ஞானம் அருளிடும் கேது

கிரகங்களின் சேர்க்கை...ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி

கேது  சூரியன்:

 

எப்போதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள். எடுத்த காரியத்தை திறமையுடனும் வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள். தைரியம் மிக்கவர்கள். எதையும் நேருக்கு நேராகப் பளிச்சென்று பேசுவார்கள். நல்ல குணங்களுடன் திகழ்வார்கள். பரந்த நோக்கம் கொண்டவர்கள். உடன்பிறந்தவர்களிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள். வாழ்க்கையில் சிரமங்களும் சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கும். கடைசிவரை உழைத்துக்கொண்டே இருப்பார்கள். உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

கேது  சந்திரன்:

சிவந்த மேனியுடன் அழகான உடல் அமைப்பு பெற்றிருப்பர். கல்வியில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள், ஆசார அனுஷ்டானங்களிலும், தெய்வ வழிபாடுகளிலும் சிரத்தையுடன் ஈடுபடுவார்கள். விவசாயத் தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் போன்ற துறைகளில் ஈடுபடுவர். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்களாகவும், அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிப்படைபவர்களாகவும் இருப்பர். மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். முத்து, பவளம் முதலியவற்றை வியாபாரம் செய்வர்.

கேது  செவ்வாய்:

வாழையபடி வாழையாக இவருடைய வம்சம் தழைத்தோங்கும். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். உடல் வலிமையும், தேஜஸும், நல்ல குணங்களும், அழகான கண்களும் கொண்டிருக்கும் இவர்கள் தர்ம சிந்தனை உள்ளவர்களாகத் திகழ்வர். எங்கும் எதிலும் இவர்களுக்கு வெற்றியே உண்டாகும். இவர்களில் சிலர் ஆகம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பர். ஏரி, குளம், கிணறு வெட்டுதல், கோயில் நிர்மாணம் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் அதிக பாசம் கொண்டிருப்பதுடன், அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பர். பூர்வ ஜன்மம் பற்றிய ஞானம் இருக்கும்.

கேது  புதன்:

தாய்மாமன் வகையில் வாழ்க்கைத் துணை அமையும். எதிர்பாராத வகையில் சொத்துச் சேர்க்கை உண்டாகும். புளிப்பு, காரம் அதிகமுள்ள உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். ராணுவத்தில் கணக்குத் துறையுடன் தொடர்புடைய வேலையில் அமர்ந்திருப்பார்கள். நல்ல உயரமும் பருமனும் கொண்டிருக்கும் இவர்கள் செய்யும் தொழிலில் இவர்களின் பிள்ளைகளும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அந்தஸ்தில் குறைந்தவர்களிடம் அலட்சியத்துடனும், அதிகாரத்துடனும் நடந்துகொள்வார்கள். சொந்த வீட்டில் இவர்களால் இருக்க முடியாது. ஓரளவு தானம் தர்மம் செய்வார்கள்.

கேது  குரு:

பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். ஆடம்பரமற்ற அமைதியான குடும்பம் அமையும். கௌரவமான உத்தியோகத்தில் இருந்து கொண்டு வீடு, வாசல், வாகன சுகங்களை அனுபவிப்பர். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். மடம், கல்வி, அறக்கட்டளை போன்ற சமூக நலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சகல சுகங்களையும் அனுபவிப்பர். கல்வித் தகுதி குறைவாக இருந்தாலும், நல்ல உத்தியோகம் அமையும். மூதாதையர்களின் சொத்துக்களை அனுபவிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அலுவலகத்தில் எதிரிகள் இருந்தாலும், அவர்களால் பாதிப்பு இருக்காது.

கேது  சுக்ரன்:

தாயாரின் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். தாயாருடனான உறவு சுமுகமாக இருக்காது. எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்துகொண்டே இருக்கும். கடன்களும் தொல்லை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். அழகான உடல் அமைப்புடன் ராஜ கம்பீரம் பெற்றுத் திகழ்வார்கள். விரோதிகள் நிறைந்திருந்தாலும், சபையில் மரியாதையுடன் நடத்தப்படுவர். மனைவி வழியில் ஆதரவு இருக்காது. கடல்வாழ் பொருள்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபடுவர்.

கேது  சனி:

இரும்பு, திராவகம் தொடர்புள்ள வியாபாரம் செய்வார்கள். தந்திரசாலிகளாக நடந்துகொண்டு, காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திடமான சரீரம் கொண்டவர்கள். சுகபோகங்களுடன் வாழ விரும்புவார்கள். மாந்திரீக சக்தியைப் பெற்றிருப்பர். மனைவியிடம் மிகுந்த அன்புடன் இருப்பார்கள். பெரிய குடும்பத்தை போஷிப்பவர்களாகவும், சிறந்த கவிஞர்களாகவும் திகழ்வார்கள். மற்றவர்களின் கலக வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை நம்பி, அடிக்கடி மனச் சஞ்சலத்துக்கு ஆட்படுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick