மண் மணக்கும் தரிசனம்!

நன்மைக்கு துணை நிற்கும் வீரப்ப ஐயனார்!ம.மாரிமுத்துபடங்கள்: வீ.சக்தி அருணகிரி

தேனி அருகே உள்ள அல்லிநகரத்தில் இருந்து மேற்கு நோக்கி பயணித்தால், சுமார் 5 கி.மீ. தொலைவில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் வீரப்ப ஐயனார். இவர் இங்கு குடிகொண்ட வரலாறு சுவாரஸ்யமானது

சுமார் 400 வருடங்களுக்குமுன் வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த பகுதியில் தங்களின் ஆடுமாடு களுக்காக பட்டி அமைத்திருந்தனர். ஒருநாள், பட்டியில் பால் கறந்து எடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் பயணப்பட்டார் ஒருவர். வழியில் திடுமென கருமேகங்கள் திரள, பயங்கரமாக இடிமுழக்கம் கேட்டது. இதனால் நடுநடுங்கிய அந்த நபர் கல் இடறி தரையில் சாய்ந்தார். அதே நேரம் அவர் கொண்டு சென்ற பால் மாயமாக மறைந்துபோனது. அதைக் கண்டு அதிர்ந்தவர், ஓடிச்சென்று கிராமத்துப் பெரியவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார்.

மறுநாள், ஒட்டுமொத்த ஊரும் அங்கே திரண்டது. கூட்டத்தில் ஒருவர், பால் கொண்டு வந்த அன்பரின் காலை இடறிவிட்ட கல்லைப் பெயர்க்க நினைத்து ஓங்கி அடித்தார். மறுகணம் சம்மட்டிக்காரர் தூக்கிவீசப்பட, கல் இரண்டாகப் பிளந்து ரத்தம் கொப்பளித்தது! அப்போது, தூக்கிவீசப்பட்டவர் மீது அருள் வந்தது. ''நான்தான் வீரையா. இந்த எல்லையின் காவல் தெய்வம். எனக்குக் கோயில் எடுத்து வழிபட்டால், ஊரை சுபிட்சம் அடையச் செய்வேன்'' என்று அருள்வாக்கு சொன்னார். அதன்படி, பணசலாற்றங்கரையில் உருவானதுதான் இந்தக் கோயில் என்கிறது தலபுராணம்.

கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் வீரப்ப ஐயனாருடன், அவரது சகோதரர்களான சோலைமலை ஐயனார், குருவீரப்ப ஐயனார், சொக்கனாத ஐயனார் ஆகியோரும் வீற்றிருப்பது சிறப்பு. முன்னோடி ஐயனார், முருகன், விநாயகர் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு இந்தத் தலத்துக்கு எவரும் கெட்ட எண்ணத்துடன் வரமுடியாது. அப்படி எவரேனும் வந்தாலோ, அல்லது தங்களின் கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டிக்கொண்டாலோ, அன்று முதல் அவர்களுக்கு துன்பங்களே தொடர்கதையாகிவிடுமாம்! நல்லன நினைத்து நல்லதையே வேண்டிக்கொள்ளும் அன்பர்களுக்கு பக்கத்துணையாக இருப்பாராம் வீரப்ப ஐயனார்!

பௌர்ணமி உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு ஸ்வாமியை வழிபட மனோதைரியம் பெருகும்; கோழைகளூம் வீரர்களாகிவிடுவர்கள் என்கிறார்கள் பக்தர்கள். சித்திரை மாதத்தில், ஏராளமான பக்தர்கள் காவடியெடுத்து  பாத யாத்திரையாக வந்து இந்த ஐயனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மேலும், இங்கு அருளும் முன்னோடி கருப்புக்கு கிடாவெட்டி, பொங்கலிட்டு, அன்னதானம் செய்வதும் உண்டு. இந்தத் தலத்துக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபட்டால், வாழ்வில் சகல வளங்களும் பால் போல் பொங்கி பெருகுமாம்! மகாசிவராத்திரி அன்று உறங்காமல் விழித்திருந்து வீரப்ப ஐயனை வழிபட்டுச் செல்வதால் கல்யாணத் தடைகள் அகலும், அரசுப்பணிகள் கைகூடும், பணி மாறுதல் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயில் வனப்பகுதியில் அமைந்திருப்பதால், பக்தர்களின் வசதிக்காக, கோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு நடைசார்த்தப்படுகிறது. அல்லிநகரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick