பெண்களின் காவல் தெய்வம்!

ரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீசீதேவி அம்மன் ஆலயம். சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில், பெண்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் ஸ்ரீசீதேவி அம்மன். இந்த அம்மனின் தங்கை என்று சொல்லப்படும் பாரியூர் கொண்டத்துக் காளியம்மனை மாந்த்ரீகன் ஒருவன் மந்திரத்தால் அடிமைப்படுத்தி வைத்திருந்தான். அவனைக் கொன்று, தன் தங்கையை விடுவித்த சீதேவி அன்று முதல் பெண்களின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறாள்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் சீதேவி அம்மனின் திருவுள்ளக் குறிப்பு அறியும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பக்தர்கள் தாங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை மனதில் நினைத்துக்கொண்டு பூசாரியிடம் செவ்வரளிப் பூவைக் கொடுக்கின்றனர்.

அவர், பூவை அம்மனின் திருமுடியில் வைப்பார். ஐந்து நிமிடத்துக்குள்ளாக அந்தப் பூ அம்மனின் வலப்புறம் விழுந்தால் காரிய ஸித்தி என்றும், இடப்புறத்தில் விழுந்தால் காரியம் சற்று தாமதமாக நடக்கும் என்றும், பூ விழாமல் இருந்தால் காரியம் நடக்காது என்றும் நம்பிக்கை நிலவுகிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றிவைத்தும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் அம்மனுக்கு முளைப்பாரி வைத்தும் வேண்டிக்கொள்கிறார்கள்.

இந்தக் கோயிலின் ஆனி மாத தீமிதித் திருவிழாவும் தேர்த் திருவிழாவும் பிரசித்திப் பெற்றவை. இந்த தீமிதித் திருவிழாவின் போது, ஊரில் உள்ள கால்நடைகளுக்கு எந்த நோய்நொடிகளும் வராமல் இருக்க, ஒரு வெள்ளை குதிரை தீமிதிப்பது சிறப்பாகக் கருதப் படுகிறது. இதை நினைவுபடுத்தும் வகையில் ஒரு குதிரையின் சிற்பம் கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ளது. ஆடி மாதத்திலும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அமைந் துள்ள ஸ்ரீசீதேவி அம்மன் ஆலயம், தினமும் காலை 5 மணியில் இருந்து, மாலை 7 மணி வரை நடை திறந்திருக்கும்.

 - கு.ஆனந்தராஜ், படங்கள்: அ.நவின்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick