செல்வ வளம் சேர்க்கும் ராகு

கிரகங்களின் சேர்க்கை... ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

ராகு - சூரியன்:  கலைகளில் தேர்ச்சி, எழுத்தாற்றல், தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசும் சுபாவம், தர்ம குணம் ஆகியவை கொண்டவர்கள். தைரியசாலிகள். குறும்புத்தனமும், அழகாகப் பேசும் திறனும் கொண்டிருப்பார்கள். காரியம் சாதிப்பதில் சாமார்த்தியசாலிகளாகவும், சத்ருக்களை வெல்லும் திறமைசாலிகளாகவும் விளங்குவர். ஒரு சிலருக்கு இதயம் சம்பந்தமான நோய் வரும் வாய்ப்பு உண்டு.

ராகு - சந்திரன்: சகோதர சகோதரிகளுடன் கூடி வாழ்வர். திருமணம் சற்றுத் தாமதமாகவே நடக்கும். பொதுவாக நல்ல குணங்களை அதிகம் கொண்டிருக்கும் இவர்கள், மற்றவர்களைச் சுலபத்தில் நம்பிவிட மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம். உயர்ந்த கல்வி அறிவு பெற்றிருக்கும் இவர்கள், குறைந்த உழைப்பில் நிறையச் சம்பாதிப்பார்கள். சிக்கனமாக இருந்து செல்வத்தை மேலும் மேலும் பெருக்குவர். இவர்களுக்கு எதிரிகளால் ஆபத்துக்கள் அதிகம் உண்டாகும். பணியின் காரணமாகவோ, கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ கணவன் மனைவி இடையில் தற்காலிகமான பிரிவு ஏற்படக்கூடும்.

ராகு - செவ்வாய்: உஷ்ணமான உடல் கொண்ட இவர்கள், உணவில் காரம், புளிப்பு போன்ற வற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நேரம் தவறாமையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் இவர்கள், ஆண்மைக்கே உரிய கம்பீரத்துடன் காணப்படுவர். இவர்களின் பணி பெரும்பாலும் காவல், ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே அமையும். சகோதரர்களால் ஆதாயம் பெறுவர். சட்டத்துறையில் நிபுணத்துவமும், புரட்சிகரமான எண்ணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுடைய எண்ணங்கள் புரட்சிகரமாக இருக்கும். இவர்கள் எதிர்பாராமலேயே பிறருடைய சொத்துக்கள் இவர்களுக்கு வந்து சேரும். கடல்வாழ் உயிரினங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.

ராகு - புதன்: நிலம், வீடு, மாடு, கன்றுகள், பால்பாக்கியம், கீர்த்தி, கல்வியில் திறமை, வண்டிவாகனங்கள் முதலியவற்றுடன் வாழ்வர். படித்த அறிஞர்களாகவும், கவிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணிபுரிவர்.  நாகரிகமாக உடை அணிவார்கள். எல்லோருடனும் சகஜமாகப் பழகும் இவர்கள், அதிக ஆசைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். வாக்கு நாணயம் தவறாதவர் கள். உறவினர்களாலும் நண்பர்களாலும் பெரிதும் போற்றப்படுவார்கள். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் தனித்தன்மையுடன் ஈடுபட்டுப் புகழ் பெறுவார்கள்.

ராகு - குரு: இவர்களை அவசர புத்தி உள்ளவர்கள் என்றே சொல்லலாம்.எந்த ஒரு காரியத்தையும் அவசரப்பட்டுச் செய்துவிட்டு அவஸ்தைப் படுவார்கள். சுகசெளகர்யங்கள் நிரம்பப் பெற்றவர்கள். செல்வம் செல்வாக்குடன் இருக்கும் இவர்கள், சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை அடிக்கடி சந்திப்பார்கள். தான தர்மம் செய்வதில் தாராள மனம் கொண்டிருப்பார்கள். பெண்களாக இருந்தால், எப்போதும் பிறந்த வீட்டின் பெருமைகளைப் பேசுவதில் பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கலகம் செய்வதில் சமர்த்தர்கள். மற்றவர்களின் காரியங்களில் தலையிட்டு, வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வார்கள்.  

ராகு - சுக்ரன்: கள்ளமில்லாத மனம் கொண்டவர்கள். கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பர். எதிலும் திறமைசாலி களாகத் திகழ்வார்கள். மற்றவர்களிடம் சுலபத்தில் நண்பராகிவிடுவர். சம்பாதித்த பணத்தைச் சேர்த்து வைப்பதில் கவனமாக இருப்பர். இவர்களுக்கு மனைவியால் யோகம் உண்டாகும். சதா காலமும் சஞ்சாரம் செய்வதில் ஆர்வம் இருக்கும். சிலருக்குக் கண் பார்வை தொடர்பான குறைபாடுகள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். பண விஷயங்களில் மிகவும் கறாராக நடந்துகொள்வார்கள்.

ராகு - சனி: இந்தச் சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு எந்தப் பொருளையுமே புதிதாக வாங்கப் பிடிக்காது. சமையல் கலையில் தேர்ச்சி பெற்றிருப்பர். உணவு விடுதிகளை காண்ட்ராக்ட் எடுத்து நடத்திப் பணம் சம்பாதிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்துடன் இணக்கமாகவே போக விரும்புவார்கள். சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அதில் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்கு செலவு செய்யவும் தயங்கமாட்டார்கள். இரும்புக் கழிவுகளை வாங்கி விற்பதில் சிலரின் ஜீவனம் அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick