ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!

'நான் இந்த உடம்பு மட்டுமே’ என்ற எண்ணம் உடையவனே நரகன். உடல் ஈடுபாட்டை ஒழித்து, அதாவது தேகாத்ம பாவம் (உடல் பற்று) நீங்கி, ஆத்மாவாய் ஒளிவிடுவதே தீபாவளி தத்துவம் என்பது, ரமணரின் திருவாக்கு.

தீபாவளியைப் பற்றி இரண்டு பாடல்களை ரமணர் இயற்றியுள்ளார். அவை எழுதப்பட்ட சூழலும் சுவையானதுதான். ரமணர் எதையும் தமக்காகச் செய்வதில்லை; பிறருக்காகவே செய்வார். ஞானத்தின் அடையாளமே அதுதானே!

ஒரு தீபாவளி தினத்தன்று, தீபாவளி பற்றிப் பாடல் எழுத வேண்டும் என்று ரமணரிடம் வேண்டிக்கொண்டார் அவரின் பக்தரான முருகனார். அவரே சிறந்த கவிஞர். எனவே, 'நீங்களே கவிதை எழுதலாமே?’ என்றார் ரமணர். அதற்கு, ''நீங்கள் எழுதினால் நானும் எழுதுகிறேன்' என்றார் முருகனார். ரமணரும் ஒப்புக்கொண்டு இரண்டு பாடல்கள் எழுதினார்.

முதல் பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

கருத்து: தான் வெறும் உடல் மட்டுமே என்பவன்தான் நரகன். நரகன் யார் என்று அறிந்து, ஞான திருஷ்டியால் அவனைக் கொல்பவனே நாராயணன். ஞானத்தால் நாம் உடல் அல்ல என்று அறிந்து கொள்வதுதான் தீபாவளியாகும்.

2வது பாடல்:  

நரக உருவா நடலையில் உடல
கிரகம் அகம் எனவே கெட்ட  நரகனாம்
மாயாவியை நாடி மாய்த்துத் தானாய் ஒளிர்தல்
தீபாவளியாம் தெளி

கருத்து: உடம்பு நரகம் போன்றது. அதுவே நான் என்ற தவறான கருத்து உடையவன் நரகன். அந்தத் தவறான கருத்தை அழித்து, ஆத்மாவாக ஒளிவிடுவதே தீபாவளி.

ஆக, உடல் நீங்கி, ஆத்மாவாக ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் பகவான் ரமணர் விளக்கும் தீபாவளி தத்துவம்.

- தேனி.பொன்கணேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick