‘இது எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம்!'

குருவடி சரணம்..!எஸ்.கண்ணன்கோபாலன்

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 37வது பீடாதிபதியாக ஸ்ரீபாரதி தீர்த்த ஸ்வாமிகளால் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 23ம் தேதி விதுசேகரபாரதி என்ற திருப்பெயருடன் பொறுப்பேற்று இருக்கும் புதிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, திருப்பதி தேவஸ்தான வேத பாடசாலையின் முதல்வராக இருப்பவரும், புதிய பீடாதிபதியின் தந்தையுமான குப்பா சிவசுப்ரமண்ய அவதானி அவர்களைச் சந்திக்கத் திருப்பதி சென்றோம். 'சக்தி விகட’னில் இருந்து வருவதாகக் கூறியதுமே, நம்மை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்.

''சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடத்தின் பீடாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உங்கள் பிள்ளையைப் பற்றி சொல்லுங்களேன்...''

''குப்பா வேங்கடேச்வர ப்ரசாத சர்மா என் இரண்டாவது பிள்ளை. கோவிந்தராஜ பெருமாளின் நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர். குழந்தையில் இருந்தே வேத சாஸ்திரங்களில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். பத்து வருஷத்தில் முடிக்க வேண்டிய பாடங்களை ஏழு வருஷத்திலேயே முடித்துவிட்டார்.''

''அவருக்கு இப்படி ஓர் அரிய வாய்ப்பு கிடைக்கும் என்பது  முன்பே தெரியுமா?''

''தெரியாது. ஆனால், எனக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு என் பிள்ளைக்குக் கிடைத்தது. 94ம் வருஷம் நான் சிருங்கேரிக்கு வந்து, ஆசார்ய ஸ்வாமிகளிடம் படிக்க விரும்புவதாகத் தெரிவித்தபோது, ஸ்வாமிகள் மறுத்துவிட்டார்.

2009ம் வருஷம் என் பிள்ளையை சிருங் கேரிக்கு அழைத்துச் சென்றபோது ஆசார்ய ஸ்வாமிகளின் தாயார், 'வேங்கடேச்வர ப்ரசாத்தை இங்கே விட்டுவிட்டுச் செல்லுங்களேன். ஆசார்ய ஸ்வாமிகளிடமே வேத சாஸ்திரங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமே!’ என்றார். ஆசார்ய ஸ்வாமிகளும் அதையே சொன்னபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளையை அடுத்த பீடாதிபதியாக ஸ்வாமிகள் தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்புதான் அது என்பது அப்போது எனக்குத் தெரியாது.

கடந்த ஜனவரி 2 அன்று, ஆசார்ய ஸ்வாமிகள் அழைப்பின்பேரில், சிருங்கேரிக்குச் சென்றோம். 4ம் தேதி காலையில் மந்த்ராக்ஷதை பெறுவதற்காக சென்றபோது என் மனைவிக்கு மட்டும் மந்த்ராக்ஷதை கொடுத்த ஸ்வாமிகள், என்னை பிள்ளையுடன் பிற்பகல் 3 மணிக்கு வருமாறு உத்தரவு கொடுத்தார். பிற்பகலில், நானும் என் பிள்ளையும் ஆசார்ய ஸ்வாமிகளை தரிசிக்கச் சென்றோம். அப்போது ஸ்வாமிகள், ஸ்ரீசாரதாம்பாளின் ஆக்ஞைப்படி என்னுடைய பிள்ளையை அடுத்த பீடாதிபதியாகத் தேர்வு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.''  

''அப்போது உங்கள் இருவரின் மனநிலை எப்படி இருந்தது?''

'என் பிள்ளையைப் பொறுத்தவரை எந்த ஒரு சலனமும் இல்லை. பரப் பிரம்மம் மாதிரி நின்றுகொண்டிருந்தார். என்னால்தான் மனதைக் கட்டுப் படுத்த முடியவில்லை(இதைச் சொல்லும்போதே அவரின் கண்கள் கசிந்தன). பிறகு, ஒருவாறாக சமாளித்துக் கொண்டேன். என் பிள்ளை ஒரு பெரிய ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிப்பார் என்று ஆசார்ய ஸ்வாமிகள் ஆறுதல் கூறினார். அரிதான இந்த வாய்ப்பு அமைந்தது பூர்வ புண்ணியம்தான்!'

நெகிழ்வும் மகிழ்வுமாக நிறைவடைந்தது சந்திப்பு!

படங்கள்: ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick