சிவராத்திரி தலங்கள்! | thiruvaigavoor thirukazhukundram thirukadavoor | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/03/2013)

சிவராத்திரி தலங்கள்!

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவது மகா சிவராத்திரி. இந்த நாளில் அனைத்து சிவத் தலங்களிலும் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானை வழிபடுவதால், இம்மை, மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்றாலும், சிவராத்திரி கதைகளோடு தொடர்புடையதாகவும் சிவராத்திரிக்கே உரியதாகவும் சில தலங்கள் சிறப்புடன் திகழ்கின்றன.

 மார்க்கண்டேயன் மரணத்தை வெல்லும் பொருட்டு சிவபூஜை செய்த இடம் திருக்கடவூர். மூன்றாம் ஜாமத்தில் இங்குள்ள லிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு அவனுக்காக எமனை உதைத்து வீழ்த்திய இடம். இந்த சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு சிவராத்திரி தினத்தில்தான் என்பர். எனவே சிவராத்திரி இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூட அதனால் உலகத்தில் இருள் சூழ்ந்தது. எனவே, ஈசன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பத்தால் உலக உயிர்கள் வருந்தின. அந்த பாவம் நீங்க சிவனை பார்வதிதேவி பூஜித்த இடம் காஞ்சி. உலகம் இருண்ட அந்தகாரமான இரவில் உருத்திரர்களும் இங்கு பூஜித்தனர். அவர்கள் பூஜித்த ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம், உருத்திர கோடீசம் முதலான ஆலயங்கள் இவ்வூரில் உள்ளன. காஞ்சிப் புராணம், இவ்வூரின் ஒரு பகுதி உருத்திரசோலை என வழங்கப்பட்டதாகக் கூறுகிறது.

சிவராத்திரி தொடர்பாக புராணங்களில் சொல்லப்படும் மான் - வேடன் கதை நிகழ்ந்த தலம் ஸ்ரீசைலம். ஜோதிர்லிங்க தலமான இங்கும் சிவராத்திரி விசேஷம். மேலும், திருவைகாவூர், ஓமாம்புலியூர், கோடி ருத்திரர்கள் சிவராத்திரியில் சிவபூஜை செய்த திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களும் சிவராத்திரி சிறப்புடையன!

- எம்.ஆர்.பெரியாண்டவர், தேவிபட்டணம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க