149வது திருவிளக்கு பூஜை

உங்கள் உள்ளம் ஒளிரட்டும்!வி.ராம்ஜி

வாசகியின் உற்சாகப் பேச்சு!'வேதங்களும் சாஸ்திரங்களும் பெண்களை மங்கல மங்கையர் என்று போற்றுகின்றன. மங்கையர் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கே மங்கல காரியங்கள் இனிதே நிகழும் என்பது ஐதீகம். இங்கே விளக்குபூஜையில் பங்கேற்கும் பெண்களையெல்லாம் மங்கல மங்கையராகத்தான் பார்க்கிறேன்...'' என்று சிவநெறிச்சுடர் பொன்னம்பலம் பேசத் துவங்கியதும், பெண்கள் அனைவரும் மெளனமாய் இருந்து, கவனிக்கத் தொடங்கினார்கள்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை, கடந்த 7.10.14 அன்று சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 149வது விளக்குபூஜை இது.

''சூரியனும் சந்திரனும் இருளை அகற்றி, ஒளியைத் தருபவை. விளக்கில் எரிகிற சுடரின் பிரகாசத்திலும் இருள் விலகி ஓடிவிடும். சக்தியின் அம்சமாகப் போற்றப்படும் பெண்களுக்கும் ஒளியைத் தருகிற சக்தி இருக்கிறது. ஆக, ஒளி தரும் விளக்கை, ஒளியெனத் திகழும் பெண்களே ஏற்றி, பூஜித்து வழிபடுகிறார்கள் என்பது மிகவும் விசேஷம்! இனி, உங்கள் இல்லங்களில் வெளிச்சமே நிறைந்திருக்கப் போகிறது. உங்கள் உள்ளமும் இல்லமும் பிரகாசமாகத் திகழும் என்பது உறுதி!' என்று பொன்னம்பலம் பேச, உற்சாகமானார்கள் வாசகிகள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் வெங்கடேச தீட்சிதர், பூஜையை சிறப்புற நடத்திக் கொடுத்தார். சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லி, அதை விளக்கி விவரித்தது, இன்னொரு சுவையான சொற்பொழிவாகவே அமைந்தது.

''நம்மூர்ல சக்திவிகடன் இன்னமும் விளக்குபூஜை நடத்தலையேன்னு நினைச்சிட்டே இருந்தேன். அறிவிப்பைப் பார்த்ததும் குஷியாகி, அந்த நிமிஷமே பதிவு பண்ணிட்டேன்' என்று வாசகி சாந்தி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.  

''ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி, சிகிச்சை எடுத்துட்டிருக்கேன். ஆனாலும், சக்திவிகடனைப் படிச்சுட்டு, அதுல சொல்லப்படுற அத்தனை கோயில்களுக்கும் போய் தரிசனம் பண்ணிட்டு வர்றதை  வழக்கமாவே வெச்சிருக்கேன். கங்கைகொண்ட சோழபுரம் கோயில்ல திருவிளக்கு பூஜை நடத்தணும்னு கேட்டுக்கறேன். சக்திவிகடனைப் படிச்சு முடிச்சதுமே அப்படியொரு தெம்பு வந்துடும் எனக்கு. அதுதான் என்னை இந்த பூஜைக்கும் கொண்டு வந்து சேர்த்திருக்கு' என்று உற்சாகத் துடிப்போடு பேசினார் தமிழரசி.  

மாரியம்மன் அருளால், எல்லோருக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்பது உறுதி!

படங்கள்: எஸ்.தேவராஜன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick