அன்னாபிஷேகம்!

சிவ... சிவ...பூசை. அருண வசந்தன்

பிஷேகம் இறைவனை திருமுழுக்காட்டுவது. அன்னாபிஷேகம்  இறைவனுக்கு வயலில் விளைந்த அரிசியைக் கொண்டு அமுதாக்கி, காய்கறிகளைக் கொண்டு பதார்த்தங்கள் செய்து படைப்பதே ஆகும். காலப்போக்கில் அது அபிஷேகம் என்ற சொல்லை கையாண்டு, இறைவன் திருமேனியில் சாற்றும் வழக்கம் வந்தது என்பர். ஆகமங்கள் சொல்லும் நவநைவேத்தியம் எனும் புத்தமுதூட்டும் விழாவே பல பரிமாணங்களைப் பெற்று அன்னாபிஷேகம் ஆனது என்றும் சொல்வார்கள்.

ஐப்பசி மாதம் பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. உச்சிக்காலத்தில் அக்னி திரட்டி (அக்னியை வளர்த்து), உலை வைத்து தேவையான அளவு அரிசியை வடித்து அமுதாக்குவார்கள். அதற்கேற்ப காய்கறிகளால் கூட்டு, துவையல், பொரியல், அவியல் முதலியவற்றைச் செய்வார்கள். முறுக்கு, அதிரசம் முதலான பட்சணங்கள் செய்து படைப்பதும் உண்டு.

மாலையில் இறைவனை அபிஷேகித்து ஒற்றாடை சார்த்தியபிறகு  (நன்கு துடைத்தல்) அமுதை இறைவனின் திருமேனியை மூடும்படி சார்த்துவார்கள். அதன் மேல் அலங்காரமாக வடை, முறுக்கு முதலானவற்றை அணிவிப்பார்கள். பாகற்காயை அப்படியே வேகவைத்து, புளிகாரம் இட்டு கோத்து ருத்ராட்ச மாலைபோன்று அணிவிப்பார்கள். நீண்ட புடலங்காயை பாம்பாபரணமாக அணிவிப்பார்கள். மேலும் ஸ்வாமிக்கு முன் வாழை இலைகளைப் பரப்பி பல வகையான அன்னங்கள், பணியாரங்கள், காய்கறிகள், கூட்டுகள், பழங்கள், பானங்கள், பாயசங்களை சமர்ப்பித்து நிவேதனம் செய்வார்கள்.

பிறகு தீபாராதனை செய்யப்படும். அதன் பிறகு  மிளகு நீர், தண்ணீர் ஆகியவை நிவேதித்து திரையிடப்படும். முகவாசம் எனப்படும் தாம்பூலமும் நிவேதித்து மீண்டும் தீபாராதனை செய்து அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குவார்கள். அதன் பின்னர் அலங்காரத்தைக் களைந்து சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம் போன்று செய்து, பூசித்து தட்டில் வைத்துப் பரிசாரகர் ஏந்திவர குடையுடன் மேளதாளம் முழங்க சென்று, நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் நன்கு மழை பெய்து ஊர் செழிக்கும் என்பது நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick