கருணை பொங்கும் திருமுகம்... அருள் சுரக்கும் விழிகள்!

அதர்மங்கள் அதிகரித்து ஓங்கும்போதெல்லாம் அவதாரம் செய்து அகிலத்தைக் காப்பவனே நாரணன். அவன் அவதாரங்கள் எல்லாம் இதையட்டியே இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி அவதாரப் பெருமையுடைய தலங்கள் நம் நாட்டில் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆதி திருவரங்கம்.

 

மிக மிகப் பழைமையானதும், எழில் மிகுந்ததுமான இந்தத் திருத்தலம், முதல் யுகமான கிருத யுகத்தில் அமைந்ததாக அறியப்படுகிறது. காரணம், முதல் அவதாரமான 'மச்சாவதாரம்’ எடுத்து, கடலுக்குள் பதுங்கி இருந்த சோமுகன் என்ற அசுரனை வென்று, நான்கு வேதங்களையும் மீட்டு நான்முகனிடம் அளித்ததோடு, அசுரனின் வசமாயிருந்த தேவலோகத்தை மீண்டும் தேவேந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு, இளைப்பாறுவதற்காகப் பெருமாள் சயனித்த திருத்தலமே இந்தத் திருவரங்கம் என்பதால், இது ஆதி திருவரங்கம் என அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கியபடி சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதர் மிகப் பெரிய உருவத்தோடு (ஏறத்தாழ 15 அடி) வேறு எங்கும் பார்க்கமுடியாத அளவிலும் அழகிலும், கருணை வழிந்தோடப் பள்ளிகொண்டு இருக்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

பெருமாளின் திருமுகத்தை உற்றுநோக்கித் தரிசித்தீர்கள் என்றால்... புன்முறுவலுடன் கூடிய பவளத் திருவாயும், அருள் சுரக்கும் திருவிழிகளும், கருணை பொங்கும் திருமுகமும் உங்களை மெய்ம்மறக்கச் செய்து, கட்டிப்போட்டுவிடும். ஆஹா... என்ன அழகு... என்ன அழகு!

மூலஸ்தான வாயிலில் மணியன், மணிகர்ணன் என துவார பாலகர்கள் காவல் காக்க, உள்ளே ஆளை மயக்கும் அழகோடு சயனித்திருக்கிறார், ஸ்ரீரங்கநாதப் பெருமாள். இடது தோள்புறம் ஸ்ரீதேவி வாஞ்சையோடு வீற்றிருக்க, திருவடிகளை மடியில் ஏந்தி வருடியபடி இருக்கிறார் பூதேவி. அனந்தன் குடைவிரித்துப் பரப்பிய படுக்கையில், வலது திருக்கையைத் தலையின் பக்கம் வைத்து அபயம் காட்டி, இடது திருக்கையால் நான்முகனுக்கு வேத உபதேசம் செய்யும் ஞான முத்திரை கோலத்துடன் அருள்கிறார்  பெருமாள்.

வலது கரத்தின் கீழே... இட்ட பணியை எப்போதும், எந்நேரமும் நிறைவேற்றத் தயார் என்பதுபோல் பணிவே உருவாக அமர்ந்திருக்கிறார் கருடாழ்வார். பக்தியும் பணிவும் அவர் திருமுகத்தில் பிரகாசமாய் ஒளிர்கின்றன.

உலகத்துக்கெல்லாம் படியளந்த பெருமாள் களைப்புற்று, அளந்த மரக்காலையே தலைக்கு அணையாக வைத்துப் படுத்துக்கொண்டதாகவும் கூறுவர் பெரியோர்.

இங்கே எழுந்தருளியிருக்கும் தாயாரின் பெயர் ஸ்ரீரங்கநாயகித் தாயார் என விளங்குகிறது. அழகொழுகக் காட்சி தரும் தாயார் தனிச் சந்நிதியில் அமர்ந்து, வரம் அருள்கிறார்.

ஸ்ரீரங்கநாதரின் கர்ப்பக்கிரகத்து விமானம் வேதஸ்வரூபமானது. நான்முகனுக்கு வேதம் உபதேசிக்கும் கோலம் வெளியில் தெரியவும் புரியவும் கேட்கவும் என்ற வண்ணத்தில் இது அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இதற்கு 'சந்தோமய விமானம்’ என்று பெயர்.

பத்தினியின் சாபத்தால் ஒளி மங்கிய சந்திரன். இந்தத் தலத்தின் அருகில் உள்ள புஷ்கரணியில் தினம் தினம் நீராடித் தவமிருந்தான். ஸ்ரீரங்கநாதரின் அருளால் இழந்த கலைகளை ஒளியுடன் பிரகாசிக்கும்படியாய் மீண்டும் பெற்று உய்வுற்றான். சந்திரன் நீராடியதால் இத்தலத்தின் தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

சுரதகீர்த்தி என்ற அரசன், கிருத யுகத்தில் வாழ்ந்தவன். எல்லா சுகங்களையும் வளங்களையும் பெற்று வாழ்ந்தாலும், குழந்தைப்பேறு இல்லாத காரணத்தால் வருந்தினான். நாரதரின் அறிவுரைப்படி, மனைவியுடன் ஆதிஅரங்கம் வந்து ரங்கநாதரை வழிபட்டு, அவரருளால் நான்கு குழந்தைகள் வாய்க்கப்பெற்று மகிழ்வோடு வாழ்ந்தான்.

தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்ரீவைகுண்டம் கிளம்ப ஆயத்தமானார் பெருமாள். கிளம்புமுன் முனிவர்களும் புவியிலிருந்த மற்றவர் களும் பரிதவிக்க, அவர்களுக்காக விஸ்வகர்மாவை வரவழைத்து தமது திவ்ய மங்கள ரூபத்தை வடிக்கும்படி கூறி, பின்னர் அந்த வடிவத்துக்குள் நித்ய ஸாந்நித்தியம் செய்தருளினார் ஸ்ரீரங்கநாதப் பெருமாள்.

இதுபோன்ற காரணங்களால் இந்த ஆதித்திருவரங்கம் ஒரு பிரார்த்தனைத் தலமாகவும் திகழ்கிறது. பிரம்மனுக்கு பெருமாள் வேதோபதேசம் செய்வதால், நல்ல கல்வியறிவுடன் திகழ, இங்கு வந்து பெருமாளை வேண்டினால், அதியற்புதமாய் கல்விச் செல்வம் கிட்டும். அரசனுக்கு அருளியதுபோல் பிள்ளைப் பேறு வேண்டுவோர்க்கு பிள்ளை வரமளிப்பான் ஸ்ரீரங்கநாதன். இங்கு வந்து வேண்டிக்கொண்டால், சந்திரனுக்கு அருளியதுபோல் நமது வாழ்க்கையிலும் மனக்கவலைகளை அகற்றி, ஒளிமயமாக வாழ அருள்வார் பெருமாள். பூரண உடல் நலமும்  மனநலமும் பெற்று இன்பமே சூழப் பெறலாம்.

பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதிக்குப் போகுமுன், சிறு மாடம் ஒன்றில் சிறிய ரங்கநாதர் இருப்பார். இவர், அந்நியர் படையெடுப்பில் பெரிய ரங்கநாதரைக் காப்பாற்றும்பொருட்டு உருவாக்கப்பட்ட சின்ன ரங்கநாதர். ஸ்ரீகஸ்தூரிரங்கன் என்பது திருநாமம். இவரை 'சோட்டா ரங்கநாதர்’ எனச் செல்லமாக அழைக்கிறார்கள் பக்தர்கள்.

இந்த அருள்நிறை திருத்தலத்தில் அழகொழுகும் கலைநயம் மிக்க ஸ்ரீகோதண்டராமர், சீதாதேவி, ஸ்ரீலக்ஷ்மணர் ஆகியோரும் வரம் அருளக் காத்திருக்கிறார்கள். பணிவுடைய திருக்கோலத்தில் ஆஞ்சநேயரும் அற்புதமாய்க் காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலின் தீர்த்தத்தை அருந்திப் பாருங்கள். அடடா! கங்காதேவியே பருகினாலும், இந்த நீரின் இனிமையிலும் குளுமையிலும் மயங்கிப்போவாள். நாமெல்லாம் எம்மாத்திரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் திருக் கோவிலூர் அருகில், மணலூர்பேட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில், தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது இந்த ஆதி திருவரங்கம்.

நாமும் ஆதி திருவரங்கம் செல்வோம்.

ஆதி அரங்கனை வழிபடுவோம்.

அவன் புகழ்பாடி - அவனருள் பெற்று

அகிலம் புகழ வாழ்வோம்.

அளவிலாமகிழ்வு

கொள்வோம்!

கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick