உருகாத வெண்ணையுடன் ஆஞ்சநேயர்

திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலில் கிழக்கு வாசலில், பெருமாள் சந்நிதிக்கு முன்னால் ஆஞ்சநேயர் சந்நிதி கொண்டிருக்கிறார். இவர் மேல் பூசப்படும் வெண்ணெய் கடும் வெயில் காலத்திலும்கூட உருகுவது இல்லை. அத்துடன் கெட்டுப் போவதும் இல்லை; அந்த வெண்ணெயின் மீது ஈயோ, எறும்போ மொய்ப்பதும் இல்லை.

1934ல் இந்தக் கோயிலில் பயங்கரதீ விபத்து ஏற்பட்டபோதும்கூட, அனுமன் திருமேனியில் இருந்த வெண்ணெய் உருகாமல் கெட்டியாக இருந்ததாம். இந்த நிகழ்வு, அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது.

- எஸ்.ராமச்சந்திரன், சென்னை


திருவருள் தரும் திருக்கரங்கள்!

 

பாலக்காடு திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், ஒலவங்காடு சந்திப்புக்கு அருகில் அமைந்திருக்கும் ஏழூர் பகவதியம்மன் ஆலயத்தில் அம்மனின் திருக்கரங்கள் மட்டுமே வழிபடப்படுகின்றன. மேலும் இந்தத் திருக்கோயிலில் காலையில் சரஸ்வதியாகவும், மதியப்பொழுதில் லட்சுமியாகவும், மாலையில் துர்கா தேவியாகவும் எண்ணி அம்மனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த வழக்கம், இந்தத் திருத்தலத்தின் சிறப்பம்சமாக விளங்குகிறது!

- இரா.கணேசன், சேலம்

தேங்காய் வழிபாடு

குணசீலம் பெருமாள் திருக்கோயிலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.

சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடை அம்மன் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீபுற்றீஸ்வரருக்கு தேங்காய் உடைக்கப்படாமல் முழுமையாகவே சமர்ப்பிக்கப்படுகிறது.

ஷீர்டி ஸ்ரீசாயிபாபா கோயிலில், துனியில் (அக்னி குண்டம்) மட்டைத்தேங்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.

- தேனி எஸ்.ஆறுமுகம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick