பிணிகள் தீர்க்கும் மாவூற்று!

ம.மாரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி அருகேயுள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது ‘மாவூற்று வேலப்பர்’ ஆலயம்.


பன்னெடுங்காலம் முன்பு, இப்பகுதியின் ஆதிகுடிகளான பளிஞர் இன மக்கள் வள்ளிக்கிழங்கு எடுப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது, வள்ளிக் கிழங்குகளின் வேர்ப்பகுதிகளுக்குக் கீழே சுயம்புவாகத் தோன்றியவர், இந்த வேலப்பர். இன்றைக்கும் கோயில் இந்துச் சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்டதாக இருந்தாலும், ஸ்வாமிக்கு வழிபாடுகள் நடத்துவது பளிஞர் இன மக்கள்தான்.

இந்தத் தலத்துக்கு அருகிலுள்ள நீர் மருத மரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றெடுக்கும் சுனைநீர் வழிந்தோடி, பெரிய தீர்த்தமாகப் பெருகி நின்றதாம். இதன் காரணத்தை ஒட்டியே
அதற்கு ‘மாவூற்று’ என்றும், ஸ்வாமிக்கு மாவூற்று வேலப்பர் என்றும் திருப்பெயர்கள் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தீராத வயிற்று உபாதை, தோல் சம்பந்தப்பட்ட பிணிகள் உள்ளவர்கள் இங்கு வந்து மாவூற்றில் நீராடி, வேலப்பரை வழிபட்டுச் சென்றால், விரைவில் பிணிகள் நீங்கி நலம்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சித்திரைத் திருவிழாவில் பால்குடம், காவடி சுமந்து வந்தும், அலகு குத்திக்கொண்டு வந்தும் வேலப்பனை வழிபடுகிறார்கள். அதேபோல் இந்தத் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட, விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். மஹா சிவராத்திரி, குலதெய்வ பெரிய கும்பிடு விழா எடுக்கும்போது, இங்கிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று பூஜைகள் மேற்கொள்கிறார்கள். மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் மாவூற்று வேலவனை வழிபட்டுச் சென்றால், தமிழ்ச் சொற்பொழிவுகளில் சிறந்து விளங்கலாம்.


மாவூற்று வேலப்பரும், விநாயகரும் வடக்கு நோக்கி அருள்வது இத்தலத்தின் தனிச் சிறப்பம்சம். அடிவாரத்தில் அருளும் முன்னோடி கருப்பும் சிறந்த வரப்ரசாதி. இவரை வழிபட கடன் தொல்லை நீங்கும்; செய்யும் தொழிலும் பணியும் சிறக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick