வீடு கட்ட போகிறீர்களா?

வாஸ்து சொல்லும் வழிமுறைகள்!வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

சென்ற இதழில் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் அமையும் கிரகங்களைப் பொறுத்து வீடு- மனை யோகம் எவ்வாறெல்லாம் அமையும் என்பது குறித்துப் பார்த்தோம். அதேபோன்று கிரகங்களின் பார்வை, சேர்க்கையின் அடிப்படையிலும் சில விளக்கங்களைச் சொல்கிறது ஜோதிடம். இதில் கணவன் - மனைவி இருவரது ஜாதகங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 1-ம் வீட்டில் இருப்பின் அவர்களுக்கு எப்படியும் வீடு-மனை யோகம் ஸித்தியாகும். சுக்ரனும் செவ்வாயும் நன்கு அமைந்திருப்பின் செல்வச் செழிப்பு ஏற்படும். இவர்கள் எங்கு குடியிருந்தாலும் நல்ல சூழ்நிலையில் வாழும் அமைப்பு உருவாகும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 2-ம் வீட்டில் அமைந்திருப்பின் இயற்கையாகவே நல்ல வீடு, வாசல் அமைந்துவிடும். இளவயதிலேயே நன்மைகளை அடைவார்கள். தமது கல்வி, கலை ஞானத்தாலோ, தாய்வழி உறவுகளின் மூலமோ வீடு-வாசல் அமைத்துக்கொள்ளும் யோகம் உண்டு.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 3-ம் வீட்டில் இருப்பின் சொத்து-சுகம் அமைவது சிரமம். இத்தகைய அமைப்பு உடையவர்களுக்கு 4-ம் வீட்டிலோ, 10-ம் வீட்டிலோ கிரகங்கள் வலிமை பெற்று அமைந்திருப்பின், அந்த கிரகங்களின் தசா-புக்தி நடைபெறும் காலத்தில் வீடு-மனை யோகம் ஸித்தியாகும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி அந்த வீட்டிலேயே இருப்பின், அந்த கிரகத்தின் தசை நடைபெறும் காலத்தில் வீடு-வாசல் ஏற்படும். ஆனால், இந்த காலகட்டத்தில் பெற்றோரில் ஒருவரை இழக்க நேரிடும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 5-ம் வீட்டில் இருப்பின் சொத்து-சுகம் ஏற்படும். ஆனால் பிள்ளகளால் சொத்து பின்னம் அடைய வாய்ப்பு உண்டு.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டில் இருப்பது கெடுபலனாகும். நிலையான சொத்து சுகம் இருப்பினும் வீட்டில் சச்சரவுகள் இருந்துவரும். பல இடங்களில் குடியிருக்கவேண்டியது வரும். அதேபோன்று சொத்துக் களை அடமானம் வைக்கவும் நேரிடும். இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்துக்களை வாங்குவது சிறப்பு.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 7-ம் வீட்டில் இருப்பின் நிச்சயம் வீடு-மனை யோகம் உண்டு. திருமணக் காலத்துக்குப் பிறகு வீடு-வாசல் அமையும். 7-ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் சேர்ந்துள்ளனவோ, அத்தனை வீடுகள் கட்டி வாழலாம். கெட்ட கிரகங்களின் சேர்க்கை இருப்பின், ஒன்றிரண்டு சேதாரம் ஆகும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பின், சொத்துக்களில் பங்கம் ஏற்படும். சொந்த வீடு உண்டானால், அந்த காலம் முதல் பல வழிகளில் தொந்தரவுகள் சூழும். இவர்கள் வாழ்க்கைத் துணைவர் பெயரில் வீடு கட்டிக்கொள்வது நல்லது.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 9-ம் வீட்டில் இருப்பின் சொந்த வீடு-வாசல் அமையும். மூதாதையர் சொத்துக்கள் இருக்கும். ஆனால், ஜாதகர் அவ்வீட்டில் குடியிருப்பது நெடுங்காலம் நீடிக்காது. பெரும்பாலும் உறவினர்களே அவ்வீட்டை அனுபவிப்பர்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 10-ம் வீட்டில் இருப்பின், சுய முயற்சியாலோ, தாய்-தந்தை உதவியாலோ, வாழ்க்கைத் துணைவியின் சம்பாத்தியத்தின் மூலமோ நிச்சயம் வீடு-மனை யோகம் அமையும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 11-ம் வீட்டில் இருப்பின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும். இந்த கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெறும் காலத்தில் வீடு-வாசல் அமையும். ஆனால், தாய் அல்லது தாய்வழி உறவினரை இழக்க நேரிடும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 12-ம் வீட்டில் இருப்பின் சொத்து விரயம் ஏற்படும். ஆனால் இந்த கிரகத்தின் தசையில் புதிய வீடு கட்டும் யோகமும் உண்டாகும். 4-ம் வீட்டின் அதிபதி வக்ரம் பெற்று அமைந்து இருப்பின், கட்டிய வீடு நிறைவடையாது; பாதியில் நின்று விடும். பெரும் முயற்சிக்குப் பிறகு அதை கட்டிமுடிக்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிடம் குறிப்பிடும் இந்த விளக்கங்களை மனதில் கொண்டு, நமது ஜாதகத்தை ஆராய்ந்து, கிரக அமைப்புகளின் நிலையறிந்து செயல்பட்டால் இல்லமும் வாழ்க்கையும் சுபிட்சம் அடையும்.

சரி! இனி, வாஸ்து சாஸ்திரப்படி ஒரு கட்டடத்தை கட்டும்போது கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சங்களை அறிந்துகொள்வோமா?

முதலில், கட்டடம் கட்டப்போகும் பிளாட்டில் முட்புதர்கள், கற்கள், இதர விரும்பத் தகாதப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பிளாட்டின் நிருதி மூலையான தென்மேற்கு பகுதி 90 டிகிரியில் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். அப்படி இல்லையெனில் 90 டிகிரியில் இருக்கும்படி நிலத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். நிருதி மூலை 90 டிகிரியைவிட குறையவும் கூடாது. கூடவும் கூடாது.

போர்வெல் எங்கு அமைப்பது ?

* பிளாட்டில் போர்வெல் அல்லது கிணறு அமைக்க விரும்பினால், கட்டடத்துக்கும் மதிலுக்கும் இடையில் அமைந்த காலியிடத்தில், கீழ்க்காணும் திசைகளில் அமைக்கவேண்டும்.

1. பிளாட்டில் ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு.

2. வடக்கில் சரிபாதிக்கு மேல் கிழக்கு பாகத்தில்.

3. கிழக்கில் சரிபாதிக்கும் மேல் வடக்கு பாகத்தில்.

அதேபோல், கட்டடம் கட்டுவதற்கு நமது பிளாட்டில் அமைத்த போர்வெல் அல்லது கிணற்றில் இருந்து எடுத்த நீரை முதலில் பயன்படுத்துவது மிக விசேஷம்.

முதலில் கட்டத் துவங்குவது எதை? எப்படி?

* தெற்கிலும் மேற்கிலும் வெட்டவெளியாக அமைந்திருக்கும் பிளாட்டில் வீடு கட்டும்போது, நிருதி மூலையை சரிப்படுத்தி, முதன்முதலில் மதிலைக் கட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

* அடுத்ததாக வீட்டுக்கும், மதிலுக்கும் இடையில் உள்ள காலியிடத்தை... தெற்கைவிட வடக்கில் அதிகமாகவும், மேற்கைவிட கிழக்கில் அதிகமாகவும் இருக்கும்படி சரிசெய்து கொண்டு, வானக்கால் தோண்டவும். எதிரெதிர் மூலைக்குள்ள தூரம் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.

* மதிலுக்கும் சரி, வீட்டுக்கும் சரி... முதன் முதலில் வானக்கால் தோண்டும்போது ஈசானிய மூலையில் தோண்ட ஆரம்பிக்கவும். அதன்பிறகு, கடைசியாக நிருதி மூலையில் (தென் மேற்கு) கடைக்கால் தோண்டும் வேலையை முடிக்கவும்.

1. முதலில் ஈசானியத்தில் (வடகிழக்கு) இருந்து மேற்காக வாயு மூலைக்கு (வடமேற்கு)

2. இரண்டாவது ஈசானியத்திலிருந்து தெற்காக அக்னி மூலைக்கு (தென்கிழக்கு).

3. மூன்றாவது அக்னி மூலையிலிருந்து மேற்காக நிருதி மூலைக்கு (தென்மேற்கு)

4. நான்காவது வாயு மூலையிலிருந்து (வடமேற்கு) தெற்காக நிருதி மூலைக்கு இந்த அடிப்படையில் வானக்கால் தோண்டவேண்டும்.

* அதேபோன்று முதன்முதலில் கட்டுமான வேலையை ஆரம்பிக்கும் போது நிருதி மூலையில் (தென்மேற்கு) ஆரம்பித்து, ஈசானிய மூலையில் (வடகிழக்கு) முடிக்கும்படி கட்டவும்.

கட்டுமானத்துக்குத் தேவையான மணலை எங்கு குவிக்கலாம்?

கட்டட வேலைக்கு முதன் முதலாக மணல் அடிக்கும்போது, பிளாட்டுக்குள் அல்லது பிளாட்டுக்கு வெளியே நிருதி மூலையில் (தென்மேற்கு பகுதியில்) அல்லது மேற்கில்தான் குவிக்கவேண்டும். வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கவே கூடாது. இதன் அடிப்படையிலேயே கற்கள் மற்றும் செங்கற்கள் முதலானவற்றையும் குவிக்கவேண்டும். வாஸ்து சொல்லும் அறிவுரைகள் இன்னும் உண்டு. அவற்றை அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ந்து காண்போம்.

- தொடரும்...


? நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். இங்கே, ஃபிளாட் வாங்கி ஒரு வருடம் பூர்த்தியாகிறது. வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துக்கு பஞ்சம் இல்லை. இருந்தாலும், நம்மை அறியாமல் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் என்ன செய்வது. அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் எதையும் மாற்றி அமைக்க முடியாது அல்லவா? இந்த நிலையில், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

- பவானி கார்த்திகேயன், சென்னை- 44

‘பஞ்ச சிர ஸ்தாபனம்’ எனும் யந்திரத்தை வெள்ளியிலோ தங்கத்திலோ  அல்லது தாமிரத் தகட்டிலோ  தயார் செய்து, வீட்டின் தலைவாயிலில் ஸ்தாபித்து, வாஸ்து பூஜை செய்தால் போதும். சிங்கம், ஆமை, பன்றி, யானை, ஆண் எருது ஆகிய ஐந்து விலங்குகளின் தலைகள் பொறிக்கப்பட்ட இந்த யந்திரம், சகல வாஸ்து குறைபாடுகளையும் நீக்கவல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick