ஈச்சங்குடி கல்யாண சாஸ்தா!

ஐயனார் தரிசனம்...இ.லோகேஸ்வரி

ஞ்சை மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது, சிவனார் இங்கே அவர்களுக்குக் காட்சி தந்ததால், இந்த ஊர் ஈசன்குடி என அழைக்கப்பட்டு, பின்னாளில் ஈச்சங்குடி என மருவியதாகச் சொல்வர்.

இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. காஞ்சி மகாபெரியவாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர் இது. தவிர, பெரியவா தமது ஐந்து வயது வரை, தாயார் மகாலட்சுமி அம்மாளுடன் இந்த ஊரில்தான் வசித்து வந்தாராம். எனவே, காஞ்சி மகா பெரியவா இந்த ஆலயத்துக்குப் பலமுறை வந்து ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறார். மேலும், ஈச்சங்குடியில் மகாபெரியவாளின் தாயார் பெயரில் வேதபாடசாலை ஒன்று நிறுவப்பட்டு, இன்றளவும் இயங்கி வருகிறது.

இத்தகு சிறப்புகள் கொண்ட ஈச்சங்குடி தலத்தில், காவிரிக் கரையோரத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார், ஓர் ஐயனார். இவரின் திருநாமம் ஸ்ரீஉடைப்பு காத்த ஐயனார். ஆனால், 'கல்யாண சாஸ்தா' என்றே அழைக்கின்றனர் ஊர்மக்கள். 'இவர் கல்யாணம் முதலான வரங்களைத் தரக்கூடியவர். எனவே, இவரை கல்யாண சாஸ்தா என்று அழைப்பதே சரி!’ என ஐயனாருக்கு இந்தத் திருநாமத்தைச் சொல்லி அருளினாராம் மகாபெரியவா.  

ஈச்சங்குடியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது ஆலயம். கருப்பசாமி, செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஸ்ரீபூரணா புஷ்கலா சமேதராக, அழகுடனும் சாந்நித்தியத்துடனும் காட்சி தருகிறார் இந்த ஸ்ரீதர்மசாஸ்தா!

ஆயிரம் வருடப் பழைமையான கோயில். பல வருடங்களுக்கு முன்பு, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது கரையின் உடைப்பை அடைத்து, ஊருக்குள் வெள்ளம் வருவதிலிருந்து ஊர் மக்களைக் காத்தருளினாராம் ஐயனார். அதனால், உடைப்பு காத்த ஐயனார் எனும் திருநாமம் இவருக்கு அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

உடைப்பு காத்த ஐயனாரை குலதெய்வமாகக் கொண்டவர்கள், கிராம மக்களின் துணையுடன், கடந்த 2004ம் வருடம் கும்பாபிஷேகம் செய்தனர். தற்போது மீண்டும் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகின்றன.

கல்யாண சாஸ்தா ஆலயத்துக்கு வந்து, ஐயனாரைத் தரிசித்து, ஆலயத் திருப்பணியிலும் பங்குகொள்வோம். ஐயனின் அருளுக்குப் பாத்திரமாவோம்!

- படங்கள்: டி.கௌதீஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick