வல்வினைகள் தீர்க்கும் வட்டமலை முருகன் !

வட்டமலை வேலவா சரணம்கு.ஆனந்தராஜ்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, வட்டமலை வேலாயுதசுவாமி கோயில். 

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், முருக பக்தரான சித்தர் ஒருவர் இந்த மலைப்பகுதி வழியே பயணப் பட்டார். அடிவாரத்தில் ஓரிடத்தில் சிறிதுநேரம் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். அப்போது ஓர் அசரீரி, ''பக்தனே, இந்த மலையின் மீது மேற்குப்புறத்தில் நான் குடிகொண்டிருக்கிறேன்.உன் கண்களுக்கு மட்டுமே புலப்படுவேன்'' என்று ஒலித்தது.

அதை முருகனின் கட்டளையாகவே உணர்ந்த சித்தர், மலைக்கு மேல் ஏறிச்சென்றார். அங்கே, அசரீரி குறிப்பிட்ட இடத்தில், மயில் மீது அமர்ந்த கோலத்தில் வேலாயுத ஸ்வாமி காட்சியளித்து மறைந்தார். அந்த இடத்திலேயே சிறு குடிசை அமைத்து வேலாயுத ஸ்வாமி சிலையையும் வேலாயுதத்தையும் பிரதிஷ்டை செய்தார் சித்தர். தொடர்ந்து, மலைக்கு மேல் இருந்த தீர்த்தச் சுனையில் இருந்து நீரெடுத்து வந்து வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு முருகனின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றார். இதைத் தொடர்ந்து, ஆயுள் முழுவதும் தவத்தில் ஆழ்ந்து விடும் நோக்கத்துடன், மலையின் நடுப்பகுதியில் உள்ள குகைக்குள் சென்ற சித்தர், அதன் பிறகு வெளியே வரவே இல்லையாம்! இந்த குகை சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது.

பிற்காலத்தில், குடிசை இருந்த இடத்தில் திருக்கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அருளும் வேலாயுத ஸ்வாமியைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அழகு! வேறொரு தனிச் சந்நிதியில் வள்ளிதெய்வானை தேவியருடன் அருளும் முருகனையும் தரிசிக்கலாம். மேலும், காசி விஸ்வநாதர், துர்கை  ஆகியோருக்கும் இங்கு தனிச் சந்நிதிகள் உள்ளன.

திருமணத் தடை, குழந்தைப்பேறு இல்லாமை, தீராத மனக் கவலை ஆகிய பிரச்னைகள் நீங்கி வாழ்க்கை சிறக்கவும், தொழில் வளம் பெறவும் விரும்புவோர் இந்த ஆலயத்துக்கு வந்து வேலாயுத ஸ்வாமியைத் தரிசித்துச் சென்றால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து சிறிது நேரம் முருகனை மனதில் இருத்தி தியானித்தால் போதும்; சகல கவலைகளும் குழப்பங்களும் சடுதியில் நீங்கிவிடும் என்கிறார்கள் பக்தர்கள். பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை ஆகிய திரு நாட்கள் இங்கே வெகுவிசேஷம். அதேபோல், பெளர்ணமியில் கிரிவலம் வந்து வணங்குவதும் விசேஷ வழிபாடாகும்.

இந்த ஆலயத்தில் இருக்கும் தீர்த்தக் கிணற்றின் நீரானது, புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த மலைக்கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் பவானி கூடுதுறையில் சங்கமிக்கும் அமிர்த நதி, காவிரி, பவானி ஆகிய மூன்று நதி தீர்த்தங்களும் இந்தக் கிணற்றில் ஊறுவதாகவும், அதனால் இது புனிதத்தன்மை மிக்கதாகவும் கருதப்படுகிறது. இந்த நீரைக் கொண்டுதான் தினமும் வேலாயுத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாமும், நமது வெவ்வினைகள் யாவும் தீர, வட்டமலை சென்று வேலாயுத ஸ்வாமியை வழிபட்டு வருவோம்!

படங்கள்: அ.நவின்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick