சிற்ப சின்னங்கள்!

கோயில் நகரம்!இ.லோகேஸ்வரிபடங்கள்: சி.சுரேஷ்பாபு, பா.சரவணமூர்த்தி

ட்டாடக்கல்லு கர்நாடக மாநிலத்தின் வடக்கில் பாகல்கோட் மாவட்டத்தில், மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில் நகரம். அன்றைய சாளுக்கிய அரசர்கள் பலரும் இங்குதான் பட்டாபிஷேகம் மற்றும் முடிசூட்டு விழாவை நடத்தியிருக் கிறார்கள். இதையொட்டி 'பட்டாபிஷேகக் கல்’ என்று அழைக்கப்பட்ட இத் தலத்தின் பெயர் பின்னாளில் 'பட்டாடக்கல்லு’ என்றானதாம். 

விரூபாக்ஷர் ஆலயம், சங்கமேஸ்வரர் ஆலயம்,  மல்லிகார்ஜுனர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கட்சிதேஸ்வரர் சம்புலிங்கேஸ்வரர் ஆலயம், கல்கநாதர் ஆலயம், பாபநாதர் ஆலயம் மற்றும் சமணர் ஆலயம் என எட்டு ஆலயங்களுடன் திகழும் இந்த ஊரை, உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக (1987ல்) அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ.

பெரும்பாலும், போர்களில் கிடைத்த வெற்றியின் சின்னங்களாகவே இந்த ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஒன்று, சாளுக்கியப் பேரரசன் 2ம் விக்கிரமாதித்தனின் மனைவிகள் இருவர் (இருவரும் சகோதரிகள்) போரில் பெற்ற வெற்றியை கெளரவிக்கும் வகையில், அந்த மன்னனால் கட்டப்பட்டது என்கிறது சரித்திரக் குறிப்பு. கோயில்கள் ஒவ்வொன்றும் ஒருபுறம் தமிழக பாணியிலும், ஒருபுறம் ஒடிசா பாணியிலுமான கட்டுமானத்தைக் கொண்டுள்ளன. ஆலயங்களின் கோபுர அமைப்புகள் இதை வெளிப்படுத்துகின்றன.

உறுதியான தூண்களும், அதில் அமைந்துள்ள சிற்பங்களும் கண்ணையும் கருத்தையும் கொள்ளைகொள்வன. குறிப்பாக, ராமாயணம் மற்றும் மகாபாரத சம்பவங்களை விளக்கும் தூண் சிற்பங்கள் கொள்ளை அழகு!

மற்றொரு தூண் சிற்பத்தில், பெண்ணொருத்தி தன் காதலனுக்குக் கடிதம் எழுதியதைக் குற்றமாகக் கருதி, அவள் தலையை யானையின் காலால் இடறச் செய்யும் காட்சி மிக தத்ரூபமாக அமைந்துள்ளது.

அழகு நளினங்களுடன், சிற்சில சிற்பங்களில் மூர்க்க பாவனையையும் காண முடிகிறது. அறக் கருணையோடு மறக் கருணையும் சேர்ந்து மிளிர்வது சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்று!

சுவர்களில் தென்படும் கன்னட வரிகளில் இருந்து, போர்க் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதும், இக்கோயிலுக்கு தேவதாசிகளை தானமாக அளித்த குறிப்பும் தெரியவருகிறது.

கோயிலுக்கு முன் மிகப் பெரிய நந்தி சிலை ஒன்று உள்ளது. கறுப்பு கிரானைட் கல்லால் ஆன இந்த நந்தியெம்பெருமான் பல்வேறு படையெடுப்புகள், கொள்ளைகள் எல்லாவற்றையும் தாண்டி இன்றைக்கும் அழகு குறையாமல் கனகம்பீரமாகக் காட்சி தருகிறார்.

சாளுக்கிய சிற்பக் களஞ்சியங்களாகத் திகழும் பாதாமி மற்றும் ஐஹோல் ஆகிய தலங்களுக்கு நடுவில் பட்டாடக்கல்லு அமைந்துள்ளதால், இங்கு வருபவர்கள் மூன்று இடங்களையும் கண்டுகளித்துச் செல்கிறார்கள்.

பாதாமியில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும், ஐஹோலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பட்டாடக்கல்லு. சிற்பக்கலை அழகில் இத்தலம் பள்ளிக்கூடம் என்றால், பாதாமி ஒரு பல்கலைக்கழகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick