கல்விக் கோயில்! - மதுரை

கல்வி வரம் தரும் கற்கண்டு நைவேத்தியம்!

துரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு அருகில், வடக்குப் பார்த்த கோயிலில் குடிகொண்டு, அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாள்.

 வேதாந்த தேசிகர் ஸ்ரீஹயக்ரீவர் மீது மிகுந்த பக்தி கொண்டு, தவம் புரிந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த பரிமுகப் பெருமாள் (குதிரை முகம் கொண்டவர்) தேசிகருக்குக் காட்சி தந்து, ஞானமும் உபதேசமும் செய்தருளினார் என்பர். எனவே, ஸ்ரீஹயக்ரீவரை வணங்கினால் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

பாண்டிய நாட்டில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஸ்ரீஹயக்ரீவர் ஆலயம் இது. இந்தக் கோயிலில் மூலவர் மற்றும் உத்ஸவர் இரண்டு பேருமே கொள்ளை அழகு! நான்கு திருக்கரங்கள் கொண்டு, தாமரை பீடத்தின் மீது வீற்றிருக்கும் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

மாதந்தோறும் இங்கு ஸ்ரீஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திர நாளில் திருமஞ்சனம் செய்து வழிபடுவது சிறப்பு.

ஆவணி மாத திருவோண நாளில், ஸ்ரீஹயக்ரீவருக்கு மிகப் பெரிய விழாவே நடத்துகின்றனர். ஐந்து நாள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் உத்ஸவம், திருவீதியுலா எனக் கோயிலே களைகட்டியிருக்குமாம்.

புத்தி மற்றும் மன ரீதியான பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் புதன்கிழமைகளில் வந்து ஸ்ரீஹயக்ரீவரை வணங்கிச் செல்கின்றனர். கல்வியும் ஞானமும் கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள், குறிப்பாக மாணவர்கள் வியாழக்கிழமைகளில் வந்து மனதார வேண்டிச் செல்வார்கள்.

தடைப்பட்ட திருமணத்தால் நிம்மதியின்றிக் கலங்குபவர்கள், வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து பூமாலை சார்த்தி வழிபட்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும். சனிக்கிழமைகளில் வந்து வணங்கினால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வியாழக்கிழமைகளில் ஏராளமான மாணவர்கள், இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர். கற்கண்டு நைவேத்தியம் செய்து, அந்தக் கற்கண்டை பாலில் கலந்து சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கின்றனர், பக்தர்கள்.

தேர்வுக் காலங்களில், மாணவர்கள் தங்கள் எழுதுகோலை ஸ்வாமியின் திருப்பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டால்,தேர்வில் வெற்றி பெறுவதுடன், அதிக மதிப்பெண் பெறலாம் என்று பூரிப்புடன் சொல்கிறார்கள் மாணவர்கள்.  

மேலும், ஸ்ரீஹயக்ரீவருக்கு தேன் நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை வாய் பேச இயலாத குழந்தைகளுக்குக் கொடுத்து வர... அந்தக் குழந்தை விரைவில் பேசுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீஹயக்ரீவரை வணங்குங்கள். தேர்வில் எந்தப் பயமுமின்றி கலந்து கொண்டு, நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி அடையுங்கள்!  

 - ச.பா.முத்துகுமார்  

படங்கள்: எஸ்.கேசவசுதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick