ராஜயோகம் அருளும் ராஜ துர்கை!

துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரிய துர்கை அம்மன் ராஜ துர்கை என்ற திருப்பெயருடன் திருவாரூர் திருமஞ்சன வீதியில் கோயில் கொண்டு அருள் புரிகின்றாள்.

ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புக்தியோ நடைபெறும்போது, இங்கே வந்து ராஜ துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும், அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய திதிகளிலும் ராஜ துர்கை அம்மனை முல்லை, மல்லிகை, நீலோத்பலம், சிவப்பு அரளி, விருட்சிப் பூ, மரிக்கொழுந்து போன்ற மலர்களில் ஏதேனும் ஒன்றினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ராஜ துர்கை அம்மனுக்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் ராஜ துர்கை அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். இந்த சந்தனத்தைப் பிரசாதமாகப் பெற்று உடலில் தடவிக் கொண்டால், தோல் சம்பந்தமான பிணிகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

த.க.தமிழ் பாரதன்
படங்கள்: க.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick