மந்திரி பதவியை மறுத்த மகான்!

குருவே சரணம்...

ரசாங்கத்தில் மந்திரிப் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டால், அதுவும் மகாராஜாவே அப்படிக் கேட்டுக்கொள்ளும்போது எவருக்கேனும் மறுத்துப் பேசத் தோன்றுமா?

ஆனால், அப்படித் தேடி வந்த உயர் பதவியை ஏற்க மறுத்து, பக்திப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இறைவனுடன் ஐக்கியமானவர் ஸ்ரீதர ஐயாவாள். இவரது காலம் கி.பி 1635 - 1720.

மைசூர் சமஸ்தானத்தில் அமைச்சராக இருந்த லிங்கராயர் என்பவருக்கு மகனாகப் பிறந்த ஸ்ரீதர வெங்கடேசன், இளம்பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். இல்லற வாழ்க்கையை மேற்கொண்ட போதிலும், அவருடைய ஆன்மிக நாட்டம் சிறிதும் குறையவில்லை. தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்த அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி மன்னர் கேட்டுக்கொள்ள, விநயத்துடன் மறுத்துவிட்டார் ஸ்ரீதர ஐயாவாள்.

பின்னர், தன் மனைவியையும் தாயையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தார். இந்தக் கலியுகத்தின் துன்பங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றால், இறைவனின் புகழைப் பாடும் கீர்த்தனைகளைப் பாடுவதே மிகச் சிறந்த வழி என்பதை உணர்ந்தவராக, பஜனை சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அவர் திருச்சியில் இருந்தபோது, இறந்து விட்ட ஒரு பெண்ணை, இறைவனைப் பிரார்த்தித்து மீண்டும் உயிர் பெறச் செய்தார். இதனால், அவரிடம் சென்றால் தங்களின் குறைகள் எல்லாம் நீங்கிவிடும் என்று நினைத்த மக்கள், தினமும் சாரி சாரியாக அவரைத் தேடிவரத் தொடங்கிவிட்டனர். இதனால், ஸ்ரீதர ஐயாவாளின் இறைப்பணி தடைபட்டது. இனியும் இங்கு இருந்தால், தம்முடைய வாழ்க்கையின் நோக்கம் ஈடேறாது என்று உணர்ந்தார்.

எனவே, ஒருநாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், தமது குடும்பத்துடன் வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். அப்படி அவர் சென்ற இடம்தான் திருவிசலூர். திருவிசலூரில் அவருடைய ஆன்மிக சாதனைகள் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்று வந்தன.

சிவ - விஷ்ணு பேதம் இல்லாதவராகத் திகழ்ந்த ஐயாவாள், பகவந்நாம பூஷணம், தயா சதகம், ஸ்துதி பத்ததி, சிவபக்தி கல்பலதா, சிவபக்த லக்ஷணம், கிருஷ்ண துவாதச மஞ்சரி, அச்யுதாஷ்டகம், டோலா நவரத்னமாலா போன்ற அரிய பல நூல்களையும் இயற்றியிருக்கிறார். ஆனால், அவற்றுள் பல நூல்கள் கிடைக் காமலும், அச்சில் வராமலும் போய்விட்டது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க ஈஸ்வரை வழிபட்டு வரும் வழக்கமுடைய அவர், அந்த மகாலிங்கேஸ்வரருடனே ஐக்கியமானார்.

கார்த்திகை அமாவாசை அன்று, தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை பெருக்கெடுத்து வரச் செய்த ஐயாவாள், பஜனை பத்ததியைச் சார்ந்த பாகவதர்களால் பெரிதும் போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம், 22.11.14 அன்று திருவிசலூரில் ஸ்ரீதர ஐயாவாள் கங்காகர்ஷண நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கங்கையை கிணற்றில் வரச் செய்ததன் நினைவாக நிகழும் வைபவம் இது. பக்தர்கள் கலந்துகொண்டு மகானின் திருவருளைப் பெற்று வரலாம்.

- க.புவனேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick