தெரிந்து கொள்ளுங்கள்

* இன்னின கிரகங்களை இன்னின்ன கிழமைகளில் வழிபடவேண்டும் என்று நியதி ஏதேனும் உண்டா?

சாமி கும்பிட கிழமை கிடையாது. நமக்கு சௌகரியப்படும்போதெல்லாம் வழிபடலாம். வேறு வேலை இல்லை. காலையில் இருந்து மாலை வரை கோயிலிலேயே இருக்க முடியுமா... நாள் முழுக்க நமஸ்காரம் பண்ணுங்கள். காலை வேளைகளில் பிரதட்சணம் பண்ணுங்கள். பகவானுக்கு சண்டே அண்ட் கவர்ன்மென்ட் ஹாலிடேஸ் எல்லாம் கிடையாது. அதனால் நாள், கிழமை எதுவும் பார்க்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் ஆராதனம் செய்யலாம். 

* தட்சிணாமூர்த்தியை 'குரு’ என்கிறோம். நவக்கிரகங்களிலும் குரு பகவான் கல்விக்காகப் போற்றப்படுகிறார். இந்த இருவரில் சிறந்த கல்வி பெறுவதற்கு யாரை பூஜிக்க வேண்டும்? 

கடவுள் _ எல்லாவற்றுக்கும் மேலே இருப்பவர். அவருக்கு மேல் எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட தட்சிணாமூர்த்தியைத்தான் குரு என்கிறோம். அந்த குரு என்பவர், எந்தக் கோணத்தில் இருக்கிறார் என்றால், நம்மிடம் என்னவெல்லாம் சந்தேகம் இருக்கிறதோ அவற்றை எல்லாம் தன் உபதேசத்தால் போக்கி விடுவார். அதில் ஒரு விசேஷம் என்ன என்றால், தட்சிணாமூர்த்தி சிறு வயதுக்காரர். அவரிடம் கல்வி கற்க வரும் சனகாதி முனிவர்கள் எல்லாம் வயதில் மூத்தவர்கள். அவர் வாயே திறக்க மாட்டார். மாணவர்களுக்குச் சந்தேகம் விலகிவிடும். வ்ருத்தா சிஷ்யா குருர் யுவா குரோஸ்து மௌனம் வ்யாக்யானம்... அப்படியரு கௌரவம் தட்சிணாமூர்த்தி என்னும் குருவுக்கு உண்டு. பரம்பொருளான சாட்சாத் பரமேஸ்வரன்தான் ஆல விருட்சத்தின் கீழே தெற்குப் பார்த்து தட்சிணாமூர்த்தியாக உட்கார்ந்திருக்கிறார். மௌனத்தில் உறைந்திருக்கிறார். நமக்கு இருக்கும் சந்தேகங்களை, நாம் சொல்லாமலேயே போக்கவல்ல, எல்லாவற்றுக்கும் முதலான குரு  தட்சிணாமூர்த்தி வடிவில் இருக்கக் கூடிய சாட்சாத் பகவான். கையில் சின்முத்திரை வைத்திருப்பார். அந்த முத்திரையால் ஜீவப்பிரமையைப் போக்குவார். இந்த குருதான் எல்லாக் கலைக்கும் எல்லாச் செயலுக்கும் மூலம்.

இந்த குருவைச் சொல்லும்போது நவக்கிரகத்தில் உள்ள குருவைச் சொல்லாதீர்கள். நவக்கிரகங்களில் குரு என்று ஒருத்தர் இருக்கிறார். விண்வெளியில், நமது காற்று மண்டலத்தைத் தாண்டி எத்தனையோ காத தூரத்தில் பிரவஹம் என்கிற காற்றினால் ஒன்பது கிரகங்கள் சுழன்றுகொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு குரு என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்தப் பெயர் இருப்பதாலேயே இவர், அவராகிவிட முடியுமா? ? 

தேவர்களின் ஆசிரியனான பிரஹஸ்பதி என்கிற குரு உங்கள் கணக்கில் மூன்றாவது குரு... அவர் தனி! அவரை தட்சிணாமூர்த்தியோடு சொல்லக் கூடாது. பிரதான குருவான தட்சிணாமூர்த்தியிடம் இருந்து எல்லாவித அஞ்ஞான நிவர்த்தியும் கிடைக்கும். மற்ற குருக்களிடம் அந்தத் தகுதி இல்லை. தட்சிணாமூர்த்திதான் ஒரிஜினல் குரு. தேவகுருவும் கிரக குருவும் டூப்ளிகேட். இவர்கள் செய்வதை எல்லாம் செய்யும் தகுதி தட்சிணாமூர்த்திக்கும் உண்டு. அதற்கு மேலும் தகுதி உண்டு. நினைத்தாலே அகற்றும் தகுதி தட்சிணாமூர்த்திக்கு மட்டுமே உண்டு. அவர் காலில் போய் விழுங்கள். மற்ற இரண்டு குருவும் தட்சிணாமூர்த்திக்குள் அடக்கம்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick