வாயுமைந்தன் வழிபட்ட வள்ளி மணாளன் !

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவன்மலை. மேருமலை யின் உச்சி பாகமே உதிர்ந்து விழுந்து இங்கு நிலை பெற்றதாக தலபுராணம் சொல்கிறது. இதன் உச்சியில் பார்வதிதேவி தவமியற்றியதால் சக்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சிவகிரி, சிவசைலம், வெள்ளிமலை, செம்புமலை, பணமலை ஆகிய பெயர்களாலும் இதைப் போற்றுகின்றன புராணங்கள். 

ஆகமங்கள் குறித்து அறிய விரும்பிய அகத்தியர் இங்கு வந்து தவம் செய்தார்; அப்போது அவர் தமது கமண்டல நீரைக் கொண்டு இங்குள்ள தீர்த்தத்தை (நீர்ச்சுனையை) உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது.இது தொடர்பான ஐதீக விழா கார்த்திகை பெளர்ணமியில் கொண்டாடப்படுகிறது.

சிவ வாக்கியரும் இங்கு தவம் செய்திருக்கிறார். அவர் பூஜித்த ஆத்ம லிங்கம் இத்தலத்தில் போகசக்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவத் தலம் என்றாலும், முருகப்பெருமான் இங்கு சிறப்பிடம் பெற்றிருக்கிறார். வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணந்த முருகக்கடவுள் நாரதரின் அறிவுரைப்படி, அங்கிருந்து சிவன் மலைக்கு எழுந்தருளியதாகத் தலபுராணம் சொல்கிறது. இங்கே, சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளிதேவியுடன் மணக் கோலத்தில் அருள்கிறார் முருகன்.

மேலும் அழகுமலை, சென்னிமலை, கைத்த மலை உள்ளிட்ட 12 மலைகள் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக சிவன்மலை அமைந்திருப்பதும், கருவறையின் இருபுறமும் நவவீரர்கள், சுரலேகா நாயகி மற்றும் ஜரஉத்ரேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.

அனுமன் தனது சக்தியை அதிகரித்துக்கொள்ள விரும்பி, வைசிய முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து முருகனை வழிபட்டு அருள்பெற்றதாகத் திருக்கதை உண்டு. மலையின் அடிவாரத்திலேயே அனுமந்தராயர் ஆலயம் உள்ளது. அதேபோல் முனிவர் ஒருவரின் சாபத்தால் பாம்பாக மாறிய நகுடன் என்ற மன்னன், இங்கு வந்து முருகனை வழிபட்டுச் சாபம் நீங்கப்பெற்றானாம்.

நாமும் இத்தலம் சென்று முருகனை வழிபட்டு, தோஷங்கள் நீங்கப்பெறுவோம்; சந்தோஷமான வாழ்வைப் பெறுவோம்.

கட்டுரை, படங்கள்: பா.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick