ஊர்த்துவ தாண்டவம்!

தென்காசி தரிசனம்...

ர்த்துவ தாண்டவம்-  சிவபெருமான் தனது ஒரு திருவடியை (ஊர்த்துவ முகமாக) வானை நோக்கி உயர்த்தி ஆடிய அற்புத நடனம். 'காளிதேவியின் கர்வத்தைப் பங்கம் செய்ய சிவனார் ஆடிய தாண்டவம் இது’ என்கின்றன புராணங்கள். சிவபிரான் இந்த தாண்டவத்தை அருளிய திருத்தலம் திருவாலங்காடு. இங்கே ஊர்த்துவ தாண்டவர் கோலம் சிறப்புறத் திகழ்கிறது.  இந்த ஊர் மட்டுமின்றி, வேறுசில தலங்களிலும் ஊர்த்துவ தாண்டவ கோலத்தை சிறப்பான வகையில் தரிசிக்க முடிகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தின் நிருத்தசபையில் எட்டு கரங்களுடன் திகழும் ஊர்த்துவ தாண்டவரைத் தரிசிக்கலாம். மேலும் கும்பகோணம், திருப்பனந்தாள், திருச்செங்காட்டங்குடி, கண்டியூர் ஆகிய தலங்களிலும் ஊர்த்துவ தாண்டவ சிற்பங்களைத் தரிசிக்கமுடியும்.

சில தலங்களில், தூண்சிற்பங்களாக ஊர்த்துவ தாண்டவம் மற்றும் மகா தாண்டவ கோலங்களை, மிக்க கலைச் சிறப்புடன் பொளிந்து வைத்திருக்கிறார்கள். அதிலும், தென்காசி ஸ்ரீஉலகநாயகி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தூண் சிற்பமாக அருளும் ஊர்த்துவ தாண்டவர் கொள்ளை அழகு!

'ஓங்குநிலை ஒன்பதுற்ற திருக்கோபுரம்
பாங்குருவம் பத்துப் பயில் தூணும்
தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட
தென்காசி தன்னிலன்றிஉண்டோ தலத்து?’

என்கிறது பழம்பாடல் ஒன்று. அதற்கேற்ப திகழ்கிறது தென்காசி

ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயமும் அதனுள் திகழும் சிற்பங்களும். குறிப்பாக, 'திருவோலக்க மண்டபம்’ எனும் முகப்பு மண்டபத்தை கவினார்ந்த கலைக்கூடம் என்றே சொல்லலாம்!

தெற்கு வரிசையில்- மேற்கிலிருந்து கிழக்காக அகோர வீரபத்திரர், மன்மதன், திருமால், காளி சிற்பங்கள்; வடக்கு வரிசையில்- மேற்கிலிருந்து கிழக்காக சட்டைநாதர், ரதிதேவி, பதஞ்சலி, வியாக்ரபாதருடனான ஸ்ரீமகாதாண்டவர் மற்றும் ஊர்த்துவ தாண்டவர்... எனத் திகழும் இந்த மண்டபத்தின் தூண் சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம் கண்ணையும் கருத்தையும் கவரும் கவின்மிகு படைப்புகள் ஆகும்!

இதில், ஊர்த்துவதாண்டவர் பத்து கரங்களுடன் விளங்குகிறார். இடக்காலை ஊன்றி வலது காலை உடலோடு ஒட்டியவாறு தூக்கியுள்ளார். வலது முன் கை அபயம் காட்ட, இடது முன் கரத்தில் நீண்ட ரிஷபதண்டம். வலப்புறம் பிரம்மன் 'பிரம்ம தாளம்’ இசைக்க, திருமாலும் 'கிடுக்கி தாளம்’ எனும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருக்கிறார். திருவடியில் கிடக்கும் முயலகனும் தனது நிலையில் விசேஷம் கூட்டுகிறான்; இடது காலை ஊன்றி எழும்பும் பாவனையில் உள்ளான். இந்த ஊர்த்துவ தாண்டவரின் பீடத்தில் பாணாசுரனும் இருப்பது சிறப்பு!

அருகில் மற்றொரு தூண் சிற்பமாக ஸ்ரீமகாதாண்டவர். தலையில் சூரிய-சந்திரரும் சடையில் கங்காதேவியும் திகழ, பதினாறு திருக்கரங்களும், மறக்கருணை காட்டும் திருமுகமுமாக எழில்கோலம் காட்டுகிறார் இந்த ஆடல்வல்லான்.

அற்புதமான  இந்த சிற்பச் செல்வங்களைத் தரிசிக்க நீங்களும் ஒருமுறை தென்காசிக்குச் சென்று வாருங்கள்!

கட்டுரை, படங்கள்: தி.ஹரிஹரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick