சிவகங்கையில்... மகாபெரியவா தந்த அபய ஹஸ்த சனீஸ்வரர்!

சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு அருகில், அபய ஹஸ்தத்துடன் அனுக்கிரக மூர்த்தியாக அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.

தமிழகத்தில் தேனி மாவட்டம் குச்சனூருக்கு அடுத்து மேற்கு திசை பார்த்தபடி, தனிக்கோயிலில் சனீஸ்வரர் அருளாட்சி நடத்தும் ஆலயம் இது என்கின்றனர் பக்தர்கள்.

85-ம் வருடம், சிவகங்கை தேவஸ்தானத்தில் இருந்த முத்துக்கருப்ப ஆச்சாரியார், காஞ்சிக்குச் சென்று மகா பெரியவாளைச் சந்தித்தார். அப்போது அவருக்கு ஆசி வழங்கிய பெரியவா, 'இந்த விக்கிரகத்தை உங்க சமுதாயத்தைச் சேர்ந்தவங்க பராமரிச்சு, பூஜை பண்றதுதான் உத்தமம். இந்தா, வாங்கிக்கோ’ என்று சொல்லி, விக்கிரகம் ஒன்றை வழங்கி, ஆசீர்வதித்தார்.

துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த விக்கிரகமானது, விநாயகரின் சிலையாக இருக்கும் என நினைத்தார் முத்துக்கருப்ப ஆச்சாரி. திறந்து பார்த்ததும் அதிர்ந்து போனார். அது, காக்கை வாகனத்துடன் நின்ற சனீஸ்வர பகவானின் விக்கிரகம்.  'இந்தச் சிலையை நம்மால் பாதுகாப்பாகவும் சிரத்தையாகவும் பூஜிக்க முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது’ என்று தவித்து மருகிய ஆச்சாரி, 'எனக்கு பயமாக இருக்கிறது. மன்னித்துவிடுங்கள் ஸ்வாமி’ என்று சொல்லி சிலையை மகாபெரியவாளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

'வெள்ளைப் பசு மீது, காகம் அமரும். அந்தப் பசு நிற்கும் இடத்தைத் தேர்வு செய்து, உன் ஊரில் கோயில் கட்டினால், சகல உதவிகளும் தேடி வரும்’ என சிலையை மீண்டும் அவரிடமே கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்தார் பெரியவா.

அதேபோல், பசு மாடு ஒன்று நிற்க, அப்போது பறந்து வந்த காக்கையானது பசுவின் மீது வந்து உட்கார்ந்து கொள்ள, சிலிர்த்துப் போன ஆச்சாரி, உடனே கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். 87ம் வருடம் கோயில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெற்றது என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.  

ஞாபக சக்தி இல்லாத மாணவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், நீண்ட காலமாக பூப்பெய்தாமல் இருப்பவர்கள், கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து சனீஸ்வரரை வழிபட்டால், விரைவில் நல்லது நடக்கும். மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். கடன் தொல்லை நீங்கப் பெறலாம். பூப்பெய்தல் நிகழும். திருமணம் நினைத்தது போல சீரும் சிறப்புமாக நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சனி தோஷம் இருப்பவர்கள், இங்கு வந்து சனி ப்ரீதி யாகம் செய்து வழிபட்டால், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். தவிர, நம் நட்சத்திர நாளில் இங்கு வந்து அர்ச்சித்து வழிபடுவதும் மிகுந்த பலன் தரும்.  

சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில், சனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சனிக்கிழமைகளில் மதியத்தில் அன்னதானம் செய்வது வழக்கம். கறுப்பு அல்லது நீல வஸ்திரம் சார்த்தி சனீஸ்வரரை வழிபட்டால், தீராத நோயும் நீங்கும். வைத்தியச் செலவுகள் குறையும் என்கின்றனர் பக்தர்கள்!

விஸ்வகர்மா, கண்ணப்ப நாயனார், மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர் -  மேனகை, சனீஸ்வரரின் தந்தையான சூரிய பகவான் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.

          - ம.மாரிமுத்து

படங்கள் -  சே.சின்னதுரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick