பிணிகள் தீர்ப்பாள் பாகம்பிரியாள் !

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கிழக்கே சுமார் 10 கி.மீ தொலை விலுள்ள திருவெற்றியூரில் (திருவொற்றியூர் அல்ல!) அமைந்திருக்கிறது ஸ்ரீ பாகம்பிரியாள் திருக்கோயில். புராதனமானதும் சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்டதுமான இந்தக் கோயில் சிவாலயம்தான் என்றாலும், இங்கு அம்பாளே பிரதானம்! 

பெருமாள் வாமனராக வந்து மகாபலியை பாதாளத்தில் அழுத்திய திருக்கதை நாமறிந் ததே! மகாபலியின் நிலையறிந்த தர்மதேவதை, மனம் வெதும்பி பெருமாளின் காலில் புற்று உருவாகும்படி சபித்தாள். பெருமாளின் இந்தச் சாபம் தீர்ந்த (புற்று நீங்கிய) திருத்தலம் திருவெற்றியூர். இங்குள்ள சிவனாருக்கு ஸ்ரீ பழம்புற்றுநாதர் என்பது திருநாமம்.

பிணிகளும் தோஷங்களும் நீங்குவதற்காகப் பிரார்த்தித்துக்கொண்டு, பாதயாத்திரையாக இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். வியாழக்கிழமைகளில் இரவில் இந்தக் கோயிலில் தங்கியிருந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடி, ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் பிணிகளும், தோஷங்களும் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடி, அம்பாளை வழிபட்டு, அவள் சந்நிதியில் தரப்படும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்தினால், சகல பிணிகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

விவசாயிகள், வேளாண்மை துவங்கும் முன்பும், அறுவடை முடிந்த பிறகும் இங்கு வந்து அம்பாளை வழிபடுகின்றனர். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது, இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

  தகவல், படங்கள் : ர.அரவிந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick