தோறும், ஆடி மாதம் அமாவாசையில் இருந்து பௌர்ணமி தினத்துக்குள் வரக்கூடிய வெள்ளிக் கிழமை அன்று, ஸ்ரீவரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. எனில், இரண்டு வெள்ளிக்கிழமைகள் வருமே என்கிறீர்களா?! பௌர்ணமிக்கு அருகில், அதாவது பௌர்ணமி தினத்துக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையை, வரலட்சுமி பூஜைக்குரிய நாளாகக் கொள்ளவேண்டும்.

இந்த வருடம், 12.8.11 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம். லட்சுமி என்றால் செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு எனப் பல அர்த்தங்கள் உண்டு. ஏனெனில், ஸ்ரீலட்சுமிதேவியை இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால், இவை அனைத் தையுமே தந்து நம்மை மகிழச் செய்வாள், தேவி!

சரி... ஸ்ரீமகாலட்சுமியை வணங்கும் முறை எவ்விதம்?

தூய்மையின் பிறப்பிடம் அவள். எனவே, வீட்டையும் நம்முடைய மனத்தையும் தூய்மையாக்கிக் கொள்வது சிறப்பு. தூய்மையான ஆடை உடுத்தி, சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, நிறைந்த மனமும் மகிழ்ச்சியும் மேலிட, அவளை ஆராதிப்பது மிகுந்த பலனைத் தரும்! வீட்டுச் சுவரைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீமகாலட்சுமியின் திருவுருவத்தை வரைந்து வழிபடுவார்கள், சிலர். கலசத்தில் அவளின் திருமுகத்தைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான பரிமள (தூய்மையான) பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைத்து, 'அம்மா மகாலட்சுமி தாயே! எங்கள் வீட்டுக்கு வாம்மா! எங்கள் குடும்பத்தாரை ஆசீர்வாதம் செய்யம்மா!’ என்று மனதாரப் பிரார்த்தித்து, பூஜையைத் துவக்குங்கள். இந்த வேளையில், ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து பூஜிப்பது சிலரின் வழக்கம்.

ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்தால், சட்டென்று திரும்பிப் பார்க்கிறார்; பதில் சொல்கிறார் அல்லவா?! அதேபோல், அதீத பக்தியுடனும் அளவற்ற நம்பிக்கையுடனும் ஸ்ரீமகாலட்சுமியை அழைத்தால், குழந்தையின் குரல் கேட்டு ஓடி வருகிற தாயைப் போல், நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள், ஸ்ரீமகாலட்சுமி. நாம் கேட்பனவற்றையெல்லாம் தட்டாமல் தந்தருள்வாள். அப்போது, நமக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி, பாடல்கள் பாடி உபசரித்து, ஸ்ரீமகாலட்சுமியை பூஜிப்பது விசேஷம்.

   'ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’

என்பது ஸ்ரீமகாலட்சுமியின் காயத்ரி. இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அவளை ஆராதித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.

பூஜையில் சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் ஆகிய இனிப்புகளைப் படைத்து, தாமரை, துளசி, வில்வம் ஆகியவற்றால் அவளை அர்ச்சித்து வழிபடலாம். இவற்றால், அகம் மகிழ்வாள் ஸ்ரீமகாலட்சுமி!

'ததாதி பிரதி க்ருஹ்ணாதி’ என்பார்கள். அதாவது, என்ன கொடுக்கிறோமோ, அதையே பெறுகிறோம். கனிவும் கருணையும் கொண்ட நம்முடைய தாய் ஸ்ரீமகாலட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள்.

இந்த பூஜையில், வெண்மையான சில இழைகள் கொண்ட நூலில், மங்கலங்களை அள்ளித் தருகிற மஞ்சளைத் தடவி, நவசக்தி களின் வடிவமாக, ஒன்பது முடிச்சுகளை அதில் இட்டு, நடுவில் ஒரு பூவையும் வைத்து, தேவியின் அம்சமாகவே திகழ்கிற கலசத்தின் மீது சாற்றி, பிறகு பூஜை முடிந்ததும், வீட்டில் உள்ள பெரியோர் முதலில் கையில் கட்டிக் கொள்ளவேண்டும். அடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது, ஸ்ரீவர லட்சுமி பூஜையை நிறைவு செய்ததையும் ஒளிமயமான வாழ்வின் துவக்கத்தையும் குறிக்கிறது.

'ஓம் வரோத்பவாயை நம’ என்பார்கள் சான்றோர்கள். அதாவது, 'வரங்களைத் தருவதற்காகவே தோன்றியவள்’ என ஸ்ரீமகாலட்சுமியைப் போற்றுகின்றனர்.

அன்றாட வாழ்வில், நமக்குத் தேவையான பொருட்செல்வத்தை மட்டுமின்றி, கல்விச் செல்வம், மக்கட் செல்வம் என சகல செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவள் ஸ்ரீமகாலட்சுமி. அவள் உதித்த நாளில், அவளை ஆராதித்து வணங்கினால், விரதத்தை அனுஷ்டித்தால், அனைத்துச் செல்வங்களையும் வாரி வழங்கி அருள்வாள் தேவி!

பராசக்தியின் வடிவம், தர்மத்தை வழி நடத்திச் செல்லும் சக்தி படைத்தவர்கள் எனப் பெண்களைப் போற்றுகிறது உலகம். அப்பேர்ப்பட்ட பெண்கள், ஸ்ரீமகாதேவியை பூஜித்து வணங்கிட, அவர்களின் இல்லங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகத் திகழும்! வரங்கள் அனைத்தும் தந்தருளும் ஸ்ரீவரலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்று, வணங்குவோம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று வளமாக வாழ்வோம்!

படங்கள்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!