மண் மணக்கும் தரிசனம்!

துஷ்ட சக்திகள் விலகும்!

காடன் எனும் அசுரன், தேவர்களுக்கு மிகுந்த இம்சைகள் கொடுத்துக் கொண்டிருந்தான். இதில் கலங்கிப்போன தேவர்கள், ஐயனாரிடம் சென்று முறையிட்டனர். அதையடுத்து, ஆவேசத்துடன் தன் சாட்டையைச் சுழற்றியபடி காடனை விளாசித் தள்ளினார் ஐயனார். அதில் அரண்டு தவித்த காடன், அடி தாங்க முடியாமல் வந்து விழுந்த தலம் இதுவே என்கிறது ஸ்தல புராணம். காடன் மனம் திருந்திய தலம் என்பதால், காடன்திருந்தி என்று பெயர் பெற்ற இந்த ஊர், இன்றைக்குக் காடந்தேத்தி என அழைக்கப்படுகிறது. 

திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத் தில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்த ஊர்.

சத்யபூரணர் எனும் மகரிஷி, ஐயனாருக்கு இங்கு ஆலயம் எழுப்பினார். அத்துடன், கோயிலுக்கு அருகிலேயே ரிஷி தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார். இதில் நீராடினால், தானம் செய்த பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்!  

சாஸ்தாவை வணங்கினால் சனி பகவானின் பேரருளைப் பெறலாம் என்பதால், சனிக்கிழமைகளில் இங்கு சாஸ்தாவை தரிசிக்க வரும் பக்தர்கள் ஏராளம். தொடர்ந்து ஏழு சனிக்கிழமைகள் இங்கு வந்து, எள் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து பிரார்த்தித்தால், தீராத நோயும் தீரும், பித்ரு தோஷங்கள் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் பெரியாச்சி அம்மன், கருணையே வடிவானவள். பெண்கள் சாஸ்தாவையும், பெரியாச்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை. மேலும், பெண்களுக்கான உடல் பிரச்னைகள் யாவும் நீங்கும்.

அரிச்சந்திர மகாராஜா, பிள்ளை வரம் வேண்டிப் பலன் பெற்ற திருத்தலமும் இதுவே! எனவேதான், இங்கே உள்ள நதிக்கு, அரிச்சந்திரா நதி என்ற பெயர் அமைந்ததாம். அதேபோல், வீரசேனன் எனும் மன்னனுக்கு, இழந்த பதவியையும் ஆட்சியையும் தந்தருளினாராம் ஐயனார். ஆகவே, இங்கு வந்து பிரார்த்தித்தால், பிள்ளை வரம் கிடைக்கும்; இழந்ததையெல்லாம் திரும்பப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

காடந்தேத்தி ஐயனார் கோயில் சிவாச்சார்யர்கள், சபரிமலையில் நிகழும் முக்கிய விழாக்களில் இன்றைக்கும் பங்கெடுப்பது வழக்கம். அதேபோல், சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் துவங்குகின்றனர். பங்குனி உத்திரப் பெருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி ஞாயிற்றுக் கிழமையில்,ஸ்ரீபூர்ணா ஸ்ரீபுஷ்கலா சமேத சாஸ்தாவுக்குத் திருக் கல்யாண வைபவமும் சிறப்புற நடைபெறுகிறது. 

         

துஷ்ட சக்திகளுக்கு ஆட்பட்டுத் தவிப்பவர்கள், மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து மனுவாக எழுதிப்போட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் குணமாகும். பொருட்கள் களவு போயிருந்தால், ஐயனாரிடம் வந்து முறையிட்டால் போதும்... காணாமல் போன பொருள் சீக்கிரமே திரும்பக் கிடைத்துவிடுமாம்.        

               த.க.தமிழ் பாரதன்,  

படங்கள்: க.சதீஸ்குமார்          

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick