'சொன்னால் இனிக்குது...’

அருள் சுரக்கும் ஸ்ரீஐயப்ப அனுபவங்கள்!சரணம் ஐயப்பா! ரெ.சு.வெங்கடேஷ்

'முள்ளும் மலராகும், கல்லும் கனியாகும், உடல் நடுங்கும் குளிரும் இதமாகும், வடவாக்னியாய் வயிற்றை வருத்தும் பசிப் பிணியும் பறந்துபோகும்... ஐயனே, கண்மலரில் தண்ணொளி காட்டும் நின் திருமுக தரிசனத்தால்’ என்று ஐயப்பமார்கள் மெய்ம்மறந்து சுவாமி ஐயப்பனை வணங்கி நிற்கும் புண்ணிய கார்த்திகை பிறந்துவிட்டது.

ஐயனின் சந்நிதானத்தில் எந்த வகையிலும் உயர்வு-தாழ்வு பேதம் இல்லை என்பதை உணர்த்த கறுப்புச் சீருடை தரித்து, சத்திய சங்கல்பமாய் துளசி மாலை அணிந்து சாரி சாரியாய் சாமிமார்கள் அவன் திருக்கோயிலைத் தேடிவருவதையும், தரிசித்து வழிபடுவதையும் காணக் கண்கோடி வேண்டும். விண்ணதிர அவர்கள் எழுப்பும் சரணகோஷத்தைக் காதாரக் கேட்டு மகிழ இந்த ஒரு ஜென்மம் போதுமா என்ன?!

அடியார்களில் ஒருவனாக வருவான் ஐயப்பன் என்பது சத்திய வாக்கு அல்லவா? ஆக, ஐயப்பமார்களைத் தரிசிப்பதே ஐயப்பனைத் தரிசிப்பதற்குச் சமம் ஆயிற்றே? நாமும் ஓர் அதிகாலை வேளையில் ஐயனைத் தரிசிக்கக் கிளம்பினோம். சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த ஐயப்பன் திருக்கோயில், கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உள்ளே நுழைந்த நம்மைப் பரவசத்தில் ஆழ்த்திய ஆராதனை ஒலியும், செண்டை மேளச் சத்தமும், ஆலயமணி ஓசையும் சட்டென்று நின்று நிசப்தம் தர, கணீரென்று ஒலித்த ஒரு குரல், கூட்டத்துடன் சேர்த்து நம்மையும் கட்டிப்போட்டது.

பகவான் சரணம்... பகவதி சரணம்...
சரணம் சரணம் ஐயப்பா!

பக்தர்களில் நடுநாயகமாக நின்று ஐயன் ஐயப்பனைப் போற்றிப் பாடிக்கொண்டிருந்தார் பக்திப் பாடகர் வீரமணிராஜூ. பல ஆண்டுகளாக, ஒருவர் 'ஐயனே சரணாகதி’ என்று அவரின் திருவடிகளைப் பற்றிக்கொண்டிருக்கிறார் என்றால், ஏதோ ஓர் அனுபவம்... ஓர் அருளாடல் அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்தானே? அந்த அனுபவங்கள் நமக்கான வாழ்க்கைப் பாடம் அல்லவா?

பாடி முடித்து பக்தர்களோடு உரையாடிக் கொண்டிருந்த வீரமணிராஜூவிடம் நமது விருப்பத்தைத் தெரிவித்தோம். ஐயன் ஐயப்பனின் திருவருளால் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருளாடல் களை, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டினோம்.

'சுவாமியின் மகிமையைச் சொல்லக் கசக்குமா என்ன?'' என்று உற்சாகமானவர், சில அற்புத அனுபவங்களை நமக்கும் அங்கிருந்த  பக்தர்களுக்கும் சேர்த்து விவரித்தார்:

'நான் ஐயப்பனை கடவுளா நினைக்கிறதில்ல. என் நண்பனாகத்தான் நினைக்கிறேன். 'மாலை போட்டு விரதமிருந்து உன்னைத் தேடி சபரி மலைக்கு வரேன். என் பிரச்னையை நீதான் தீர்த்து வைக்கணும்'னு நம்ம பாரத்தை அவன் மேல போட்டுட்டு அவனை நினைச்சுக்கிட்டே நிம்மதியா இருங்க, அதுபோதும். உங்க வாழ்க்கையில் நிச்சயமாக நல்லது நடக்கும். எனக்கு நடந்திருக்கு, அந்த நம்பிக்கையில் சொல்றேன். தூய எண்ணத்தோடு அவரை வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் காட்சி அளிப்பார்.  அப்படிப் பலமுறை நான் ஐயப்பனைப் பார்த்திருக்கேன் -உணர்ந்திருக்கேன். அதை நினைத்தால் இப்பவும் உள்ளம் சிலிர்க்கும்...' என்றவர் தொடர்ந்து பேசினார்.

'சிறுவனாக வந்தான்... சிந்தை மகிழ்ந்தேன்!’

'ஒருமுறை பம்பையில் நானும் என் ஐயப்ப சாமி குழுவினரும் ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு பையன்

என்னிடம் வந்து, சொடக்குப் போட்டு 'ஏய்’ என்று அதட்டலாகக் கூப்பிட்டான். நான் 'என்னையா கூப்பிடுறே?’ என்று கேட்டேன். 'ஆமாம்... உன்னைதான், இங்கே வா’ என்றான் அதட்டலாக.எனக்கு உள்ளுக்குள் அதிர்ச்சி என்றாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவன் அருகில் சென்றேன். 'சொல்லு கண்ணா, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.

'நீதானே அந்த பாட்டெல்லாம் பாடுறவன்?’ என்றான். என் நண்பர்கள் துணுக்குற்றார்கள். 'என்ன இவன்... மரியாதை இல்லாம பேசிக்கிட்டி ருக்கான். நீங்களும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... வாங்க போகலாம்’ என்றார்கள். ஆனால், எனக்குத் தெரிந்துவிட்டது, வந்திருப்பது யாரென்று!

சபரிமலைக்கு மேலிருந்து நம்மையெல்லாம் காக்கும் அந்த சாஸ்தாவே என் முன்னாடி நிற்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். பணிவோடு அவன் பேச்சுக்கு செவிமடுத்தேன்.

'ஒரு பாட்டு பாடுவியே... தாய் தந்தைன்னு ஏதோ வருமே...’ என்று இழுத்தான் சிறுவன். நானும் 'ஆமா தாய் என்று சொல்வதா? தந்தை என்று சொல்வதா?’ என்று அந்த பாடல் வரியை எடுத்துக் கொடுத்தேன். உடனே உற்சாகமானவன், 'ஆமா, அதே பாட்டுதான். பாடுறியா?’ என்று கேட்டான். எனக்கு உடம்பு சிலிர்த்தது. 'பாடறேன். ஆனா, அதுக்கு முன்னாடி உன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கவா?’ என்று கேட்டேன். 'தாராளமா’ என்றான் அவன். என் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவன் எனது பாட்டை ரசித்திருக்கிறான். அவன் என் ரசிகன். அதனால் நான் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு, பாடியும் முடித்தேன்.

'நல்லாருக்கு’ என்ற பாலகன், 'எனக்கு பிஸ்கட் வாங்கித் தரியா?’ என்றான். அந்தக் கடையிலேயே வாங்கிக் கொடுத்தேன். பாக்கெட்டைப் பிரித்து இரண்டு பிஸ்கட்டை சாப்பிட்டவன், மீதியை என் கையில் கொடுத்துவிட்டு 'இதோ வர்றேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினான். ஆனால், பத்து நிமிடம் கழித்தும் அவன் திரும்பவில்லை. நாங்கள் தேட ஆரம்பித் தோம். ம்ஹூம்... எங்கு தேடியும் அவனைக் காணவில்லை. பிறகு, நண்பர்களுக்கு நான் புரிய வைத்தேன், தேடி வந்தது சபரிநாதன்தான் என்று.

சாதாரண சிறுவனாக இருந்தால் பிஸ்கட்டோ, டீயோ கேட்டு வாங்கி சாப்பிட்டுச் சென்றிருப்பான். என்னைப் பாடகன் என்று   அடையாளம் கண்டதோடு, குறிப்பிட்ட ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேட்கிறான் என்றால், அவன் சாதாரணமானவன் இல்லையே? நண்பர்கள் புரிந்துகொண்டார்கள்.

பிறகென்ன, கண்ணீர் மல்க எல்லோரும் அவன் சென்ற திசையை நோக்கி சரணகோஷம் எழுப்பி வணங்கித் தொழுதோம்''.

நா தழுதழுக்க கூறிமுடித்தவர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வேறொரு சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.

நெய்யும் மெய்யும்!

''ஒருமுறை சபரி யாத்திரையின்போது, வேறொரு குழு எங்களைத் தொடர்ந்து வந்தது. அவர்களில் ஒருவன் வேகமாக நடந்து அருகில் வந்தான்.

'சாமி, கொஞ்சம் நெய் கொடுங்க’ என்று கேட்டான். சபரிமலையில் இருக்கும் வரையிலும், யார் என்ன கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து விடுவது என் வழக்கம். ஏனென்றால், ஐயப்பன் எப்படி எவர் உருவில் வருவான் என்று யாருக்குத் தெரியும்? நான் கொடுக்காமல் விட்டால், ஐயப்பன் கேட்டும் கொடுக்காத பாவியாகி விடுவோமே என்ற பயம் எனக்கு.

அப்படித்தான் அவன் கேட்டதும் நெய் வைத்திருந்த பாத்திரத்தைத் திறந்து சிறிது நெய் எடுத்துக் கொடுத்தேன். கொஞ்சமாகச் சாப்பிட்டவன், 'என்ன... நெய் புளிக்குதே?’ என்றான், பிறகு புன்னகைத்தபடி, 'ஆனாலும் நல்லாத்தான் இருக்கு’ என்று கூறிவிட்டு நகர்ந் தான். நான் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் அவன் ஆளைக்காணோம். அருகில் வந்து கொண்டிருந்தவர்களைக் கவனித்தேன். அங்கேயும் அவன் இல்லை. அவர்களிடமும் கேட்டுவிட்டேன்.

'என்ன சாமி சொல்றீங்க. நீங்க சொல்றமாதிரி யாரும் எங்ககூட வரலியே’ என்றார்கள் திகைப்புடன். நம்மோடுதான் நடந்து வந்தான். சட்டென்று எப்படிக் காணாமல் போவான்? அதுவும் தவிர, அவன் நம்மிடம் குறிப்பா நெய்யைக் கேட்பானேன்? நெய் என்றால்... அது சுவாமி ஐயப்பனுக்கு உகந்தது! அப்படியென்றால் வந்தது சாட்சாத் சாஸ்தாவேதான் என்று புரிந்துகொண்டேன்'' என்று புன்னகைத்த வீரமணிராஜூ பிரபல நடிகரும் சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தருமான நம்பியார் சாமி சொன்ன அறிவுரையையும் பகிர்ந்துகொண்டார்.

'சபரிமலைக்கு வந்துவிட்டால் 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற அகங்காரத்தை விட்டுடணும். சபரிமலையில எல்லாம் தெரிஞ்ச வன் ஒருத்தன்தான். விஷ்ணு சிவனை தாய் தந்தையாகக் கொண்ட அந்த மணிகண்டன்தான் அது. பெரியவங்க, சின்னவங்கன்னு இல்லாம ஒவ்வொருத்தரும் ஐயனின் அம்சம்தான். நீ நடக்கும்போது உன்கூடவே வருதே, அது உன் நிழல் இல்லை. மாலை போட்டுக்கிட்டு மலையேறும் ஒவ்வொருத்தர் கூடவும் சாஸ்தாதான் நிழலாய் தொடர்வார்’ என்பார் நம்பியார் சாமி. அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று இந்த சம்பவங்கள் எனக்கு உணர்த்தின'' என்று கூறி முடித்தார் பாடகர் வீரமணி ராஜூ.

உண்மைதான்! இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறான். அதை நாம்தான் உணர்ந்துகொள்வது இல்லை. அதை உணர்ந்து கொண்டால், நாம் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே!

படங்கள்: வீ.சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick